இயக்குனர் யுரேகாவுக்கு கிறிஸ்துவ அமைப்பின் செவாலியர் விருது!

திரைப்பட இயக்குனரும், இலக்கியவாதியும், ஊடகவியலாளருமான யுரேகாவுக்கு, ஆர்தடாக்ஸ் தலைமை திருச்சபையை சார்ந்த நைட் ஆஃப் மால்டா ஜெருசலேம் என்ற கிறிஸ்துவ அமைப்பு நைட் ஆஃப் கிரேஸ் செவாலியர் என்ற விருது வழங்கி கவுரவித்துள்ளது.

‘மதுரை சம்பவம்’, ‘தொப்பி’, ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ போன்ற திரைப்படங்களை இயக்கியவர் யுரேகா. ஜோசப் மோகன் குமார் என்ற இயற்பெயரை கொண்ட இவர், 32 வருடங்களாக இலக்கிய மற்றும் ஊடகப் பணிகளை செய்து வருகிறார்.

 1995ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 8-வது உலகத் தமிழ் மாநாட்டில், புதுக்கவிதைக்கான தமிழக அரசின் முதல் பரிசை பெற்றுள்ளார். இவரது கவிதைகள் மற்றும் பிற நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, இந்தியா மற்றும் பல்வேறு உலக நாடுகளில் உள்ள இறையியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இறையியல் கல்லூரிகள் இவரை பாராட்டி கவுரவ பேராசிரியராக நியமித்துள்ளன.

தற்போது இய்சு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பல்வேறு நவீன கோட்பாடுகளுடன் இவர் எழுதி, அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்காக, ஆர்தடாக்ஸ் தலைமை திருச்சபையை சார்ந்த நைட் ஆஃப் மால்டா ஜெருசலேம் என்ற கிறிஸ்தவ அமைப்பு, கடந்த 13ஆம் தேதி இவருக்கு நைட் ஆஃப் கிரேஸ் செவாலியர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியர் விருதும், நைட் ஆஃப் மால்டா ஜெருசலேம் வழங்கும் செவாலியர்  விருதும் வேறு வேறு என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்த கிறிஸ்துவ அமைப்பின் செவாலியர் விருது பெறும் முதல் தமிழர் மற்றும் பத்திரிகையாளர் இவர் தான் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.

பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியர் விருதுக்கு முன்பாகவே கி.பி.1048-லிருந்து சுமார்  960 வருடங்களுக்கு மேலாக நைட் ஆஃப் மால்டா ஜெருசலேம் இந்த செவாலியர் விருது வழங்கி வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக இந்த விருதை பெறும் இயக்குனர் யுரேகா என்ற ஜோசப் மோகன் குமார், தனது இலக்கிய பணிக்காக 6 பல்வேறு பல்கலைக்கழகங்களில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.