“கட் சொன்ன பிறகும் நாயகியுடன் ரொமான்ஸை தொடர்ந்தார் விஜய் ஆண்டனி!” – கிருத்திகா உதயநிதி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்  ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா உள்ளிட்டோர் நடிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. வருகிற (மே) 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு நாயகன் விஜய் ஆண்டனி பேசுகையில், “கல்லூரியில் கிருத்திகா உதயநிதி என்னுடைய ஜூனியர். இன்றும் மிகவும் எளிமையானவர்.  எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை. அந்த கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர் தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குனர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராக தான்  இருக்கிறார்கள்.

நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்குப் பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார். ‘திமிர் பிடிச்சவன்’ படத்தை அடுத்து ‘கொலைகாரன்’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இவர்கள் எல்லோரும் நிச்சயம் இருப்பார்கள்.

நான் நடித்த ஒவ்வொரு ப்டத்தின் பிரஸ் மீட்டிலும், ‘நீங்க ஏன் ஹீரோயினை தொடாம ரொமான்ஸ் பண்றீங்க? ஏன் கட்டிப் பிடிக்க மாட்டேங்குறீங்க? என்று பத்திரிகையாளர்களாகிய நீங்கள் ரொம்ப கவலையோடு கேட்பீர்கள். உங்கள் கவலையை போக்குவது என முடிவு செய்து ‘காளி’ படத்தில் கட்டிப்பிடித்து ரொம்ப நெருக்கமாக ரொமான்ஸ் பண்ணியிருக்கிறேன்” என்றார் விஜய் ஆண்டனி.

உடனே எழுந்து மைக்கைப் பிடித்த இயக்குனர் கிருத்திகா உதயநிதி, “ஆமாங்க. ஷாட் முடிந்து நான் ‘கட்’ சொன்ன பிறகும் விஜய் ஆண்டனி நிறுத்தாமல் நாயகியுடன் ரொமான்ஸிலேயே இருந்தார்” என்று சொல்ல, அரங்கமே ஆரவாரத்தில் அதிர்ந்தது.

இந்நிகழ்வில் நாயகி ஷில்பா மஞ்சுநாத் பேசுகையில், “தமிழில் என்னுடைய முதல் படம் இது, முதல் மேடை இது. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்தபோது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருபபார் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார்” என்றார்.

நாயகி சுனைன்னா பேசுகையில், “ஷில்பாவும், அம்ரிதாவும் இங்கு பேசுவதற்கு படபடப்பாக இருப்பதாகக் கூறினார்கள். நான் என்னுடைய ‘வம்சம்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன். அதை ஒப்பிடும்போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாக தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்பு தான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனியை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன். இப்போது சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார்” என்றார்.

இந்த சந்திப்பில் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நடிகை அம்ரிதா, ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன், கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ், ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழணங்கு உள்ளிட்டோரும் கலந்துகொண்டு பேசினார்கள்.

k8