தந்தை – மகன் அன்பை சொல்லும் படம் ‘ஆண்டனி’

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஆண்டனி’. இந்த படத்தில் ‘சண்டக்கோழி’ புகழ் லால், நிஷாந்த், வைசாலி, ரேகா, சம்பத் ராம், ‘வெப்பம்’ ராஜா.சேரன் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 19 வயது இளம்பெண் ஷிவாத்மிக்கா இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகை,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் .

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில் “இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள். படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது. படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

ஜெயசித்ரா பேசுகையில், படக்குழுவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு குறுகிய காலத்தில் இவ்வளவு அருமையான படத்தினை கொடுத்து உள்ளனர். இந்த படம் மாபெரும் வெற்றியடைய  வேண்டும். தயாரிப்பாளர் ராஜாவுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

‘வெப்பம்’ ராஜா பேசுகையில், ”படத்தில் உள்ள அனைவரும் மிக சிறப்பாக அவர்களது வேலைகளை செய்து உள்ளனர் .இயக்குனர் குட்டி குமார் குறுகிய காலத்தில் படத்தினை முடித்து உள்ளார். 19 வயது  உடைய ஷிவாத்மிக்கா அருமையாக இசை அமைத்து உள்ளார். ஒளிப்பதிவாளர் பாலாஜி ரொம்பவே சூப்பரா பண்ணியிருக்கார். பி.சி.ஸ்ரீராம் போல் இவரும் மிக பெரிய ஒளிப்பதிவாளராக வருவார். படத்தின் நாயகன் நிஷாந்த் பட்ட கஷ்டங்கள் அதிகம். கண்டிப்பாக அவர் மிக பெரிய நடிகராக வருவார். ஒரு நடிகன் 10 படங்கள் நடித்தால் தான் ‘ஆண்டனி’ படத்தில் இவர் நடித்துள்ள கதாபாத்திரத்தை பண்ண முடியும். மிகச் சிறப்பாக செய்துள்ளார்” என்றார்.

நடிகை ரேகா பேசுகையில் “மிகவும் சிரமப்பட்டு அருமையான படத்தினை கொடுத்திருக்கிறார்கள். படம் மிகப் பெரிய வெற்றியடைய வேண்டும். ஊடக நண்பர்களின் பங்களிப்பு எங்களுக்கு தேவை” என்றார்.

இயக்குனர் குட்டி குமார் பேசுகையில், ”இந்த படத்தினை உருவாக்க காரணமாக இருந்த ஆண்டனி ப்ரொடக்ஷ்ன்ஸ் நிறுவனத்திற்கு மிக பெரிய நன்றி. இந்த படத்தில் லால் அவர்களை நிஷாந்த் அப்பாவாக நடிக்க வைத்துள்ளோம். ஒரு தந்தை மகன் பற்றிய அன்பை இந்த படத்தில் காட்டி இருக்கிறோம். இரண்டு வித்யாசமான படக்காட்சிகள் இந்த படத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பூமிக்கு மேல் மற்றும் பூமிக்கு கீழ் என காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளது. உயிரை பணயம் வைத்து நடித்து இருக்கிறார் நடிகர் நிஷாந்த். மேலும், படத்தில் நடித்த அனைவரும் அருமையான நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். ஷிவாத்மிக்காவிடம் நல்ல திறமை உள்ளது. ரொம்ப நல்லாவே மியூசிக் பண்ணிருக்காங்க” என்றார்.

இசையமைப்பாளர் ஷிவாத்மிக்கா பேசுகையில் “படத்தில் வாய்ப்பு தந்த குட்டி குமாருக்கு மிகப் பெரிய நன்றி. இந்த படத்துல நாங்கள் அனைவரும் அறிமுக கலைஞர்களாக பணியாற்றி உள்ளோம். வேறுபட்ட இசையை இந்த படத்தில் தந்துள்ளேன். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

 

Read previous post:
0a1c
Kaali – Sneak Peek: First 7 Minutes Video

Kaali - Sneak Peek: First 7 Minutes Video

Close