ஜோதிமணி மீதான வக்கிர தாக்குதல்: ஆபாசம் தான் ஆயுதமா?

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணிக்கு எதிராக ஓர் ஆபாச வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு அதில் வக்கிர கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.

இதைக் கண்டு துவண்டு போகாமல் பொதுவெளியில் அதைப் பகிரங்கப்படுத்தி பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டமாக முன்னெடுத்திருக்கிறார் ஜோதிமணி.

ஜோதிமணி தமிழக காங்கிரஸின் முக்கிய முகங்களில் ஒருவர். அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பணியாற்றியவர். தன்னுடைய 22-வது வயதில் ஊராட்சி ஒன்றியக்குழு செயலர் ஆனவர். தீண்டாமைக்கு எதிராகத் தொடர்ந்து குரல்கொடுக்கும் போராளி.

இருபது ஆண்டுகளாகப் பொதுவாழ்வில் இருப்பவர். எந்த அரசியல் பின்புலமும் இல்லாத சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். எழுத்தாளர். சிறந்த சிறுகதைக்கான இலக்கிய சிந்தனை விருது பெற்றவர். பண மதிப்பு நீக்க நடவடிக்கை, சகிப்புத்தன்மை, காஷ்மீர் தாக்குதல் என மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் ஜோதிமணிக்கு எதிராக சிலர் ஒன்றிணைந்து ஆபாச வாட்ஸ் அப் குழு ஒன்றைத் தொடங்கி, அவர் குறித்த வக்கிரக் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். அந்தக் குழுவில் ஜோதிமணியின் எண்ணையும் இணைத்துள்ளனர். இதைக்கண்டு துவண்டு போகாமல் பொதுவெளியில் அவற்றைப் பகிரங்கப்படுத்தி பெண்கள் மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டமாக அதை முன்னெடுத்திருக்கிறார் ஜோதிமணி.

தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் சமூக ஊடகங்களில் #StandwithJothimani #StandwithHumanity என்ற ஹேஷ்டேகுகளில் ஜோதிமணிக்கு ஆதரவாகத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.

ஆபாசத்தையே ஆயுதமாக்கியவர்களிடம் கேட்க என்னிடமும் சில கேள்விகள் இருக்கின்றன.

* அரசியல் ரீதியாக எதிர்க்க முடியாதவர்களை உடலியல் ரீதியாக தாக்குவது ஏன்?

* ஓர் ஆணைத்தாக்க முற்படும்போது அவனின் தாய், உடன்பிறந்த சகோதரிகளைப் பற்றியும், பெண்ணை அவதூறுக்கு உள்ளாக்க நினைக்கும்போது நேரடியாகவே அவளின் உடலின்மீதும் வக்கிரக் கணைகள் வீசப்படுவது ஏன்?

* ஜோதிமணியின் கொள்கைகள், கருத்துகளில் முரண்பாடுகள் இருந்தால் கருத்துகள் மூலம் அவருக்கு தீவிர எதிர்ப்பைக் காட்டுங்கள். ஆனால் அவரை ஆபாச சொற்கள் கொண்டு அவதூறு செய்யும் உரிமையை உங்களுக்கு யார் அளித்தார்கள்?

* ஒரு பெண்ணை சக மனுஷியாகக்கூட மதிக்கத் தெரியாதவர்களால் எப்படி நம் தேசத்தை பாரதத் தாயாகப் பார்க்க முடிகிறது?

* அந்தக் குழுவில் ஜோதிமணியையே இணைத்து பதிவிடவே முடியாத ஆபாச கருத்துகளை பகிர்ந்த உங்களால், அதே குழுவில் உங்கள் குடும்பப் பெண்களை இணைக்க முடியுமா?

* உங்களின் அந்தக் குரூர முகத்தை உங்களின் பெற்றோரிடம் காட்ட தைரியம் உள்ளதா?

* சக கட்சித் தோழர்கள், பெண் தலைவர்கள் இந்த விவகாரத்தில் மெளனம் காப்பது ஏன்?

இந்த சம்பவம் குறித்து ஜோதிமணி வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு

ஊடகங்கள், பொதுமக்களின் பேராதரவுக்கு மனம் நெகிழ்ந்த நன்றிகள். இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வலிமையை நீங்களே தருகிறீர்கள்.

என்போன்ற பொதுவெளியில் செயல்படும், தனது கருத்துக்களை பதிவுசெய்யும் உரிமையை கைக்கொள்ளும் பெண்களை இப்படி ஆபாசமாக அவதூறு செய்வது அச்சுறுத்துவது தொடர்ந்து நடந்து வருகிறது. பல பெண்கள் இதை எதிர்கொள்ள முடியாமல் முடங்கிப் போகிறார்கள். நாளையும் நமது சகோதரிகளுக்கும், தோழிகளுக்கும் இது நடக்கும். அவர்களுக்காகவே இன்று இந்த அவதூறுகளை பொதுவெளியில் எதிர்கொள்ள முடிவுசெய்தேன்.

இது எனது தனிப்பட்ட போராட்டம் அல்ல, நமது சமூகத்திற்கான போராட்டம். நமது பெண்களை அவதூறுகளிலிருந்தும், நமது இளைஞர்களை இம்மாதிரியான மனநோயிலிருந்தும் , அதற்கு காரணமான சித்தாந்தத்திடமிருந்தும் மீட்பதற்கான போராட்டம், நீங்களும் இந்தப் போராட்டத்தில் இணையுங்கள். பகிருங்கள். நன்றி!

இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

க.சே.ரமணி பிரபா தேவி

Courtesy: tamil.thehindu.com