ஜெயில் – விமர்சனம்

நடிப்பு: ஜி.வி.பிரகாஷ் குமார், நந்தன் ராம், பசங்க பாண்டி,  அபர்ணதி, ரவி மரியா, ராதிகா சரத்குமார்

இயக்கம்: வசந்தபாலன்

 தயாரிப்பு: கிரிகேஷ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன்

இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்

ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா

இயக்குநர் வசந்தபாலனுக்கு பேரும் புகழும் வாங்கிக்கொடுத்த படங்கள் அவர் இயக்கிய ‘வெயில்’, ‘அங்காடி தெரு’. இந்த பட்டியலில் இப்போது இணைந்திருப்பது ‘ஜெயில்’.

செல்போனை வழிப்பறி செய்வது போன்ற சிறுசிறு குற்றங்களில் ஈடுபடுபவன் இளைஞன் கர்ணா (ஜி.வி.பிரகாஷ் குமார்). சட்டத்துக்கு விரோதமாக கஞ்சாப்பொட்டலம் விற்பவன் இளைஞன் ராக்கி (நந்தன் ராம்). சிறுவனாக இருக்கும்போது சாக்லேட் திருடியதற்காக சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டு, தண்டனைக்காலம் முடிந்தபின்னர் விடுவிக்கப்படுபவன் கலை (பசங்க பாண்டி). இந்த மூவரும் நண்பர்கள். சென்னை மாநகருக்கு சற்று தொலைவில், விளிம்புநிலை மக்களுக்காகக் கட்டப்பட்ட ‘காவேரி நகர்’ என்ற அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வசிப்பவர்கள்.

கலை நல்லவனாக சராசரி வாழ்க்கை வாழ விரும்புகிறான். ஆனால், அவன் வசிக்கும் காவேரி நகர் ‘குற்றவாளிகளின் உறைவிடம்’ என சென்னை மாநகரவாசிகளால் அருவருப்புடன் கருதப்படுவதால், அவனுக்கு வேலை கொடுக்க மறுக்கிறார்கள். இதனால், தான் சைதாப்பேட்டையில் வசிப்பதாக பொய் சொல்லி, பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலையில் சேருகிறான். எனினும், ஏரியா போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் (ரவி மரியா) மூலம் உண்மை தெரியவர, அந்த வேலையும் பறிபோய் விடுகிறது.

காவேரி நகர் இளைஞர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு வரும் இன்ஸ்பெக்டர்  பெருமாள் கொடுக்கும் ஒரு வேலையைச் செய்கிறான் ராக்கி. இதனால் ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். அதனைத் தொடர்ந்து மூன்று நண்பர்களின் வாழ்க்கையும் பரிதாபகரமாக மாறிவிடுகிறது. அந்த மாற்றத்தையும், அதன் விளைவுகளையும் சொல்லுகிறது மீதிக்கதை.

0a1b

படத்தின் தொடக்கத்தில் சென்னையின் பூர்வகுடிகளின் இடப்பெயர்வு குறித்தும் அதனால் அவர்கள் அடையும் பாதிப்பு குறித்தும் நமக்கு வாய்ஸ் ஓவரில் விளக்கப்படுகிறது. படம் இதைப் பற்றித்தான் பேசப்போகிறது என்று நாம் எதிர்பார்த்து உட்கார்ந்தால் அடுத்தடுத்த காட்சிகளிலேயே நமக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஏறக்குறைய இடைவேளைக்குச் சற்று முன்னால் வரை அம்மா சென்டிமென்ட், நண்பன் செண்டிமென்ட், அக்கா செண்டிமென்ட் காட்சிகளால் முதல் பாதி நிரம்பி வழிகிறது. இடையிடையே வரும் ஜிவி.பிரகாஷ் – அபர்ணதி காதல் காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படி இயல்பாக இருக்கின்றன.

இரண்டாம் பாதியில் தொடங்கும் கதையாவது விறுவிறுப்பாகச் செல்கிறதா என்றால் அதிலும் ஏமாற்றமே. எங்கெங்கோ சுற்றி ஏதேதோ செய்து கடமைக்கு க்ளைமாக்ஸை முடித்தது போல இருக்கிறது.

படத்தின் பெரும்பலம் நாயகன் ஜி.வி.பிரகாஷ். இந்த படத்தில் அவர் ஒரு முழுமையான நடிகராகத் தேறியிருக்கிறார். கோபம், அழுகை, காதல், நகைச்சுவை என படம் முழுக்க ஸ்கோர் செய்து அப்ளாஸ் பெறுகிறார். உயிரைக் கொடுத்து நடித்து தன் பாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

நாயகி ரோசாமலராக அபர்ணதி. படத்தில் சொல்லிக் கொள்ளும்படி பெரிய வேலை எதுவும் இல்லையென்றாலும் தன்னுடைய இயல்பான, குறிப்பிடத்தக்க நடிப்பால் கவர்கிறார்.

நாயகனின் அம்மாவாக வரும் ராதிகா சரத்குமார், கொடூர போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ரவிமரியா, நாயகனின் நண்பர்களாக வரும் நந்தன் ராம் மற்றும் பசங்க பாண்டி உள்ளிட்டோர் நடிப்பில் குறைசொல்ல முடியாத அளவுக்கு தங்கள் நடிப்பை வழங்கியுள்ளனர்.

படம் நடக்கும் கதைக்களத்துக்கு ஏற்ற இயல்பான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார் கணேஷ் சந்திரா. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் குறையொன்றும் இல்லை. பாடல்களும் கேட்கும்படி இருக்கின்றன. அன்பறிவின் சண்டைப் பயிற்சியில் சண்டைக் காட்சிகள் நேர்த்தியுடன் படமாக்கப்பட்டுள்ளன.

மறுகுடியேற்றம் செய்யப்பட்ட சென்னை மாநகரின் பூர்வகுடிகளின் வலிகளையும், வேதனைகளையும் படமாக சொல்ல முயன்றதற்காக இயக்குனர் வசந்தபாலனை பாராட்டலாம்.

’ஜெயில்’ – பார்க்கலாம்!