“தீய சக்திகளின் பிடியில் ஜெ.தீபா”: கணவர் மாதவன் குற்றச்சாட்டு!

குற்றவாளி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, கடந்த சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை தொடங்கினார். அவருக்கு பக்கப்பலமாக அவருடைய கணவர் மாதவன் இருந்து வந்தார்.

கடந்த சில தினங்களாக ஜெ.தீபாவுக்கும், அவருடைய கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்து ஜெ.தீபாவிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று (வெள்ளி) இரவு ஜெ.தீபாவின் கணவர் மாதவன் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தார். சமாதியில் மாலை வைத்து அஞ்சலி செலுத்திய பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜெயலலிதா சமாதிக்கு வந்த காரணம் என்ன?

பதில்:- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் தீயசக்திகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது. தீபாவால் தனித்து செயல்பட முடியவில்லை. நான் தனிக்கட்சி தொடங்க இருக்கிறேன். அதற்காக ஜெயலலிதா சமாதிக்கு வந்து இருக்கிறேன்.

கேள்வி:- தீயசக்தி என்று சொல்கிறீர்கள்? யார் அந்த தீயசக்தி? தி.மு.க.வா?

பதில்:- தி.மு.க. இல்லை. பேரவையில் தீயசக்தியின் செயல்பாடு அதிகம் இருக்கிறது. அவர்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை. நேரம் வரும்போது சொல்வேன். எனக்கு மிரட்டலும் அதிகம் வருகிறது.

கேள்வி:- இந்த திடீர் முடிவை எடுப்பதற்கான காரணம் என்ன?

பதில்:- இது தொண்டர்களின் முடிவு. அவர்களுடைய கருத்துகளை கேட்டு தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன்.

கேள்வி:- நீங்கள் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்ததாக தகவல் வெளியானதே?

பதில்:- நான் யாரையும் சந்திக்கவில்லை.

கேள்வி:- நீங்கள் புதிதாக தொடங்க இருக்கும் கட்சியின் பெயர் என்ன?

பதில்:- அதை ஓரிரு நாட்களில் அறிவிப்பேன்.

கேள்வி:- ஆர்.கே.நகர் தொகுதியில் நீங்கள் போட்டியிடுவீர்களா?

பதில்:- தொண்டர்கள், பொதுமக்களின் கருத்துகளை கேட்டு அறிவிப்பேன்.

கேள்வி:- உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாட்டால் தான் நீங்கள் புது கட்சி தொடங்குகிறீர்களா?

பதில்:- எங்களுக்குள் எந்த முரண்பாடும் இல்லை. தீபா பேரவை நடத்துகிறார். நான் கட்சி தொடங்குகிறேன்.

கேள்வி:- நீங்கள் கட்சி தொடங்க இருப்பது பற்றி உங்கள் மனைவி தீபாவிடம் கூறினீர்களா?

பதில்:- தீபாவிடம் நான் பேசினேன். அவர் எதுவும் பதில் தெரிவிக்கவில்லை. நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் தான் இருப்போம்.

கேள்வி:- உங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமா?

பதில்:- கடந்த 3 மாதங்களாக நான் தான் மக்களை சந்தித்து பேசி வந்தேன். அவர்களுடைய ஆதரவு என் பக்கம் இருக்கும்.

கேள்வி:- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் உங்கள் செயல்பாடு இருக்குமா?

பதில்:- என்னுடைய செயல்பாடு இல்லை.

கேள்வி:- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை நிர்வாகிகள் பட்டியலில் குளறுபடி ஏற்பட்டது. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அதைப் பற்றி பேச வேண்டாம். நான் தொடங்கும் கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை நேர்காணல் நடத்தி வெளியிடுவேன்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.