ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர் கங்கை அமரன்!

சென்னை ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுகிறார். இதற்கான அறிவிப்பை பாஜக மத்திய தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை தேர்வு செய்ய கடந்த சில நாட்களாக நடிகை கவுதமி உள்ளிட்ட பலரிடம் பாஜக தமிழக தலைவர்கள் பேச்சு நடத்தினர்.

வேட்புமனு தாக்கல் ஏற்கெனவே தொடங்கியுள்ள நிலையில் பாஜக வேட்பாளராக பிரபரல திரைப்பட இசையமைப்பாளர் கங்கை அமரன் போட்டியிடுவார் என பாஜக மத்திய தேர்தல் குழு செயலர் ஜே.பி.நட்டா அறிவித்தார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தார். ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்.

ஆர்.கே.நகரில் டிடிவி தினகரன் (அதிமுக), மருது கணேஷ் (திமுக), இ.மதுசூதனன் (ஓபிஎஸ் அணி), தீபா, மதிவாணன் (தேமுதிக) என முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பாஜகவும் வேட்பாளரை அறிவித்துள்ளதால் ஆர்.கே.நகரில் 6 முனை போட்டி உறுதியாகியுள்ளது.