தமிழக மீனவர்கள் மீது ‘பாரத திருநாட்டு’ கடற்படை துப்பாக்கி சூடு: இருவர் படுகாயம்!

நேற்று (திங்கள்கிழமை) அதிகாலை, ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில் பாம்பனைச் சேர்ந்த ஜெபமாலை என்பவருக்குச் சொந்தமான படகில், பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன், சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன் ஆகிய 6 மீனவர்கள் ராமேஸ்வரத்திற்கும் தனுஷ்கோடிக்கும் நடுவே இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

மதியம் 3 மணியளவில் அந்தப் பகுதியில் ரோந்து வந்த ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படையினர், விசைப் படகினை சோதனை செய்ய உள்ளதாக ஒலிப்பெருக்கியில் அறிவித்தனர். ஆனால் விசைப் படகை நிறுத்தாததால் ‘பாரத திருநாட்டு’ கடலோரக் காவல் படையினர், அப்படகிலிருந்த மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 மீனவர்கள் பலத்த காயம் அடைந்தார்கள்.

இது பற்றிய செய்தி தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பரவியதால், ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் உறவினர்கள் திரளத் தொடங்கினர். இதனால் மீனவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

நடுக்கடலில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை ராமேஸ்வரம் கரைக்குத் திரும்பினர். அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாங்கள் ராமேஸ்வரத்திலிருந்து 7 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்தியக் கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது ரோந்து வந்த கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான ‘ராணி அபாக்கா’ என்ற கப்பலில் இருந்த கடலோரக் காவல் படை வீரர்கள், எங்கள் படகை நிறுத்துமாறு ஒலிப்பெருக்கியில் சொன்னார்கள். நாங்கள் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுத்துக் கொண்டிருந்ததால், எங்கள படகை உடனே நிறுத்த முடியவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த கடலோரக் காவல் படையினர் எங்கள் மீது 10 ரவுண்ட் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கிச் சூட்டில் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸின் முழங்கையில் குண்டு பாய்ந்து வெளியேறியது. ஜான்சன் என்ற மீனவரின் கைகளிலும் குண்டு காயம் ஏற்பட்டது.

உடனே கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோரக் காவல் படை வீரர்கள் எங்களின் படகில் ஏறி, படகில் எங்களை கட்டிப் போட்டார்கள். ‘தொலைக்காட்சிகளுக்கு ஏன் பேட்டி அளித்தீர்கள்’ என்று கேட்டு அடித்தார்கள். நாங்கள் யாரும் பேட்டி கொடுக்கவில்லை என்று தமிழில் பதில் சொன்னோம். ‘தமிழில் எங்களிடம் பேசக் கூடாது. இந்தியில் தான் பேச வேண்டும்’ என்றும் அடித்தார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

பின்னர் காயம் அடைந்த மீனவர்கள் பிச்சை ஆரோக்கியதாஸ், ஜான்சன் ஆகிய இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து செவ்வாய்கிழமை மதியம் ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதளம் அருகே விசைப்படகு மீனவ சங்க பிரநிதிகளின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்தத் துப்பாக்கிச் சூட்டினைக் கண்டித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் நாளை (புதன்கிழமை) அடையாள வேலை நிறுத்தப் போராட்டமும், வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.

இதுநாள் வரையிலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வந்துள்ள நிலையில், தாய்நாட்டு மீனவர்கள் மீதே ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் தமிழக மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தை ‘பாரத திருநாட்டு’ கடலோர காவல் படையினர் மறுத்துள்ள நிலையில், தாக்குதலுக்கு உள்ளான படகிலிருந்து துப்பாக்கிக் குண்டினை மீனவர்கள் காவல்துறையினரிடம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Read previous post:
0a1e
உடுமலை சங்கர் கொலை வழக்கில் அடுத்த மாதம் 12ஆம் தேதி தீர்ப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மகன் சங்கர் (வயது 22). என்ஜினீயரிங் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். இவரும் திண்டுக்கல்

Close