பகுத்தறிவுக் கழகங்கள் நாடு பூராவும் தோன்ற வேண்டும்!
உலகில் மனிதன் ஒருவனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. மற்ற எந்த ஜீவராசிகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. மனிதனைத் தவிர, உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் 1,000, 2,000 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தனவோ, அதுபோல்தான் இன்றும் இருக்கின்றன. மனிதன் ஒருவன்தான் மாற்றத்திற்கு, சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு வந்திருக்கின்றான்; மாறிக்கொண்டு வருகிறான்.
நம் மக்களுக்கு இன்றைக்கு ஏற்பட்டு வருகிற இந்தப் பகுத்தறிவு 1,000, 2,000 வருடங்களுக்கு முன் ஏற்பட்டிருந்தால் இந்தக் கடவுள்கள், தெய்வீக சக்தியுள்ளவர்கள், அவதாரங்கள் எதுவும் தோன்றியிருக்க முடியாது என்பதோடு, நாம் இப்போது இழிமக்களாகவும் இருக்க மாட்டோம். ஒருவன் இழிமகன் இல்லை என்றால் பகுத்தறிவுவாதியாக இருந்தால்தான் முடியும். கடவுளையும், மதத்தையும் நம்பிக் கொண்டு நெற்றிக் குறி இட்டுக் கொண்டிருப்பவன் பகுத்தறிவுவாதியாக மாட்டான். ஆராய்ச்சிக்கும், விவகாரத்திற்கும், அறிவிற்கும் பொருந்தாதவனே.
இன்றைக்கு ஒருவன் பகுத்தறிவுவாதியாகிறான் என்றால் நாளைக்கு அவன் கோயிலுக்குப் போக மாட்டான். கல்லை, சாணியைக் கடவுளாகக் கருத மாட்டான், தொழ மாட்டான்.
இந்த 100, 150 வருடத்தில் பகுத்தறிவு வந்ததன் காரணமாக எவ்வளவு விஞ்ஞான அதிசய அற்புதங்களை அனுபவிக்கின்றோம். நமக்குப் பகுத்தறிவு வரவில்லையென்றாலும் மற்றவனுக்கு வந்த பகுத்தறிவால் நாம் நெருப்புக் குச்சி முதல் ஆகாய விமானம் வரை யாவற்றையும் உபயோகிக்கின்றோமா இல்லையா?
இங்குக் கடவுளையும், மதத்தையும் ஏற்படுத்திய அயோக்கியர்கள், மனிதன் சிந்திக்கக் கூடாது, அறிவுப்படி நடக்கக் கூடாது, அறிவைக் கொண்டு சிந்திப்பது பாவம் என்று சொல்லித் தடுத்து விட்டார்கள். அதன் காரணமாகத்தான் 100க்கு 97 பேராக இருக்கிறவன் இன்றைக்கும் இழிமகனாக, சூத்திரனாக இருக்கிறான். இவ்வளவுக்கும் காரணம், சிந்திக்காதது – பகுத்தறிவு பெறாததாலேயே ஆகும்.
இன்று உலகில் பகுதிக்கு மேற்பட்ட மக்களுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. நான் 1927இல் பகுத்தறிவுக் கழகம் ஏற்படுத்தினேன். அப்போதே உலகத்தின் பல பகுதிகளில் இதுபோன்ற கழகங்கள் இருந்தன. அமெரிக்காவில் மட்டும் 7, 8 சங்கங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் உறுப்பினர்களாக இருந்தனர்; இன்றும் இருக்கின்றனர்.
நம் மக்களுக்கு இன உணர்ச்சி முற்றிய பின் தான் இன்று பகுத்தறிவு உணர்ச்சி வருகிறது. பகுத்தறிவு வளர்ந்தால் வளர்ச்சி நிலை ஏற்படும். மடமை, மூடநம்பிக்கை யாவும் ஒழியும். முயற்சி நாசம், எண்ணம் நாசம், பண நாசம் யாவும் ஒழிந்து வளர்ச்சி ஏற்படும். இழிவு நீக்கப்படும்.
இந்தக் கடவுள்களால் மக்களின் பணம் எவ்வளவு நாசமாகின்றது? நான்கு அயோக்கியனும், பார்ப்பானும் வயிறு வளர்ப்பதைத் தவிர, அதனால் மக்களுக்கு என்ன பயன்? பணம் நாசமாவது ஒருபுறமிருக்கட்டும். மனிதனின் அறிவுமல்லவா நாசமாக்கப் படுகிறது. இதனால் மானம் – அறிவு _ பொருள் யாவும் நாசமாகின்றன என்பதைத் தவிர, வேறு பலன் எதுவும் இல்லையே. மனிதன் பகுத்தறிவு இல்லாத காரணத்தால்தான் இந்த நாசம்.
பழக்கம் – வழக்கம் – உணர்ச்சி – மதம், அதற்குப் பின்தான் நாம் பகுத்தறிவை வைக்கின்றோம். நம் நாட்டில் கடவுளின் பேரால் பிழைக்க ஒரு கூட்டம் இருக்கிறது. பண்டார சன்னதி – பார்ப்பான், சங்கராச்சாரி போன்றவர்கள் கடவுள் பிரச்சாரம் செய்து மக்களை மடையர்களாக்கி இதன் மூலம் பலன் பெற்று வருகின்றனர். நம்மைத் தவிர, பகுத்தறிவை எடுத்துச் சொல்ல வேறு ஆளில்லையே!
இதுபோன்ற பகுத்தறிவுக் கழகங்கள் நாடு பூராவும் தோன்ற வேண்டும். மக்களுக்குப் பகுத்தறிவை ஏற்படுத்தப் பாடுபட வேண்டும்.
(28.3.1971 அன்று மதுரை நகர விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை)