எவனவன் – விமர்சனம்

விளையாட்டாக செல்போன் காமிரா மூலம் எடுக்கப்படும் அந்தரங்க வீடியோவால் ஏற்படும் விபரீத பிரச்சனைகளை எடுத்துச் சொல்லி எச்சரிக்க வந்திருக்கிற படம் தான் ‘எவனவன்’.

நாயகன் அகிலும், நாயகி நயனாவும் காதலர்கள். ஒருநாள் நயனா குளித்துக்கொண்டிருக்க, அதை அகில் தன் செல்போன் காமிராவில் படம் பிடிக்கிறார். இது தெரிந்து நயனா சீறுகிறார். உடனே, அவரது கண் எதிரில் அந்த ஆபாச வீடியோவை அகில் டெலிட் செய்கிறார். அதன்பிறகு, ரெக்கவர் சாஃப்ட்வேர் மூலம் அகில் அந்த வீடியோவை மீண்டும் தனது செல்போனில் பதிவு செய்துகொள்கிறார்.

அந்த செல்போனை அகில் ஒரு ஆட்டோ பயணத்தில் தவறவிட்டு விடுகிறார். அது யார் யாருக்கோ கைமாறி, கடைசியில், ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வடிவமைப்பாளராக பணிபுரியும் சரணிடம் சென்று சேருகிறது.

தொலைந்த செல்போனை மீட்கும் முயற்சியில் இறங்கும் அகிலுக்கு அது சரணிடம் இருப்பது தெரிய வருகிறது. செல்போனை திருப்பித் தர வேண்டும் என்றால், தான் சொல்லும் சில வேலைகளை அகில் செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறார் சரண்.

சரண் சொல்லும் அந்த வேலைகள் என்ன? அவற்றை அகில் செய்தாரா? செல்போனை மீட்டாரா? என்பது மீதிக்கதை.

நாயகன் அகிலும், நாயகி நயனாவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளாக வரும் வின்செண்ட் அசோகன், சோனியா அகர்வால் ஆகியோரின் பாத்திரப் படைப்பும், நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. டெல்லி கணேஷ், மீரா கிருஷ்ணன், சரண், சந்தோஷ், சாக்ஷி ஆகியோர் சிறுசிறு பாத்திரங்களில் வந்தாலும், பாத்திரம் உணர்ந்து அளவாய் நடித்திருக்கிறார்கள்.

ஜானகி ராமனின் மகனும், மோகமுள்’ படத்தை தயாரித்தவரும், ‘மெய்பொருள்’, ‘பனித்துளி’ ஆகிய படங்களை இயக்கியவருமான நட்டி குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார். காலத்துக்கு ஏற்ற ஒரு நல்ல கருத்தை சொல்ல முயற்சி செய்ததற்காக இயக்குனரை பாராட்டலாம்.

ஃபெடோ பேட்டின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. அருண் பிரசாத்தின் ஒளிப்பதிவு ஓ.கே. ரகம். படத் தொகுப்பில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

‘எவனவன்’ – பார்க்கலாம்!