தலைக்கூத்தல் – விமர்சனம்

நடிப்பு: சமுத்திரக்கனி, வசுந்தரா, கலைச்செல்வன், கதிர், கதானந்தி, ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி மற்றும் பலர்

இயக்கம்: ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்

ஒளிப்பதிவு: மார்ட்டின் டான்ராஜ்

இசை: கண்ணன் நாராயணன்

தயாரிப்பு:  ’ஒய் நாட்’ சசிகாந்த்

பத்திரிகை தொடர்பு: நிகில்

பண்டைக் காலத்தில் நடமாட்டம் அற்றுப்போய், மலஜலம் கழிப்பது, குளிப்பது, உணவு எடுத்துக்கொள்வது போன்ற தங்களுக்கான வேலைகளை தாங்களே செய்துகொள்ள இயலாத அளவுக்கு படுத்த படுக்கையாகி, பிறருக்கு சுமையாகிவிட்ட முதியவர்களை காட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவது, பெரிய மண்பாண்டம் (முதுமக்கள் தாழி) செய்து அதில் அவர்களைக் கிடத்தி மரணிக்குமாறு விட்டுவிடுவது போன்ற நடைமுறைகள் இருந்திருக்கின்றன. இவை இக்காலத்திற்கேற்ற மாற்றங்களுடன், மரணப் படுக்கையில் படுத்த படுக்கையாகிவிட்ட முதியவர்களுக்கு நிறைய இளநீர் குடிக்கக் கொடுத்து, உடல் குளிர எண்ணை தேய்த்து, குளிர்ந்த நீரால் தலைக்கு ஊற்றிக் குளிப்பாட்டி, ஜன்னி வரச் செய்து, மரணிக்கச் செய்கிறார்கள். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் செய்யப்படும் இந்த நடைமுறையை ‘தலைக்கூத்தல்’ என்கிறார்கள். தென் தமிழ்நாட்டில் இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்துவரும் இந்த நடைமுறையை மையமாகக் கொண்டு, ‘தலைக்கூத்தல்’ என்ற திரைப்படத்தை உணர்ச்சிக் காவியமாக படைத்தளித்திருக்கிறார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

0a1b

கதை கோவில்பட்டியில் நிகழ்வதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்டிடம் கட்டும் வேலை செய்யும்போது, மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து, அசைவின்றி படுத்த படுக்கையாகிவிட்ட பெரியவர் கலைச்செல்வனை அவரது மகன் சமுத்திரக்கனி கண்ணும் கருத்துமாக பார்த்து பராமரித்து வருகிறார். அப்பாவின் மலஜலத்தை அள்ளிப்போடுவது உள்ளிட்ட சகல காரியங்களையும் கவனிப்பதற்கே சமுத்திரக்கனியின் நேரம் சரியாக இருக்க, வேறு வழியில்லாமல் வருமானமுள்ள கட்டுமானப் பணியை விட்டுவிட்டு இரவு நேர காவலாளி வேலைக்குச் செல்கிறார். அந்த வருமானம் போதாத நிலையில் அவரது மனைவி வசுந்தரா தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு போக, அவர்களுக்குச் சொந்தமான பழைய வீட்டில் ஒரு பெண் குழந்தையுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் படும் சிரமத்தைப் பார்க்கும் உற்றாரும் உறவினர்களும், ‘தலைக்கூத்தல்’ மூலம் அப்பாவை மரணிக்கச் செய்துவிடுமாறு சமுத்திரக்கனியை வற்புறுத்துகிறார்கள். ஆனால் பாசமான மகனான சமுத்திரக்கனியோ இதற்கு இணங்காமல், இயற்கையாக வந்த உயிர் இயற்கையாகவேதான் பிரிய வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்கிறார். மனைவிக்குத் தெரியாமல் வீட்டு பத்திரத்தை அடகு வைத்து அப்பாவுக்காக செலவு செய்கிறார். சமுத்திரக்கனிக்கு கடன் கொடுத்தவர் வீட்டை விற்று பணத்தை எடுத்துக்கொள்ள திட்டமிடுகிறார். ஏற்கனவே அப்பாவை காரணம் காட்டி சமுத்திரக்கனியிடம் வம்பு இழுத்த வசுந்தரா கடன் வாங்கிய விஷயம் தெரிந்ததும் மேலும் சண்டை போடுகிறார். சமுத்திரக்கனியால் மனைவியை சமாதானப்படுத்தி குடும்பம் நடத்த முடிந்ததா? உயிர் ஊசலாடும் சமுத்திரக்கனியின் அப்பா ‘தலைக்கூத்தல்’ மரணத்திலிருந்து தப்பித்தாரா? என்பது ‘தலைக்கூத்தல்’ படத்தின் மீதிக்கதை.

பழனி என்ற கதாபாத்திரத்தில் பாசமுள்ள மகனாக வரும் சமுத்திரக்கனிக்கு தன் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படக்கூடிய வேடம். அதை அவரும் உணர்ந்து கதாபாத்திரமாக மாறி தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என்று சிறப்பாக நடித்து வியப்பில் ஆழ்த்துகிறார். தந்தைக்கு பாசமான மகனாக, மனைவி அவமானப்படுத்துவதை தாங்கும் அமைதியான கணவனாக, மகளை அரவணைக்கும் அன்பான தந்தையாக வாழ்ந்து விருதுக்குரிய நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் வசுந்தரா, யதார்த்தத்தை கண்முன் நிறுத்துகிறார். கணவனை அவசரப்பட்டு அடிப்பதும் பிறகு கையை பிசைந்து நிற்பதும் கணவனின் அடிக்கு பயந்து ஓடுவதும் ரகளை.

பிளாஷ்பேக்கில் வரும் கதிர் கெட்டப், ஹேர் ஸ்டைல், நடிப்பு என எல்லா விதத்திலும் ஆச்சரியப்படுத்துகிறார். அவருடைய காதலியாக வரும் கதானந்தி சிறிது நேரமே வந்தாலும் மனதில் ஒட்டிக் கொள்கிறார்.

ஆடுகளம் முருகதாஸ், வையாபுரி ஆகியோரின் வேடங்கள் கவனிக்க வைக்கிறது.

சமுத்திரக்கனியின் அப்பாவாக வரும் கலைச்செல்வன் படம் முழுக்க படுத்துக்கொண்டே மனதை உருக்குகிறார்.

மனதை வருடும் மென்மையான இசையை கொடுத்திருக்கிறார் இசை அமைப்பாளர் கண்ணன் நாராயணன்.

கிராமத்து அழகை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் மார்டின் டான் ராஜ்.

அடிதடி, பஞ்ச் வசனங்கள் இல்லாமல் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து மனதை தொடும் அழுத்தமான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.

‘தலைக்கூத்தல்’ – குடும்பத்தினருடன் பார்த்து நெகிழத்தக்க சிறந்தபடம்!