”இன்னும் 3 வாரத்தில் ஸ்டாலின் முதல்வர்; ராகுல் பிரதமர்”: துரைமுருகன் ஆருடம்!

சூலூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பொங்கலூர் பழனிச்சாமியை ஆதரித்து அக்கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் சூலூரில் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு தலைமை வகித்த இக்கூட்ட்த்தில் பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசியதாவது:-

மத்திய, மாநில ஆட்சிகளை ஒரே நேரத்தில் தூக்கி எறியும் சக்தியை கலைஞர் பெற்றிருந்தார். இப்போது தலைவர் இல்லாத நேரத்தில் யார் பிரதமர் என்பதை சொல்லும் சக்தியை தளபதி பிடித்துள்ளார். தளபதியின் வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக பார்க்கிறேன். கண்ணை மூடினால் கலைஞராக தோன்றுகிறார்.

கலைஞரிடத்தில் கற்ற வரம் தமிழகத்தில் தளபதிக்கு கிடைத்துள்ளது. தளபதி 50 ஆண்டுகள் ஆட்சி புரிவார். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 37 எம்.பி. தொகுதிகள் தளபதியின் கையில் வந்து விடும். ஒன்று அல்லது இரண்டில் தான் அ.தி.மு.க. வெற்றி பெறும்.

சட்டபேரவை இடைத்தேர்தலில் குறைந்தது 5 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் தான் தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க முடியும். ஆனால் அது முடியாது என்பதால் தான் மீண்டும் 3 எம்.எல்.ஏ.க்களை களை எடுக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சூலூரில் எப்படியும் ஜெயிக்க வேண்டும் என கோடிகளை இறக்கி உள்ளனர்.

கோவை மக்கள் பணத்திற்கு மோசம் போக மாட்டார்கள். தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 100 சதவீதம் வெற்றி பெறுகிறோம். சூலூரையும் ஜெயித்து காட்டுங்கள்.

உலகத்தில் மோடியை போல் வெறுப்பை பெற்ற பிரதமர் யாருமே கிடையாது. மீண்டும் பிரதமராக வர மோடிக்கு வாய்ப்பே இல்லை.

தமிழகத்தில் இன்னும் 3 வாரத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. ஸ்டாலின் முதல்வராக அமர்வார். ராகுல் பிரதமராக அமர்வார்.

இவ்வாறு அவர் பேசினார்.