தேவராட்டம் – விமர்சனம்

மதுரையில் கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் பெப்சி விஜயன், ஊரில் பெரிய ரவுடியாக வலம் வருகிறார். தவமிருந்து பெற்ற தனது மகன் மீது தீராத அன்பு கொண்டவர். தனது மகனுக்காக எதையும் செய்யத் துணிந்தவர். இந்த நிலையில், ஒரு பிரச்சனையில் வேல ராமமூர்த்தியை கொன்று விடுகிறார்.

வேல ராமமூர்த்திக்கு 6 மகள்கள், ஒரே மகன் தான் நாயகன் கவுதம் கார்த்திக். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து தனது அக்காள்களின் வளர்ப்பில் வளர்கிறார்.

அக்காள்கள் சேர்ந்து கவுதம் கார்த்திக்கை சட்டம் படிக்க வைக்கிறார்கள். தவறு என்று தோன்றினால் தட்டிக் கேட்கும் மனோபாவம் கொண்ட இவரது குணம் பிடித்துப்போக, வழக்கறிஞரான நாயகி மஞ்சிமாவுக்கு கவுதம் கார்த்திக் மீது காதல் வருகிறது. பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்த நிலையில், இளம்பெண் விஷயத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் பெப்சி விஜயனின் மகனுக்கும், கவுதம் கார்த்திக்குக்கும் மோதல் ஏற்படுகிறது. தனது மகன் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால் தானே களமிறங்கும் பெப்சி விஜயன், கவுதம் கார்த்திக்கின் குடும்பத்தையே அழித்துவிட எண்ணுகிறார்.

கடைசியில், பெப்சி விஜயனின் ரவுடித்தனத்துக்கு கவுதம் கார்த்திக் எப்படி முட்டுக்கட்டை போடுகிறார்? தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே தேவராட்டம் கதையின் அடுத்த பாதி.

இதுவரை பார்க்காத ஒரு துடிப்பான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார் கவுதம் கார்த்திக். மதுரை இளைஞனாக, தப்பு என்றால் தட்டிக் கேட்கும் மிடுக்கான தோற்றத்தில் வந்து கலக்குவதுடன், ஆட்டம், பாட்டம், சண்டை என ஒரு ரவுண்டு வந்திருக்கிறார். மஞ்சிமா மோகன் வழக்கறிஞர், காதல் என ரசிக்க வைக்கிறார். சூரி காமெடியில் சிரிக்க வைத்திருக்கிறார்.

போஸ் வெங்கட் பொறுமையின் உச்சமாகவும், வினோதினி அம்மாவான அக்காவாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தனக்கே உரிய பாணியில் பெப்சி விஜயன் வில்லத்தனத்தில் மிரட்ட, வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

\தென் மாவட்ட ஸ்டைலில் குடும்பம், உறவுகள், பாசம், கோபம் என அனைத்தையும் ஒருங்கே சேர்த்து தனக்கே உரிய பாணியில் இயக்கியிருக்கிறார் முத்தையா. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளும், பாசப் போராட்டங்களும் இடம்பெற்றிருக்கும் கதையில் மதுரை சாயலில் வரும் பாடல்கள் மண்வாசனையை கூட்ட, ஒரு சில பாடல்கள் படத்தின் போக்கிற்கு இடைஞ்சலாய் வருவது போல் தோன்றுகிறது. திரைக்கதை வேகமாக நகர்ந்தாலும், ரசனையை இன்னமும் கூட்டியிருக்கலாம். பெண்ணின் மீது கை வைத்தால், கருவறுக்க வேண்டும் என்பதை படம் பேசுகிறது.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் குத்தாட்டம் போட வைக்க, சக்தி சரவணனின் ஒளிப்பதிவு மதுரை மண்ணை கண்முன் நிறுத்துகின்றன.

மொத்தத்தில் `தேவராட்டம்’  – மண்வாசனை.