கருணாநிதி பங்கேற்காத திமுக பொதுக்குழு கூட்டம்: 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

கடந்த (டிசம்பர்) மாதம் 20ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு சிகிச்சை முடிந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.

அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியல் களம் பரபரப்பாகியுள்ள சூழலில் இன்று கூடிய திமுக பொதுக்குழுவில், கட்சியின் தலைவர் கருணாநிதி பங்கேற்கவில்லை. திமுக வரலாற்றில் கருணாநிதி பொதுக்குழுவில் கலந்து கொள்ளாதது இதுவே முதன்முறை.

கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கருணாநிதி பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத நிலையில், அவரது தலைமையில் தான் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தொண்டர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள் வருமாறு:

  1. 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என திடீரென அறிவித்து கோடிக்கணக்கான ஏழை – எளிய மக்கள் மீது பொருளாதாரப் போர் தொடுத்திருக்கும் மத்திய அரசின் நடவடிக்கையை இந்தப் பொதுக்குழு மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
  2. தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் இந்தப் பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
  3. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுக!
  4. தமிழக விவசாயிகளின் தணியாத துயரம்!
  5. மதுரவாயல் – சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்
  6. “நீட்” நுழைவுத் தேர்வை ரத்து செய்க!
  7. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை
  8. கச்சத் தீவு புனித அந்தோணியார் கோவில் வழிபாட்டிற்கு அனுமதி
  9. இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும்.
  10. சேலம் இரும்பாலையைத் தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடுக!
  11. கரும்பு விவசாயிகளுக்கு நியாயமான கொள்முதல் விலை!
  12. வர்தா புயல் நிவாரணம் வழங்குக!
  13. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் விரைவாக தேர்தல்களை நடத்தி, உள்ளாட்சி ஜனநாயகத்தைப் பாதுகாத்திட மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தப்படுகிறது.
  14. பொது விநியோகத் திட்டக் குளறுபடிகளைக் களைய அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
  15. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிக்க வேண்டும்.
  16. ஊழல் செய்வோரைத் தண்டிக்க லோக்பால், லோக் ஆயுக்தா சட்டங்களை நடைமுறைப்படுத்துக.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கான தீர்மானம் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அதேவேளையில், அவர் கட்சிப் பொருளாளர் பதவியையும் வகிப்பார் எனத் தெரிகிறது. திமுகவில் செயல்தலைவர் பதவி உருவாக்கப்படுவது இது முதன்முறையாகும்.