நாமும் மாட்டையும், மயிலையும் தூக்கிக் கொண்டு திரும்பி போய் விடுகிறோம்!

என்ன பேசிக்கொண்டிருக்கிறோம்?

மயில் கலவி கொள்ளும் என தெரியாமல்தான் நீதிபதி ஆகியிருக்கிறாரா?

இவர் சொன்னதும்தான் தேசிய விலங்கை மாற்றி விடுவார்களா?

ராம்கிருஷ்ண பரமஹம்சர் வாழ்க்கையில் நடந்த சம்பவமாக ஒரு கதை சொல்லுவார்கள்.

வீட்டில் ஒரு விழா நடக்கிறது. தின்பண்டங்கள் தட்டுகளில் இருக்கின்றன. அதில் லட்டுகள் இருக்கும் தட்டை எறும்புகள் மொய்க்கின்றன. தட்டை மாற்றி பார்க்கிறார்கள். ம்ஹூம், பயன் இல்லை. ராமகிருஷ்ணரிடம் யோசனை கேட்கிறார்கள். அவரும் ஒரு தட்டை எடுத்து அதில் லட்டுகளை மாற்றி வைக்கிறார். அந்த தட்டை வைக்குமிடத்தில், சுற்றி ஒரு விரல் இடைவெளியில் சர்க்கரை கொண்டு வட்டம் போடுகிறார். பின், தட்டை வைத்துவிடுகிறார். லட்டு முகர்ந்து வரும் எறும்புகள் முன்னாடி இட்டிருக்கும் சர்க்கரை துகளை தூக்கி, வந்த வழியே திரும்ப ஆரம்பித்தன. எல்லா எறும்புகளும் அப்படியே செய்தன. லட்டுகளும் பாதுகாப்பாக இருந்தன.

ஆள்பவர்கள் பரமஹம்சர் வழி வந்தவர்கள் என எடுத்துக் கொண்டாலும் சரி, வெறும் கதை என எடுத்துக்கொண்டாலும் சரி. சொல்லப்படும் நீதி முக்கியம். நம்மை எறும்புகளாக மாற்ற முற்படுகிறார்கள். நாமும் மாட்டையும் மயிலையும் தூக்கிக் கொண்டு, திரும்பி போய் விடுகிறோம்.

GDP குறைந்து 6.1 ஆகியிருக்கிறது. GDP-ல் நம்பிக்கை இல்லை எனினும் வளர்ச்சி இல்லை என்பது உண்மை. சொல்லப்போனால், வளர்ச்சியை விட மிக வேகமாக பொருளாதாரத்தில் கீழே விழுந்து கொண்டிருக்கிறோம். மிக மிக வேகமாக.

உள்நாட்டு தொழில்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அப்படி எதுவும் இருக்கிறதா என கேட்கலாம். கொஞ்ச நஞ்சத்தையும் காணாமல் போக செய்து கொண்டிருக்கிறார்கள். பணக்காரன்-ஏழை பிரிவினை போய் பணக்காரன் – நடுத்தட்டு பிரிவினையே அதிகமாகும் அளவுக்கு பணக்காரனுக்கு மட்டுமான நாடாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது.

தனியார் மயம் ரயில் சேவைக்குள் மெல்ல மூக்கு நுழைத்தாகிவிட்டது. ஹைட்ரோகார்பன் பிரச்சினையை கடந்துவிட்டோம். ஆனால் பிரச்சினை அப்படியே இருக்கிறது. நெடுவாசல் மக்களை நடுக்காட்டில் விட்டது போல் விட்டுவிட்டோம்.

மீனவன், தண்ணீர், விவசாயி, வயோதிகர்கள், தலித், ஏழை, எரிவாயு மானியம், பெட்ரோல் விலை, உணவு நஞ்சு, இஸ்லாமியன் என பல விஷயங்கள் உள்ளன. எழுத்துக்கொரு பிரச்சினை என உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அரசியல் சாசன மாற்றம், கல்வி மாற்றம், நீட்,
மருத்துவம், கல்வி மறுப்பு, எதேச்சதிகாரம் என ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கின்றன.

சர்க்கரை துகளை தாண்டி பார்ப்போம். சர்க்கரை துகளை ருசி பார்த்துவிட்டு, கடந்து லட்டை நோக்கி செல்ல வேண்டும். லட்டுகள் நிறைய இருக்கின்றன. அனைத்தையும் நாம்தான் தின்று தீர்க்க வேண்டும். இல்லையெனில் நாம் ஏமாந்துதான் போவோம்.

RAJASANGEETHAN JOHN