சட்டப் பேரவையில் இருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெளிநடப்பு! தி.மு.க. வரவேற்பு!!

தமிழக சட்டப்பேரவையில் இருந்து ஆண்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், டிடிவி.தினகரன் ஆதரவாளருமான தங்க தமிழ்செல்வன் வெளிநடப்பு செய்தார். அவரது வெளிநடப்புக்கு, தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி ஆதரவு தெரிவித்தார்கள்.

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது தங்க தமிழ்செல்வன் துணைக் கேள்வி கேட்க கையை உயர்த்தியபடி இருந்தார். தன்னை பேச அனுமதிக்கும்படி கூறினார்.

ஆனால் சபாநாயகர் தனபால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார். இதனால் தங்க தமிழ்ச்செல்வனுக்கு கோபம் ஏற்பட்டது. அவர் எழுந்து, “முக்கியமான பிரச்சனை குறித்து பேச நினைத்தால் நீங்கள் வாய்ப்பு தர மறுக்கிறீர்கள். இது என்ன நியாயம்?” என்றார்.

அதற்கு சபாநாயகர், “வாய்ப்பு கிடைக்கும்போது உங்களுக்கு அனுமதி தருவேன். இப்போது நேரமாகிவிட்டது” என்றார். உடனே தங்க தமிழ்ச்செல்வன் கோபத்துடன் இருக்கையைவிட்டு எழுந்து வெளியேறி வெளிநடப்பு செய்தார்.

அவரது வெளிநடப்புக்கு தி.மு.க எம்.எல்.ஏக்கள் மேசையை தட்டி  ஆதரவு தெரிவித்தனர்

வெளிநடப்பு செய்த தங்க தமிழ்செல்வன், சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள கேண்டீனுக்கு சென்றார். அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேட்டதற்கு, “ஆண்டிபட்டி தொகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்பது குறித்து நான் பேச முயற்சி செய்தேன். ஆனால் சபாநாயகர் வாய்ப்பு தர மறுத்துவிட்டார். இது என்ன நியாயம்? எனவே தான் நான் ஆவேசத்தில் பேசிவிட்டு வந்தேன்” என்றார் தங்க தமிழ்செல்வன்.

சட்டப்பேரவையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர் சபாநாயகருடன் வாக்குவாதம் செய்துவிட்டு, வெளிநடப்பு செய்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Read previous post:
0
கிரிக்கெட்: “இந்திய இந்துத்துவத்தின் அவல ஓலம் – அர்னாப் கோஸ்வாமி!”

“இந்தியா - பாகிஸ்தான் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டியில் இந்தியர்கள் அனைவரும் இந்தியாவிற்கு ஆதரவளிப்பதாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காஷ்மீரில் இருக்கும் இந்தியர்கள் உட்பட. இல்லையென்றால் இவர்கள்

Close