“கதை கேட்க ஆரம்பித்த 15வது நிமிடம் நான் ‘தேவி’யாக மாறிவிட்டேன்!” – தமன்னா

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய  மொழிகளில்  ஒரே சமயத்தில்   படமாக்கப்பட்டிருக்கும் திரைப்படம் ‘தேவி’. பிரபுதேவா ஸ்டுடியோஸ் சார்பில் பிரபுதேவா, டாக்டர் கே.கணேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்ப்படத்தை விஜய் இயக்கியுள்ளார். பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் முன்னணி கதாபாத்திரங்களிலும், நாசர், ஆர்ஜே பாலாஜி, சதீஷ் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கின்றனர்.

சாஜித் – வாஜித் மற்றும் விஷால் மிஷ்ரா (இசையமைப்பாளர்கள்), கோபிசுந்தர் (பின்னணி இசையமைப்பாளர்), மனுஷ் நந்தன் (ஒளிப்பதிவாளர்), ஆண்டனி (படத்தொகுப்பாளர்), அமரர் நா.முத்துக்குமார் (பாடலாசிரியர்),  மனோஹர் வர்மா (ஸ்டண்ட் மாஸ்டர்), பிரபு தேவா – பரேஷ் ஷிரோத்கர் (நடன இயக்குனர்கள்) ஆகிய திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் இதில் பணியாற்றி இருக்கிறார்கள்.

வருகிற அக்டோபர் 7ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் ‘தேவி’ படத்தின் மியூசிக்  வீடியோ வெளியீட்டு விழா, சென்னை ஜிஆர்டி ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் கே கணேஷ்,  இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா, சோனு சூட், ஆர்ஜே பாலாஜி மற்றும் அஸ்வின் (பிரபுதேவா ஸ்டுடியோஸ்) ஆகியோர் பங்கேற்றனர்.

d3

“மற்ற எல்லா திகில் திரைப்படங்களிலிருந்தும் ‘தேவி’ திரைப்படம் முற்றிலும் தனித்து விளங்கும்… சில வருடங்களுக்கு முன்பு வரை ரசிகர்கள் சிறந்த குடும்ப திரைப்படங்களை காண அதிக ஆர்வம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது பேய் படங்களை குடும்பத்தோடு சென்று காண்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகின்றனர். அந்த வகையில், இயக்குனர் விஜய்யின் அற்புத படைப்பான இந்த திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நூறு சதவீதம் முழுமையாக பூர்த்தி செய்யும் என்று  நம்புகிறேன்” என்றார் ஆர்ஜே பாலாஜி.

“பள்ளிக்கு சென்ற  தங்களின் முதல் நாள் அனுபவத்தை யாராலும் என்றுமே மறக்க முடியாது. என்னை பொறுத்தவரை, தமிழ் சினிமா தான் என்னுடைய பள்ளிக்கூடத்தின் முதல் நாள். என்றுமே என் மனதோடு ஒட்டி இருக்கிறது. இதுவரை ரசிகர்கள் என்னை ஒரு சராசரி வில்லனாக தான் பார்த்து இருக்கிறார்கள். ஆனால் ‘தேவி’ படத்தில் என்னை ஒரு ஸ்டைலான வில்லனாக ரசிகர்கள் பார்க்க போகிறார்கள்” என்றார் சோனு சூட்.

“மும்மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கும் எங்களின் ‘தேவி’ திரைப்படம்  அறுபது  நாட்களில் படமாக்கப்பட்டிருப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழு காரணம் இயக்குனர் விஜய் தான். ஒரே நாளில் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிடுவது பெருமையாக இருக்கிறது” என்றார் தயாரிப்பாளர் டாக்டர் கே.கணேஷ்.

“தேவி’ திரைப்படத்தின் கதையை என்னிடம் விஜய் சார் சொல்ல ஆரம்பித்த 15 வது நிமிடம், நான் தேவியாக மாறி விட்டேன்… அந்த அளவிற்கு இந்த படத்தின் கதைக்களம் வலுவானதாக இருந்தது. ஒரு அற்புதமான படைப்பாளி விஜய் என்பதை தாண்டி, அவரை ஒரு உன்னதமான மனிதராக தான் நான் பார்க்கிறேன்”என்றார் தமன்னா.

“ரசிகர்களின் ரசனைகளுக்கு ஏற்றவாறு நல்ல தரமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை திரைப்படங்களாக வழங்குவதே எங்கள் ‘பிரபுதேவா ஸ்டுடியோஸி’ன் முக்கிய கடமை. அதற்கு நல்லதொரு தொடக்கமாக அமைய இருப்பது தான் ‘தேவி’. அதனை தொடர்ந்து பிரியதர்ஷன் சாரின் ‘சில சமயங்களில்’, ஜெயம் ரவியின் ‘போகன்’ மற்றும் ‘விநோதன்’ ஆகிய சிறந்த படங்கள் அநத வரிசையில் இணைய தயாராகி வருகின்றன. ஜெயம் ரவிக்கு இன்னொரு ‘தனி ஒருவன்’ திரைப்படமாக ‘போகன்’ இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்றார் பிரபுதேவா.

“என்னுடைய எல்லா திரைப்பட இசை வெளியீட்டு விழாவிலும் கவிஞர் நா.முத்துக்குமாரின் பங்களிப்பு கட்டாயமாக இருக்கும். ஆனால், என்னுடைய சிறந்த நண்பரான அவர் தற்போது இல்லாததை நினைத்து வருந்துகிறேன். அவருடைய ஆசீர்வாதம் எங்கிருந்தாலும் எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கிறது.

“தேவி’ திரைப்படத்தில் எனக்கு பக்கபலமாய் இருந்த தயாரிப்பாளர் கணேஷ் அங்கிள், பிரபு தேவா சார், தமன்னா, சோனு சூட், நாசர் சார்,  ஆர்ஜே பாலாஜி, சதீஷ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரபுதேவா சார் பற்றியும், தமன்னா பற்றியும் நான் ஒன்று சொல்லியே ஆக வேண்டும். நம் தமிழ் திரையுலகம் பிரபுதேவா சார் மீது வைத்திருக்கும் அன்பை, திருவிழாவாக கொண்டாடுகின்றனர் ஹிந்தி திரையுலகினர். அதேபோல் நடிப்பிற்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக்கொள்ளும் நடிகை தமன்னா. நிச்சயமாக அவருடைய தேவி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெறும் என்று முழுமையாக நம்புகிறேன்” என்றார் இயக்குனர் விஜய்.