பாஜக அமைச்சருக்கு வந்தால் ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளியா?

இந்தியாவெங்கும் அன்றாட தேவைகளுக்காக மக்கள் பழைய நோட்டுக்களை மாற்ற முடியாமல் பரிதவிக்கிறார்கள். சிலர் தற்கொலையே செய்திருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பிரச்சினையல்ல, தேசத்திற்காக தியாகம் செய்ய வேண்டும் என்று அம்பானி – அதானி போன்ற கருப்பு முதலைகளின் பாக்கெட்டில் இருக்கும் மோடி அரசு வக்கனை பேசியது.

ஆனால் இவர்களுக்கே அந்தப் பிரச்சினை வந்ததை தெரிவிக்கிறது இந்த செய்தி!

பா.ஜ.க அரசின் மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவின் இளைய சகோதரர் பாஸ்கர் கவுடா கடந்த சில தினங்களாக உடல்நலமின்றி இருந்தார். அதையடுத்து, மங்களூருவில் உள்ள கே.எம்.சி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு திடீரென 22.11.2016 அன்று உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். பின்னர், அங்கிருந்து தனது சொந்த ஊரான மண்டேகொலு கிராமத்துக்கு பாஸ்கர் கவுடா உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தார். அப்போது பாஸ்கர் கவுடாவின் சிகிச்சை பணம் ரூ.2 லட்சத்தை செலுத்தும்படி மருத்துவமனை நிர்வாகத்தினர், மத்திய அமைச்சர் சதானந்த கவுடாவிடம் பில் கொடுத்தனர்.

உடனடியாக சதானந்த கவுடாவின் உதவியாளர் பழைய ரூ.500 நோட்டு கட்டுகளை எடுத்து கொடுத்தார். ஆனால் மருத்துவமனை ஊழியர்கள் பழைய நோட்டுகளை வாங்க மறுத்தனர். ரூ.2 லட்சத்துக்கு செல்லாத நோட்டுகளை எப்படி வாங்க முடியும் என ஏற்க மறுத்தனர்.

இதனால் சதானந்த கவுடாவின் ஆதரவாளர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மருத்துவமனை ஊழியர்கள் புதிய 2,000 ரூபாய் நோட்டு அல்லது ரூ.100 ஆக மட்டுமே தரும்படி திட்டவட்டமாக கூறினார்கள். அதனால், மருத்துவமனையில் இருந்து, தம்பியின் உடலை கொண்டு செல்ல முடியாமல் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா பரிதவித்தார்.

அதன் பின்னர், நீண்ட போராட்டத்துக்குப் பிறகு ரூ.2 லட்சம் பில் தொகைக்கான காசோலையை கொடுக்க அமைச்சர் சதானந்த கவுடா முன் வந்தார். ஆனால், மருத்துவமனை ஊழியர்கள் அந்த காசோலையை பெரும் தயக்கத்துடனே பெற்றுக் கொண்டனர். என்ன இருந்தாலும் அமைச்சர் அல்லவா? ஏதும் விசாரணை வந்தால் பிரச்சினையாயிற்றே?

மருத்துவமனைகளில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், கே.எம்.சி. மருத்துவமனையில் செல்லாது என்று பழைய ரூ.500 நோட்டுகளை வாங்க மறுப்பு தெரிவித்ததால் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா கடும் அதிருப்தி அடைந்து இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்திடம் புகார் தெரிவித்து விசாரணை செய்யப்படுமென்று கூறினார்.

முதலில் கவுடாவிடம் ஏது இத்தனை பழைய நோட்டுக்கள்? இன்னும் இது போன்று எத்தனை கட்டுக்கள் இருக்கின்றன? ஏன் அவர் தனது வங்கிக் கணக்கில் செல்லாத நோட்டுக்களை செலுத்தவில்லை? சதானந்தா கவுடாவின் சொந்த குடும்ப செலவுக்கு உதவியாளர் ஏன் நோட்டு கொடுக்க வேண்டும்? அவர் தனிப்பட்ட உதவியாளாரா? இல்லை மத்திய அரசின் ஊழியரா? மத்திய அரசின் ஊழியரென்றால் இதுதான் அவரது வேலையா?

ரோட்டுக்கடை இட்லிக்கார அம்மாவோ, பூக்கார அம்மாவோ வங்கிப் பரிவர்த்தனைக்கு மாறவேண்டும் என்று உபதேசித்து விட்டு மோடியின் கும்பலில் அதுவும் அமைச்சராக உள்ளவரே ஏன் வங்கி பரிவர்த்தனை செய்யவில்லை? மருத்துவமனைக்கு காசலையோ இல்லை கடன் அட்டையை வைத்தோ ஏன் கட்டணம் செலுத்தவில்லை? அப்படி செலுத்தினால் அது சட்டப்பூர்வ வருமானம் – செலவில் வருமென்ற பயமா? இல்லை கவுடாவிற்கு வங்கிக் கணக்கே இல்லையா?

மருத்துவமனைகளில் பழைய நோட்டுக்கள் வாங்கப்படும் என்பது சாதாரண மக்களுக்கு உதவும் பொருட்டுத்தான். ஆனால் நம் மக்களுக்கு எந்த மருத்துவமனையும் அல்லது இதர அரசுத் துறைகளும் அப்படி பழைய பணத்தை வாங்கவில்லை. அது குறித்து மக்கள் எத்தனையோ பேர் புகார் அளித்தும், போராடியும் ஒரு பலனும் இல்லை.

ஆனால் கோடி கோடியாக கருப்புப் பணத்தை வைத்திருக்கும் முதலாளிகளை ஆதரிக்கும் பா.ஜ.க அமைச்சர் செல்லாத நோட்டுக்களை வாங்கவில்லை என்று ஒரு மருத்துவமனையின் மீது விசாரிப்பாராம்!

பா.ஜ.க மோடி கும்பல்  இழைத்திருக்கும் குற்றத்தின் மீது நாம் விசாரணை நடத்த தேவையே இல்லை. என்ன தண்டனை என்பதை மட்டும் முடிவு செய்ய வேண்டும்!

Courtesy: vinavu.com