2-வது நாளாக எரிகிறது சென்னை சில்க்ஸ்: இடிந்து விழுகிறது கட்டிடம்!

சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு இரண்டாம் நாளான இன்றும் (வியாழக்கிழமை) தீயை முழுவதுமாக அணைக்கமுடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகின்றனர். இரு நாட்களாகத் தொடர்ந்து எரிவதால் 7 மாடிக் கட்டிடமும் இடிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அரசு சார்பில் கட்டிடத்தை இடிக்க ஐவர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளி கடையில் நேற்று (புதன்கிழமை) காலை 4 மணியளவில் கடையின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. உடனடியாக தி.நகர், தேனாம்பேட்டை, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், எழும்பூரில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் 40 வீரர்கள் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

கடையின் 7-வது தளத்தில் கேன்டீன் உள்ளது. அங்கு 10 ஊழியர்கள் தங்கியிருந்தனர். அவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். கீழ்ப்பாக்கம் மற்றும் எழும்பூரில் இருந்து 2 ‘ஸ்கைலிப்ட்’ வாகனங்கள் வரவழைக்கப்பட்டு 7-வது தளத்தில் இருந்த ஊழியர்கள் மீட்கப்பட்டனர். மேலும் கடையின் உள்ளே இருந்த 4 காவலாளிகளும் மீட்கப்பட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் தரை தளத்தில் தண்ணீரை பீய்ச்சி அடித்துக் கொண்டிருந்தபோதே அதிக வெப்பம் தாங்காமல் 10 அடி உயர 3 பெரிய கண்ணாடிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்து சிதறின. தரை தளத்தில் இருந்து மட்டும் கரும்புகை வந்து கொண்டிருந்த நிலையில், 5 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த தளங்களில் இருந்தும் கரும்புகை வெளியேற தொடங்கி, 7 தளங்களிலும் தீப்பிடித்து அதிக அளவில் கரும்புகை வெளியேறியது.

காலை 10 மணிக்குள் சுமார் 80 டேங்கர் லாரிகளில் கொண்டு வரப்பட்ட தண்ணீரை பீய்ச்சி அடித்த பின்னரும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. ஸ்கைலிப்ட் வாகனம் மூலம் 5 மற்றும் 6-வது தளங்களின் வெளிப்புற கண்ணாடிகளை உடைத்து உள்ளே தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். அதன் பின்னரும் தீ கட்டுக்குள் வரவில்லை.

வெப்பம் மேலும் அதிகரிக்கவே, 7 மாடி கட்டிடம் விரிசல் விட ஆரம்பித்தது. விரிசல் விடும் சத்தம் வெளியே பயங்கரமாக கேட்டது. அதை நேரில் பார்க்கவும் முடிந்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிலைமை மோசமடைவதை உணர்ந்த அதிகாரிகள் அந்த இடம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கட்டிடம் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக கூறி, அந்த இடத்தை அபாயகரமான பகுதியாக அறிவித்து, பொதுமக்கள் அங்கே வர தடை விதித்தனர். பக்கத்து கட்டிடங்களில் இருந்தவர்களையும் உடனடியாக வெளியேற்றினர். தெற்கு உஸ்மான் சாலையின் இருபுறமும் தடுப்புகளை வைத்து வாகனங்களை மாற்று வழியில் திருப்பிவிட்டனர்.

”கடைக்குள் ஏராளமான தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதாலும், பால்ஸ் சீலிங்கில் அதிகமான பிளைவுட்ஸ் பயன்படுத்தப்பட்டிருப்பதாலும் தீயை அணைக்க முடியவில்லை. மேலும், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ வேகமாக பரவுகிறது. தீ அணைக்கப்பட்ட இடத்தில் கூட மீண்டும் தீ பிடித்து விடுகிறது. ஜன்னல்கள் குறைவாக இருப்பதால் தண்ணீரை செலுத்துவதற்கும் வழியில்லை.

30 மணி நேரத்துக்கும் மேலாக போராடி வருகிறோம். அனைத்தும் எங்களுக்கு எதிராகவே இருப்பதால் தீயை கட்டுப்படுத்துவதில் சவாலாக இருந்தது. கட்டிடம் முற்றிலுமாக சேதம் அடைந்து விட்டது. இதை கண்டிப்பாக இடிக்க வேண்டும்” என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தை இன்றும் நேரில் பார்வையிட்ட வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ”சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் தரைத் தளத்தில் தற்போது மீண்டும் தீப்பிடித்து எரிகிறது. இரண்டு நாட்களாகத் தொடர்ந்து எரிவதால், அனைத்துத் தளங்களும் நாசமடைந்துள்ளன. விரைவில் அரசு சார்பில் கட்டிடம் இடிக்கப்படும். எந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இடிக்க வேண்டும் என்று ஐஐடி நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளோம்.

கட்டிட விபத்து தொடர்பாக ஆராய்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். இதற்கு பொதுப்பணி தலைமை பொறியாளர் ஜெய்சிங் தலைமை வகிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

கடையின் இழப்பை உடனடியாகக் கணக்கிட முடியாவிட்டாலும், ஆடைகளின் மதிப்பு பல கோடிகளைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இதில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களின் மதிப்பு கணக்கிடப்படவில்லை. முதல்கட்ட விசாரணையில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. மொத்த சேதமதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாக சென்னை சில்க்ஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.