திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு: துணை பொது செயலாளர் ஆனார் கனிமொழி

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்டோபர் 9) காலை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி அதிகாரபூர்வமாக தேர்வு செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, துணைப் பொதுச் செயலாளர்கள் மற்றும் தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி துணைச் செயலாளர்களாக ஐ.பெரியசாமி, கனிமொழி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், பொன்முடி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 தலைமை நிலைய முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு தேர்வு செய்யப்பட்டார்.