மக்கள் விரோத எட்டுவழி சாலை பணிகளுக்கு தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

சுற்றுச்சூழலையும், இயற்கை வளங்களையும், விவசாயிகளின் வாழ்வாதாரங்களையும் அழித்து ரூ.10,000 கோடி செலவில் போடப்படவிருக்கும் சென்னை – சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான அனைத்துப் பணிகளுக்கும் தற்காலிகத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

“எட்டுவழிச்சாலை திட்டத்தில் தற்போது நிலம் கையகப்படுத்தும் பணி நடக்கவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், அதற்கான அளவிடும் பணி நடக்கிறது; பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்” என்பது மனுதாரர்களின் புகார்.

நீதிபதிகள் சிவஞானம், பாவானி சுப்பராயன் அமர்வு முன் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாமக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நிலம் கையகப்படுத்தும் பணி நடத்தப்பட மாட்டாது என தமிழக அரசும், மத்திய அரசும் உத்தரவாதம் கொடுத்தன. ஆனால் இந்த உத்தரவாதத்தை மீறி அங்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது. பொதுமக்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். நிலம் கையகப்படுத்த அளவிடும் பணியின்போது, இடையில் உள்ள மரங்கள் சட்ட விரோதமாக வெட்டப்படுகின்றன. நிலத்திலிருந்து பொதுமக்களை அச்சுறுத்தி அகற்றும் பணியை காவல்துறை மூலம் செய்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குறுதிகளை மீறி அரசுகள் செயல்பட்டு வருவதால், நிலம் கையகப்படுத்தும் பணிக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று  வாதிட்டார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் ஆகியோர், “மக்களுடைய அனுமதி இல்லாமல் நிலம் அளவிடும் பணி செய்யவில்லை. நாங்கள் எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப் பிரசுரம் மட்டுமே வினியோகித்து வருகிறோம். பொதுமக்களின் அனுமதி இல்லாமல் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடவில்லை” என்று வாதிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீங்கள் நிலம் அளவிடும் பணியில் ஈடுபடும்போது, இடையில் தடையாக உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன. அங்கு மாற்றாக நடப்படும் மரங்கள் முழுமையாக வளர்வதற்கும், அதைப் பாதுகாப்பாதற்கும் எந்த ஏற்பாடும் இல்லை. அங்குள்ள மக்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. எனவே நிலம் கையகப்படுத்தும் பணிக்கும், அளவிடும் பணிக்கும் தடை விதிக்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை அனைத்துப் பணிகளுக்கும் தடை தொடரும்” என தெரிவித்து, வழக்கை செப்டம்பர் 11ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.