தடுமாறி எழுவது தான் அறிவியல்! மீண்டும் எழட்டும் சந்திரயான்!

அறிவியலின் அற்புதமே தடுமாறி, முயன்று வளர்வதுதான். அது ஒன்றும் மதம் அல்ல. இறுகிப் போய் கெட்டித் தட்டி அருவருக்கும் இறுமாப்பு கொள்ள!

மோடியின் இருப்பும் ஜக்கி போன்ற சில்லரைகளின் இருப்பும்தான் நேற்றைய சந்திரயான் நிகழ்வை அருவருக்க வைத்தது. மற்றபடி நிலவின் மறுபக்கத்தில் 2 கிலோமீட்டர் உயரம் வரை செல்ல முடிந்த அறிவியல் மீது அன்பும் மரியாதையுமே இருக்கிறது.

அந்த அன்பு மற்றும் பரவசத்தின் மீது ‘இந்தியப்’ பெருமையின் முலாமோ, மோடி கடத்தி செல்ல விரும்பிய வெற்றியோ பூசப்பட்டால், உங்களுக்கெல்லாம் சந்திரயானை விண்வெளிக்கு உயர்த்திய அறிவியல் காட்டக்கூடியது நடுவிரல் மட்டுமே. அத்தனை உயரத்தில் உங்கள் நாடு, அரசு என எந்த எழவின் பெருமையும் கிடையாது.

இப்போதும் சிவனை கட்டியணைத்த மோடியைத்தான் நாடு பேசும். திருமண வீடெனில் மாப்பிள்ளை, இழவு வீடெனில் பிணம் என்றிருக்கும் மோடியின் வலையில் மீண்டும் விழாமல் முடிந்தால் இச்சம்பத்தில் உள்ள அறிவியலின் வெற்றியை மட்டும் பேசுவோம்.

இஸ்ரோவில் அமர்ந்திருந்த குழுவில் ஒடுக்கப்பட்டோர், மாற்று பாலினத்தோர் என சமூகத்தின் எல்லா தரப்புமே இருந்திருந்தால் சந்திரயானின் அறிவியல் கொடுத்த சந்தோஷத்தை விட இன்னும் அதிக சந்தோஷம் கிட்டியிருக்கும்.

பணக்காரனுக்கு ப்ளாட் போட்டுக் கொடுக்கவே நிலவுக்கு விண்கலம் அனுப்பி இந்திய அரசு ஆராய்கிறது எனினும் பூமியின் முக்காட்டுக்கு வெளியே இருந்து கலம் பிடித்து சென்றது அறிவியலின் பாதையை. பகுத்தறிவின் பாதையை!

ஆதலால் நீட்டலும் இல்லை, குறைத்தலும் இல்லை. தடுமாறி எழுவதுதான் அறிவியல்! மீண்டும் எழட்டும் சந்திரயான்!

தண்ணீர் தொலைத்த நிலத்திலிருந்து நிலவில் நீர் தேட கலம் அனுப்புகிறோம் என்ற யதார்த்தத்தையும் நினைவில் இருத்துவோம்.

RAJASANGEETHAN