பாரிஸ் ஜெயராஜ் – விமர்சனம்

நடிப்பு: சந்தானம், அனைகா சோட்டி, பிருத்விராஜ், மொட்டை ராஜேந்திரன், மாறன், சேது, சேஷு, தங்கதுரை, வினோத்

இயக்கம்: ஜான்சன்

இசை: சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு: ஆர்தர் வில்சன்

தயாரிப்பு: லார்க் ஸ்டூடியோஸ்

#

0a1eவடசென்னையில் உள்ள பாரிஸ் பகுதியில் வசித்துவரும் கானா பாடகர் நாயகன் சந்தானம். பட்த்தில் அவர் பெயர் ஜெயராஜ். அதனால் தான் இப்பட்த்துக்கு ‘பாரிஸ் ஜெயராஜ்’ என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

பாரிஸ் ஜெயராஜ் எனும் சந்தானத்தின் முதல்காதல் தோல்வியில் முடிந்துவிட, அடுத்ததாக அவர் நாயகி அனைகா சோட்டியை காதலிக்கிறார். அனைகா சோட்டியும் சந்தானத்தை காதலிக்கிறார். இவர்களுடைய காதலுக்கு யாரும் எதிர்பார்க்காத, வினோதமான, விசித்திரமான பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? இறுதியில் காதலர்கள் எப்படி இணைந்தார்கள்? என்பது மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் சந்தானம் கானா பாடகராக துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும், காதலி பின்னால் சுற்றும் வழக்கமான சந்தானத்தையே பார்க்க முடிகிறது. கிளைமாக்ஸில் இவருடைய உடல்மொழி ரசிக்க வைக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனைகா, அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

சந்தானத்திற்கு அப்பாவாக வரும் பிருத்விராஜின் நடிப்பு சிறப்பு. சந்தானத்திற்கு நிகராக இவருடைய கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. மாறன், சேது, சேஷு, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், கலக்கப்போவது யாரு வினோத், மற்றும் தங்கதுரை ஆகியோர் டைமிங் காமெடியில் பேசி அசத்தி இருக்கிறார்கள்.

சந்தானம் நடித்து ஜான்சன் இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிந்த ஏ 1 படம் வெற்றி பெற்றதையடுத்து, அதே குழுவினர் மீண்டும் இணைந்து இந்த படத்தை கொடுத்திருக்கிறார்கள். படத்தின் முதற்பாதியில் காமெடி பெரியதாக எடுபடவில்லை. ஆனால், இரண்டாம் பாதியில் கூடுதலாக கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

சந்தானம் கானா பாடகர் என்பதால் எல்லாப் பாடல்களுமே அதே பாணியில் இடம்பெற்றிருக்கிறது. ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு படத்துக்கு வலு சேர்த்திருக்கிறது.

‘பாரிஸ் ஜெயராஜ்’ – ரசித்துப் பார்க்கலாம்.