96 – விமர்சனம்

காதலனும், காதலியும் பிரிந்து சிலபல ஆண்டுகள் ஆனபின் மீண்டும் சந்தித்தால் எப்படியெல்லாம் கசிந்துருகுவார்கள், திரைப்பட பார்வையாளர்களின் இதயங்களை எப்படியெல்லாம் கசக்கிப் பிழிந்து கண்ணீர் மல்கச் செய்வார்கள் என்பதெல்லாம் (‘அழகி’, ‘ஆட்டோகிராஃப்’ போன்ற படங்கள் வாயிலாக) ஏற்கெனவே நாம் அறிந்தது தான். அந்த காதலுணர்ச்சிக் கொந்தளிப்பின் உச்சத்துக்கே நம்மை அழைத்துச் சென்று கிறங்கடிக்கும் படம் தான் ‘96’. பள்ளிப் பருவத்தில் காதலித்துப் பிரிந்த காதலர்கள் 22 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சந்தித்து ஒரேயொரு இரவு மட்டும் பேசிப் பழக சந்தர்ப்பம் கிடைத்தால் என்ன பேசுவார்கள், எப்படி நடந்துகொள்வார்கள் என்ற சுவாரஸ்யமான அம்சம் தான் இப்படத்தின் கதைக்கரு.

ட்ராவல் போட்டோகிராபர் எனப்படும் பயண புகைப்படக் கலைஞர் தான் ‘ராம்’ என சுருக்கமாக அழைக்கப்படும் ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி). சென்னையில் வசித்துவரும் இந்த 40 வயதுக்காரர், மாணவ மாணவிகளுக்கு புகைப்படக் கலையைக் கற்றுத் தரும் ஆசிரியராகவும் இருக்கிறார். ஒருநாள் இவர் தன் மாணவியுடன் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வருகிறார். அங்கு 10ஆம் வகுப்பு வரை தான் படித்த பள்ளிக்கூடத்தைப் பார்க்கிறார். அப்பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவியாக இருந்த ‘ஜானு’ என சுருக்கமாக அழைக்கப்படும் ஜானகிதேவியுடன் தனக்கு ஏற்பட்ட காதலும், அது கைகூடாமல் போனதும் அவருக்கு நினைவுக்கு வருகிறது. உடனே, தன்னோடு படித்த பள்ளிக்கூட நண்பர்களை போனிலும், வாட்சப்பிலும் தொடர்புகொள்கிறார். 1996-ல் பிளஸ்-2 முடித்த அவர்கள் எல்லோரும் ‘ஒருநாள் சென்னையில் சந்திக்கலாம்’ என்று முடிவு செய்கிறார்கள். ’96 பேட்ச்’ ரீ-யூனியனுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

அந்த ரீ-யூனியன் நாளன்று நண்பர்கள் வருகிறார்கள். கூடிப்பேசி மகிழ்கிறார்கள். ராம் மட்டும் தன் காதலி ஜானுவின் வருகையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். திருமணமாகி, ஒரு குழந்தைக்கும் தாயாகிவிட்ட ஜானு (த்ரிஷா) சிங்கப்பூரிலிருந்து தனியே வந்து சேருகிறார். 22 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொள்ளும் ராமும், ஜானுவும் ஓர் இரவு முழுக்க எங்கெல்லாம் செல்கிறார்கள்? என்னவெல்லாம் பேசுகிறார்கள்? என்னவெல்லாம் செய்கிறார்கள்? படம் இறுதியில் என்னவாக முடிகிறது? என்பதை கவித்துவமாகச் சொல்லுகிறது மீதிக்கதை.

n2

படத்துக்கு படம் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுக்கும் விஜய் சேதுபதி இந்தப் படத்திலும் ஒரு வித்தியாசமான கதையைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார். கைகூடாமல் போன காதலின் நினைவுகளுடனேயே வாழும் கதாபாத்திரத்தில் இந்த மனுசன் நின்று ஆடி, நம்மை பிரமிக்க வைத்திருக்கிறார். நடிப்பில் அவர் காட்டுகிற நுணுக்கமான உணர்ச்சி வெளிப்பாடுகள், நம்மை வெகுவாக ரசிக்க வைக்கின்றன. படபடப்பு, தவிப்பு, காத்திருப்பு, ஏக்கம் என எல்லாவற்றையும் சுமந்து திரியும் பெருங்காதலனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றிருக்கிறார். வெட்கப்படும் தருணங்களிலும், காதலியின் பாராட்டில் பெருமிதம் மிளிரப் பார்க்கும்போதும் விஜய் சேதுபதி என்ற “நடிப்பு அரக்கன்” தனித்துவமாய் விஸ்வரூபம் எடுத்து உயர்ந்து நிற்கிறார்.

இப்படத்தில் இன்னொரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் – த்ரிஷாவின் அழகும், அதியற்புத நடிப்பும். சமீபத்திய சில படங்கள் போல் இல்லாமல் இதில் அவர் இளமை பொங்க வசீகரிக்கும் அழகுடன் வருகிறார். முன்பு ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் ஜெஸ்ஸியாக நடித்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற அவர், இதில் இன்னும் ஒரு படி மேலே போய் ஜானுவாகவே வாழ்ந்து கரைந்துருகி இருக்கிறார். ஜானுவாக அவரைத் தவிர வேறெந்த நடிகையையும் கற்பனை செய்தும் பார்க்க இயலவில்லை. அந்த அளவுக்கு கதாபாத்திரத்தோடு பொருந்திப்போய் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

விஜய் சேதுபதியின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யன் அழகாய்ப் பொருந்தி வெளுத்துக்கட்டி இருக்கிறார். விடலைப் பருவத்தில் விஜய் சேதுபதி இப்படித்தான் இருந்திருப்பார் என்று நம்புகிற அளவுக்கு அவரது. பார்வை, உடல்மொழி ஆகியவற்றை இம்மியளவும் பிசகாமல் அப்படியே நகலெடுத்து அருமையாகக் கொடுத்திருக்கிறார். த்ரிஷாவின் பள்ளிப்பருவ கதாபாத்திரத்தில் வரும் கவுரி கிஷன், கள்ளம் கபடமில்லாத விடலைப் பருவக் காதலை வஞ்சகம் இல்லாமல் வாரி வழங்கி ஸ்கோர் செய்திருக்கிறார்.

தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ், ஜனகராஜ், கவிதாலயா கிருஷ்ணன் என அனைவரும் தத்தமது கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்து, படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

காதல் என்ற பெயரில் முகம் சுழிக்க வைக்கும் விரசக் காட்சிகளையோ, சினிமாத்தனமான பாடல் காட்சிகளையோ, இதயமே நின்றுபோகும் விதமான திடீர் திருப்பங்களையோ திணிக்காமல், தெளிந்த நீரோடை போல இயல்பாகவும், இதமாகவும் கதையை நகர்த்திச் சென்றிருக்கும் இயக்குனர் பிரேம் குமாருக்கு பாராட்டுகள். படம் பார்க்கும் ஆண், பெண் அனைவரையும் தங்களது பழைய காதலை நினைவுகூர்ந்து நெகிழச் செய்திருப்பது இயக்குனரின் சாதனை. எனினும், மீசை முழுமையாக வளராத பையனுக்கும், முலை முழுமையாக வளர்ச்சி அடையாத பெண்ணுக்கும் இடையிலான காதல் தான் “புனிதமானது”, “தெய்வீகமானது” என தவறாக புரிந்துகொள்ளவும் இயக்குனர் மறைமுகமாக இடம் அளித்திருக்கிறார் என்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. குறிப்பாக, 10ஆம் வகுப்பு படித்தபோது காதலித்த பெண்ணை, அடுத்த 22 ஆண்டுகளாக நினைத்துக்கொண்டு வேறு பெண்ணைக் காதலிக்காமலும், திருமணம் செய்யாமலும் இருப்பதாக காட்டப்படும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் யதார்த்தத்துக்கு அல்லது பெரும்பாலோருக்கு பொருந்துவதாக இல்லை என்பதை இயக்குனரும் ஒப்புக்கொள்வார் என நம்புகிறோம்.

இயக்குனரே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ போன்ற படங்களின் ஒளிப்பதிவாளர் என்பதாலோ என்னவோ, இப்படத்தில் மகேந்திரன் ஜெயராஜு, சண்முகசுந்தரம் ஆகியோரின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காட்சியையும் அழகிய ஓவியமாக ஆக்கியிருக்கிறது. அந்த ஓவியங்களுக்கு இசையமைப்பாளர் கோவிந்த் மேனன் தன் இசையால் உயிரூட்டி இருக்கிறார்.

‘96’ – காதல்நிலத்தில் எப்போதாவது அபூர்வமாக பூக்கும் காவிய மலர்!