பைரி – பாகம்1: விமர்சனம்

நடிப்பு: சையது மஜீத், மேக்னா எலன், விஜி சேகர், ஜான் கிளாடி, சரண்யா ரவிச்சந்திரன், ரமேஷ் ஆறுமுகம், வினு லாரன்ஸ், ஆனந்த் குமார், கார்த்திக் பிரசன்னா, பிரான்ஸிஸ் கிருபா, ராஜன் மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: ஜான் கிளாடி

ஒளிப்பதிவு: ஏ.வி.வசந்தகுமார்

படத்தொகுப்பு: ஆர்.எஸ்.சதீஷ் குமார்

இசை: அருண் ராஜ்

தயாரிப்பு: ’டி கே ப்ரொடக்‌ஷன்ஸ்’ வி.துரைராஜ்

வெளியீடு: ’சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

அகிம்சையை போதித்தவன் புத்தன்; அந்த புத்தனை முன்னிட்டு, அவனது ஆதரவாளர்கள் எதிரும் புதிருமாய் இரு பிரிவினராகப் பிரிந்து, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்தால், அது எத்தனை பெரிய கொடுமையாக இருக்கும்! அது போல, உலகெங்கும் சமாதானத்தின் சின்னமாகத் திகழ்வது புறா; அந்த புறாக்களை முன்னிட்டு, அவற்றை வளர்ப்பவர்கள் தங்களுக்குள் குரோதம் கொண்டு வெட்டு, குத்து, கொலை என ரத்த ஆறை ஓட விட்டால் அது எத்தனை பெரிய துயரமாக, அவலமாக இருக்கும்! அந்த துயரத்தை, அவலத்தை மையமாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது ‘பைரி – பாகம்1’ திரைப்படம்.

0a1m

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே உள்ள அருகுவிளை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில், செல்போன் ஆதிக்கம் செலுத்தும் தற்காலத்தில், இப்படக்கதை நடப்பதாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் ஜல்லிக்கட்டு, சில பகுதிகளில் ரேக்ளா ரேஸ், சில பகுதிகளில் சேவல் சண்டை, சில பகுதிகளில் கிடா சண்டை போல, ‘பைரி – பாகம்1’ படக்கதை நடைபெறும் இப்பகுதியில் காலங்காலமாக நடக்கும் புறா பந்தயம் பிரசித்தம். இங்கு வீட்டுக்கு வீடு புறா வளர்க்கிறார்கள். அதிக நேரம் வானில் பறப்பதற்கு சிறப்புப் பயிற்சிகள் கொடுக்கிறார்கள். பந்தயத்தில் தங்கள் புறாக்களை இறக்கிவிடுகிறார்கள். எந்த புறா அதிக நேரம் வானில் பறந்து வலம் வருகிறதோ, அந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். இப்படி தங்கள் புறா வெற்றி பெற்றால், அதை பெருமையாக, பெரிய கௌரவமாகக் கருதி கொண்டாடுவார்கள். இந்த கௌரவத்தை பரம்பரை பரம்பரையாகப் பெற்றவர்களும் உண்டு. இதை பெறுவதற்காக வெறித்தனமாக புறா பந்தயத்தில் ஈடுபட்டு, பரம்பரை பரம்பரையாக ஓட்டாண்டி ஆகி, வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு. இவ்விதம் வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் வம்சத்தில் வந்தவர் தான் கதையின் நாயகன் ராஜலிங்கம் (சையது மஜீத்).

ராஜலிங்கத்தின் அப்பா, சித்தப்பா, தாத்தா என அவரது குடும்ப முன்னோர்கள் எல்லோருமே புறா வளர்ப்பில், புறா பந்தயத்தில் ஈடுபட்டு வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டதைக் கண்டு வெறுப்பில் இருக்கும் ராஜலிங்கத்தின் அம்மா சரஸ்வதி (விஜி சேகர்), தன் மகன் புறா பக்கம் பார்வையைத் திருப்பாமல், நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போக வேண்டும் என்று விரும்புகிறார். இதற்காக அவர் ராஜலிங்கத்தை பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிடுகிறார். ஆனால், ராஜலிங்கத்துக்கு படிப்பில் ஆர்வம் இல்லை. தனது நண்பர்களைப் போல புறா வளர்க்கவே அவருக்கு ஆசை. விளைவாக சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் தோல்வி அடைந்து, அவற்றை ‘அரியர்ஸ்’ ஆக சுமந்துகொண்டு கல்லூரியை விட்டு வெளியே வருகிறார்.

“எப்படியாவது படித்து, தேர்வு எழுதி, ‘அரியர்ஸ்’ பாடங்களில் பாஸாகிவிடு” என்று அம்மா கெஞ்ச, இது தான் சாக்கென்று, அரியர்ஸ் எழுதி முடிக்கும் வரை புறா வளர்த்துக்கொள்ள அம்மாவிடம் அனுமதி வாங்கிவிடுகிறார் ராஜலிங்கம். வெறித்தனமாக புறா வளர்க்கும் அவர், இதன் பொருட்டு அண்டை வீட்டு இளைஞர்களுடன் மோதலையும் வளர்த்துக்கொள்கிறார்.

இதன்பின், அம்மாவின் எதிர்ப்பையும் மீறி, புறா பந்தயத்தில் குதிக்கிறார் ராஜலிங்கம். ஊருக்குள் சிலபல கொலைகளைச் செய்துவிட்டு கெத்தாக உலவும் பெரிய தாதாவான சுயம்புவும் (வினு லாரன்ஸ்) புறா பந்தயத்தில் இறங்குகிறார். தனது ஆள்பலம் மற்றும் பணபலத்தைப் பயன்படுத்தி, பந்தயத்தில் தனது புறா வெற்றி பெற்றதாக நடுவரை முறைகேடாக அறிவிக்க வைக்கிறார் சுயம்பு. இந்த மோசடியைக் கண்டுபிடித்து ராஜலிங்கம் அம்பலப்படுத்த, அவருக்கும் சுயம்புவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடிக்கிறது. ராஜலிங்கத்தின் வாழ்நாள் பகைவனாக மாறிப்போகிறார் சுயம்பு. இதனால் ராஜலிங்கம் எத்தகைய சிக்கல்களை எதிர்கொள்கிறார்? என்பதை அதிரடி ஆக்‌ஷன் பாணியில் பரபரப்பாக விவரிக்கிறது ‘பைரி பாகம்1’ திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ராஜலிங்கமாக நடித்திருக்கும் சையத் மஜீத், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். போட்டியாளர்களுடன் மோதும்போது மட்டுமல்ல, அம்மாவைத் திட்டித் தீர்க்கும்போதும் நெருப்பாகக் காட்சியளிக்கிறார். இன்னும் கொஞ்சம் நடிப்புப் பயிற்சி எடுத்துக்கொண்டால், தமிழ்த்திரை நாயகனாக நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்,

நாயகனின் அம்மா சரஸ்வதியாக விஜி சேகர் நடித்திருக்கிறார். மகன் மீது கடுமையான கண்டிப்பையும், அதே நேரத்தில் அதீத பாசத்தையும் வெளிப்படுத்தும் தனித்துவமான அம்மாவாக மிரட்டலாக நடித்து ஸ்கோர் செய்திருக்கிறார்.

அடாவடி தாதா சுயம்புவாக வினு லாரன்ஸ் நடித்திருக்கிறார். கிராமிய வில்லத்தனத்தை நடையிலும், உடையிலும், பார்வையிலும், உடல்மொழியிலும் வெளிப்படுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

சிறுவயது முதல் நாயகனின் நண்பராக இருக்கும் அமல் கதாபாத்திரத்தில் இயக்குநர் ஜான் கிளாடி நடித்திருக்கிறார். உற்ற தோழமைக்கு உதாரணமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். குறிப்பாக, “என் மகன் கெட்டுப்போவதற்கு நீ தான் காரணம்” என்று வசை பாடும் நண்பனின் அம்மா, தன் அம்மாவை கெட்ட வார்த்தையில் இழிவாகத் திட்டியபோதும் ஆத்திரப்படாமல் கூலாக சிரித்துக்கொண்டே கடந்துபோவது கிளாஸ்!

மோதலில் ஈடுபடும் இரு தரப்பினரையும் சமாதானம் செய்யப் போராடுவது, இந்த போராட்டத்தில், தேவைப்பட்டால் உரிமையுடன் கை நீட்டுவது என அதகளம் செய்யும் ரமேஷ் பண்ணையார் கதாபாத்திரத்தில் ரமேஷ் ஆறுமுகம் நடித்திருக்கிறார். புதுமுகம் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல, தன் கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை அளவாகக் கொடுத்து, ’யார் இந்த நடிகர்?’ என ஆவலுடன் கேட்க வைத்திருக்கிறார்.

அமலின் மாற்றுத் திறனாளி அப்பாவாக நடித்திருக்கும் ராஜன், கிளைமாக்ஸில் மனிதம் தொடர்பான வசனம் பேசி, நம் இதயங்களில் இடம் பிடித்துவிடுகிறார்.

நாயகனின் காதலி ஷரோனாக மேக்னா எலனும், நாயகனை ஒருதலையாகக் காதலிக்கும் முறைப்பெண் சித்ராவாக சரண்யா ரவிச்சந்திரனும் நடித்திருக்கிறார்கள். கதையில் இந்த இருவருக்கும் பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. ஒரு குறும்படக் கதையை நெடும்படக் கதையாக இழுப்பதற்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்கள்.

வழக்கமான ஹீரோ – வில்லன் அடிதடி வெட்டுக்குத்து ஆக்‌ஷன் கதை தான்; எனினும், அதற்குள் புறா வளர்ப்பு, புறா பந்தயம் என்ற கான்செப்டைப் புகுத்தி, புதுமையாக்கி, இதுவரை தமிழ்ச்சினிமா கண்டிராத ‘புறா பந்தயத்தை திரையில் தீட்டிய முதல் இயக்குநர்’ என்ற சிறப்பைத் தட்டிச் சென்றுள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி.

புறாவின் பிறப்பு, வளர்ப்பு, பெயர் வைப்பு, அவற்றிற்கு இடையே உள்ள உறவுமுறை, பறக்கும் நேரம், வானில் பறக்கும் புறாவை கீழே வர வைக்கும் முறை என புறாவைப் பற்றியும், புறா பந்தயம் பற்றியும் மிகப் பெரிய ஆய்வுப் புத்தகம் எழுதுமளவுக்கு நுணுக்கமான விவரங்களைச் சேகரித்து, அவற்றை கொஞ்சம்கூட போரடிக்காத அளவுக்கு காட்சிகளுக்குள் புகுத்தி சுவாரஸ்யமாக திரைக்கதை அமைத்து, விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றதற்காக இயக்குநர் ஜான் கிளாடியை பாராட்டலாம்.

புறா பந்தயத்தை இயக்குநர் காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. கிராபிக்ஸ் உதவியோடு புறா பந்தயங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும், அதன் மேக்கிங் வியக்க வைக்கிறது.

வானில் பறக்கும் பந்தயப் புறாவைத் துரத்திச்சென்று, நடுவானிலேயே அதை காலால் பற்றி, அலகால் கொத்திக் கொன்று, புறா பந்தயத்துக்கு ஊறு விளைவிக்கும் ஒரு வகைக் கழுகுக்கு ‘பைரி’ என்று பெயராம். கூர்மையான, கொடூரப் பார்வை கொண்ட அத்தகைய பைரியை, அதன் பயங்கரத் தாக்குதலை காட்சிப்படுத்தி, அதை வில்லன்களையெல்லாம் விட பெரிய வில்லனாக சித்தரித்து மயிர்க்கூச்செரிய வைத்திருக்கிறார் இயக்குநர்.

பெரும்பாலான கதாபாத்திரங்களில், முன்அனுபவம் இல்லாத நாகர்கோயில் வட்டார மக்களையே நடிக்க வைத்து, நாகர்கோயில் தமிழிலேயே பேச வைத்து, அவர்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார் இயக்குநர். எனினும் நாகர்கோயில் தமிழுக்குப் பழக்கப்படாத பார்வையாளர்களுக்கு பல வசனங்கள் புரியவில்லை என்ற குறையைத் தவிர்க்க, வட்டார மொழி வழக்கின் அடர்த்தியை சற்றுக் குறைத்து இலகுவாக ஆக்கியிருக்கலாம்.

இப்படத்துக்கு ‘பைரி – பாகம்1’ என பெயர் வைத்திருப்பதால், அடுத்து இரண்டாம் பாகம் வரும் என நம்பலாம். அதில் இயக்குநர் என்னவெல்லாம் செய்வார் என்று அறிய இப்போதே ஆவல் ஏற்படுகிறது.

ஏ.வி.வசந்தகுமாரின் ஒளிப்பதிவு நாகர்கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற அழகையும், அம்மண்ணின் மாந்தர்களது வாழ்வியலையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

அருண் ராஜின் இசையில் பாடல்கள் ஓ.கே ரகம். பின்னணி இசை காட்சிகளுக்கு வலிமை சேர்த்துள்ளது.

‘பைரி’ – சுவாரஸ்யமான புது அனுபவம்! பார்த்து, ரசித்து, அனுபவிக்கலாம்!