அமீகோ கேரேஜ் – விமர்சனம்

நடிப்பு: மாஸ்டர் மகேந்திரன், ஜி.எம்.சுந்தர், ஆதிரா, தீபா பாலு, தாசரதி, முரளிதரன் சந்திரன், சிரிகோ உதயா, மதனகோபால், சக்தி கோபால், முரளி கமல் மற்றும் பலர்

இயக்கம்: பிரசாந்த் நாகராஜன்

ஒளிப்பதிவு: விஜயகுமார் சோலைமுத்து

படத்தொகுப்பு: ரூபன் –சிஎஸ் பிரேம்குமார்

இசை: பாலமுரளி பாலு

தயாரிப்பு: ‘பீப்பிள் புரொடக்‌ஷன் ஹவுஸ்’ முரளி ஸ்ரீனிவாசன்

பத்திரிகை தொடர்பு: சதீஷ் (எய்ம்)

வாழ்க்கையில் நாம் ஒவ்வொரு சிக்கலை எதிர்கொள்ளும்போதும், அதை கடந்து செல்ல, நல்லதும் கெட்டதுமாக பல வழிகள் – பல Options – நம் முன் இருக்கும். நாம் சுமுகமான வழியைத் தேர்வு செய்தால் நம் வாழ்க்கைப் பயணம் அமைதியாக செல்லும். மாறாக, உணர்ச்சி வசப்பட்டு கரடுமுரடான வழியைத் தேர்வு செய்தால் கல்லிலும் முள்ளிலும் கிழிபட்டு, ரத்தம் சிந்தி, துயர வாழ்க்கை வாழ நேரிடும். சற்று சிந்தித்தால், “இது சரி தானே” என்று நினைக்கத் தோன்றும் இந்த அற்புதமான கருத்தை அழுத்தமாக முன்வைப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பது தான் ’அமீகோ கேரேஜ்’ திரைப்படம்.

0a1c

’அமீகோ’ என்ற ஸ்பானிஷ் சொல்லுக்கு ‘நண்பர்’ என்பது பொருளாம். பதினைந்து வயதில், தான் சந்தித்த ஒரு ஸ்பானிஷ் பெண்ணுக்காக ஸ்பானிஷ் மொழியை ஆராதித்துக்கொண்டிருக்கும் ஆனந்த் (ஜி.எம்.சுந்தர்), கார் பழுது பார்க்கும் தனது ஷெட்டுக்கு ‘அமீகோ கேரேஜ்’  என பெயர் சூட்டியிருக்கிறார். கார்களை பழுது பார்ப்பது அவரது தொழில் என்றால், அந்த ஸ்பானிஷ் பெண் கொடுத்துவிட்டுச் சென்ற கிராமபோனில் ஸ்பானிஷ் பாடல்கள் கேட்பது, மது அருந்தி போதையில் திளைப்பது அவரது பொழுதுபோக்கு. இவை மட்டும் அல்ல, அவர் சட்டவிரோதமாக கஞ்சா சில்லறை வியாபாரமும் செய்து வருகிறார். இதனால் அப்பகுதியில் வாழும் மக்கள் அமீகோ கேரேஜையும், அதன் உரிமையாளரான ஆனந்தையும் வெறுக்கிறார்கள். அவர்கள் தங்கள் பிள்ளைகளை, “அந்த கேரேஜ் பக்கம் போகவே கூடாது” என்று சொல்லி கண்டிப்புடன் வளர்க்கிறார்கள்.

பிளஸ்-2 படிக்கும் மாணவரான நாயகன் ருத்ரா (மாஸ்டர் மகேந்திரன்), அவரது வயதிலுள்ள எல்லா விடலைப் பருவ இளைஞர்களைப் போல நண்பர்களோடு சேர்ந்து விளையாடுவது, அரட்டையடிப்பது என ஜாலியாக வாழ்ந்துவருகிறார். ட்யூஷன் படிக்கப்போன இடத்தில், ட்யூஷன் டீச்சர் மகளான பட்டப்படிப்பு மூன்றாம் ஆண்டு படிக்கும் ரம்யாவை (தீபா பாலு) பார்த்ததும் அவருக்கு ரம்யா மேல் ’கிரஷ்’ ஏற்படுகிறது. இதை அறிந்த ரம்யா, “டேய், உன் வயது என்ன, என் வயது என்ன? நீ எனக்கு தம்பிடா” என்று கூறி புத்திமதி சொல்லிவிட்டு மேற்படிப்புக்காக புனே சென்றுவிடுகிறார்.

இந்நிலையில், ஏதோ ஒரு தவறுக்காக, ருத்ராவையும், அவரது நண்பர்களையும் பள்ளிக்கூட மைதானத்தில் முழங்காலில் நிற்க வைக்கும் இயற்பியல் ஆசிரியர், பைப்பை எடுத்துவந்து அவர்களை அடி அடி என அடிக்கிறார். அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்று நினைக்கும் ருத்ராவும் நண்பர்களும், தங்களது பெற்றோர்கள் ”போகவே கூடாது” என சொல்லியிருந்த அமீகோ கேரேஜுக்கு வந்து, ஆனந்தை சந்தித்து புகார் செய்கிறார்கள். அவர் இயற்பியல் ஆசிரியரை கேரேஜுக்குத் தூக்கி வந்து, ருத்ரா அண்ட் ஃபிரண்ட்ஸ் முன்னிலையில் முழங்கால் போட வைத்து, திட்டி, எச்சரித்து அனுப்புகிறார். இதில் திருப்தி அடையும் ருத்ரா அண்ட் ஃபிரண்ட்ஸ், அப்போதிருந்து அமீகோ கேரேஜுக்கு வருவது, ஆனந்துடன் சேர்ந்து புகைப்பது, குடிப்பது, ஜாலியாக அரட்டை அடிப்பது என பொழுதைக் கழித்தபடியே பள்ளி – கல்லூரி படிப்புகளை முடிக்கிறார்கள்.

ஒருநாள் பார் பார்க்கிங்கில் ருத்ராவுக்கும், ரவுடி குருவுக்கும் (தாசரதி) சிறு பிரச்சனை ஏற்படுகிறது. அப்போது ஆத்திரத்தில் ரவுடி குருவை அடித்துவிடுகிறார் ருத்ரா. இதனால் வன்மம் வளர்க்கும் குரு, அப்போதிருந்து ருத்ராவை பார்க்கும்போதெல்லாம் வலியப் போய் வம்பு இழுக்கிறார். இது பற்றி ஆனந்திடம் ருத்ரா சொல்ல, அவர் ருத்ராவை அழைத்துக்கொண்டு குருவின் ’பாஸ்’ ஆன முத்துவிடம் (முரளிதரன் சந்திரன்) போய் தன்மையாக எடுத்துச் சொல்ல, முத்து குருவைத் திட்டி அடக்கி வைக்கிறார்.

மகனின் போக்கும், பழக்க வழக்கங்களும் பிடிக்காத ருத்ராவின் அப்பா, அவருக்கு அறிவுரை கூறி, ஒரு நல்ல வேலையில் சேர்த்துவிடுகிறார். அதன்பின் ருத்ரா பொறுப்பானவராக மாறிவிட, அவருடைய வாழ்க்கையும் கொந்தளிப்பு அடங்கி சீராகி விடுகிறது. தன்னுடன் பணி புரியும் தமிழ் (ஆதிரா) மீது ருத்ராவுக்கு காதல் ஏற்படுகிறது. பதினேழு வயதில் திருமணமாகி, சில நாட்களிலேயே கணவன் இறந்துவிட விதவையான தமிழ், ருத்ராவின் காதலை ஏற்க முதலில் தயங்கினாலும், பிறகு ஏற்றுக்கொள்கிறார்.

இப்படி அமைதியாக செல்லத் துவங்கிய ருத்ராவின் வாழ்க்கையில் மீண்டும் குறுக்கிடுகிறார் ரவுடி குரு. ருத்ராவும், தமிழும் காதலிப்பது தெரிந்து இருவரிடமும் வலிய வம்பு இழுக்கிறார். பிரச்சனை வேண்டாம் என்று நினைக்கும் ருத்ரா, குருவின் ’பாஸ்’ ஆன முத்துவிடம் சொல்லி சமாதானமாக தீர்வு காணலாம் என திட்டமிடுகிறார். அதே நேரம் “நம் எதிரிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு உங்களைக் கொல்ல ருத்ரா வருகிறான்” என்று முத்துவிடம் பொய் சொல்லி அவரது மண்டையை கழுவி விடுகிறார் குரு.

கஞ்சா விற்ற வழக்கில் ஆனந்த் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால், ருத்ரா, தான் மட்டும் தனியே முத்துவைச் சந்திக்க, சமாதான முயற்சியாக வருகிறார். ஆனால், அவர் தன்னை கொல்ல வருவதாக நினைக்கும் முத்து, அவரை போட்டுத்தள்ள தனது அடியாட்களுக்கு உத்தரவிடுகிறார். அந்த நிமிடம் முதல் ருத்ராவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கிறது? அவை அவர் வாழ்க்கையை எப்படி தலைகீழாக மாற்றி விடுகின்றன? என்பது ‘அமீகோ கேரேஜ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

ஒரு சாதாரண இளைஞர், தான் எடுக்கும் சின்னச் சின்ன முடிவுகளின் விளைவுகளில் சிக்கி, எப்படி விபரீதமான கேங்ஸ்டர் ஆகிறார் என்பதைச் சொல்லுகிற அதேவேளை, கேங்ஸ்டர் ஆகாமல் இன்றைய இளைஞர்களைத் தடுத்து எச்சரிக்கும் படமாகவும் இதை படைத்திருக்கும் அறிமுக இயக்குநர் பிரசாந்த் நாகராஜனுக்கு பாராட்டுகள். வழக்கமான கேங்ஸ்டர் படங்களில் கேங்ஸ்டரையும், ரவுடியிசத்தையும் மேன்மைப்படுத்தி உயர்வாகக் காட்டுவதுபோல் இதில் காட்டாதது மட்டுமல்ல, அப்படி மேன்மைப்படுத்தி காட்டுவதற்கு எதிராக இயக்குநர் ஒரு காட்சியையும் படத்தில் வைத்திருக்கிறார். அதாவது, துபாயில் வேலை பார்க்கும் பழைய நண்பர் ஒருவர் ஊருக்குத் திரும்பி வந்திருப்பார். அவர் தன் நண்பரான நாயகன் கேங்ஸ்டராக இருப்பதைப் பார்த்து அகமகிழ்ந்து, “சினிமாவில் காட்டுகிற மாதிரி ’கெத்து’ வாழ்க்கையா?” என கேட்க, நாயகன் மனவேதனையுடன் “இல்லை. ஒரு கேங்ஸ்டர் வாழ்க்கை உண்மையில் சினிமாவில் காட்டுவது போல் சிறப்பானது இல்லை” என்கிற ரீதியில் பதில் அளிப்பார். அதுபோல், கிளைமாக்ஸில், நாயகன், தன் வாழ்க்கையின் இறுதி நொடிகளில், முன்பு பார் பார்க்கிங்கில் ரவுடி குருவை அடித்தது போல் அடிக்காமல் இருந்திருந்தால்… என்பதில் தொடங்கி, அடுத்தடுத்து தான் அவசரப்பட்டு எடுத்த முரட்டு முடிவுகளை எடுக்காமல் இருந்திருந்தால்… எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்த்து ஏங்குவது கிளாஸ். இது போன்ற காட்சிகளால் இயக்குநரின் சமூகப் பொறுப்புணர்வும், தனித்தன்மையும் வெளிப்படுகின்றன. வாழ்த்துகள்.

திரைக்கதை மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கிறது. கதாபாத்திரங்கள் மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதனால், நாயகன் ருத்ராவாக வரும் மாஸ்டர் மகேந்திரன், அமீகோ கேரேஜ் உரிமையாளராக வரும் ஜி.எம்.சுந்தர், நாயகி தமிழாக வரும் ஆதிரா, ரவுடி குருவாக வரும் தாசரதி, அவரது ‘பாஸ்’ முத்துவாக வரும் முரளிதரன் சந்திரன், கல்லூரி மாணவி ரம்யாவாக வரும் தீபா பாலு உள்ளிட்ட ஒவ்வொருவரும் தத்தமது கதாபாத்திரமாக சுலபமாக மாறி, தத்ரூபமாக திரையில் அருமையாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

விஜயகுமார் சோலைமுத்துவின் ஒளிப்பதிவும், பாலமுரளி பாலுவின் இசையும் படத்தின் மேக்கிங்குக்கு பலம் சேர்த்துள்ளன.

‘அமீகோ கேரேஜ்’ – முற்றிலும் வித்தியாசமான கேங்ஸ்டர் படம்! அவசியம் கண்டு களியுங்கள்!