சரவணன் இருக்க பயமேன் – விமர்சனம்

தேசியகட்சி அரசியலோடு ஆவியையும் கலந்து காமெடி படமாக வெளிவந்திருக்கிறது ‘சரவணன் இருக்க பயமேன்’.

டெல்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தேசியக்கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் மதன் பாப். அவருக்கான பிரியாணியில் சிக்கன் பீஸ் இல்லாத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்குகிறார். அந்த  கட்சியில் தமிழக தலைவராக சூரி பொறுப்பேற்கிறார். வேலை இல்லாமல் ஊர் சுற்றித் திரியும் நாயகன் உதயநிதி ஸ்டாலினும், அவரது நண்பர் யோகி பாபுவும் சூரியுடன் அந்த கட்சியில் இணைகின்றனர்.

போஸ்டர் அடிக்கும் விவகாரத்தில் சூரிக்கும், இன்னொரு அரசியல்வாதியான மன்சூர் அலிகானுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. சூரியை கொல்லப்போவதாக மன்சூர் அலிகான் மிரட்டுகிறார். இதற்கு பயந்து தலைமறைவாகும் சூரி, பின்னர் உதயநிதியின் அறிவுரைப்படி துபாய்க்கு சென்றுவிடுகிறார்.

கட்சியை அடுத்த கட்டத்துக்கு வளர்த்தெடுக்கும் உதயநிதி, சூரிக்கு பதிலாக புதிய தலைவராக நியமிக்கப்படுகிறார். இதை அறியும் சூரி, உதயநிதியால் தான் தன் வாழ்க்கை வீணாகிவிட்டது என கொந்தளித்து, உதயநிதியை பழி வாங்க களம் இறங்குகிறார். சிறுவயதிலிருந்தே உதயநிதியோடு சண்டையிட்டுவரும் நாயகி ரெஜினா, சூரியுடன் இணைந்து உதயநிதிக்கு தொல்லை கொடுக்கிறார்.

இவர்களது கூட்டணிக்கு எதிராக உதயநிதிக்கு உதவ முன்வருகிறது, அவரது முன்னாள் தோழியான ஸ்ருஷ்டி டாங்கேவின் ஆவி.

இறுதியில் வெற்றி பெற்றது சூரி – ரெஜினா கூட்டணியா, உதயநிதி – ஸ்ருஷ்டி ஆவி கூட்டணியா? இவர்களின் அரசியல் பயணம் என்ன ஆனது? என்பது படத்தின் மீதிக்கதை.

முதல்முறையாக உதயநிதி ஸ்டாலின் அரசியல் கலந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காமெடி கலந்த அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும், நடனம் ஆடுவதிலும் முந்தைய படங்களைவிட தற்போது மெருகேறி இருக்கிறார்.

ரெஜினா, படம் முழுக்க ஸ்லீவ்லெஸில் வந்து ரசிக்க வைக்கிறார். உதயநிதிக்கு எதிராக சூரியுடன் சேர்ந்து ரெஜினா போடும் ஆட்டம் ரசிக்கும்படி இருக்கிறது.

ஒரு பாடல் மற்றும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

யோகிபாபு எப்போதும் போல தனது தனித்துவமான நகைச்சுவையால் ரசிக்க வைத்திருக்கிறார். காமெடி வில்லனாக நடித்திருக்கும் சூரி கலகலப்பூட்டுகிறார்.

மன்சூர் அலிகான், லிவிங்ஸ்டன், ரோபோ சங்கர், சாம்ஸ், ரவி மரியா என அனைவரும், அவரவர் பங்குக்கு படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளனர்.

காமெடி படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் எழில், இந்த படத்திலும் தன் கைவரிசையை காட்டியிருக்கிறார்.

கே.ஜி.வெங்கடேசின் ஒளிப்பதிவு தெளிவாக இருக்கிறது. காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டி.இமானின் பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

‘சரவணன் இருக்க பயமேன்’ – சிரிப்பாய் சிரிக்கலாம்!