’பிக் பாஸ்’ அசீமுக்கு காலத்தின் குப்பைத்தொட்டி காத்திருக்கிறது!

தொழில்நுட்ப நவீனங்கள் அராஜக அதிகாரக் கூட்டத்திடம் மாட்டுகையில் என்னவாகும்?

மோடி பிரதமர் ஆவார்.

அசீம் பிக் பாஸ் வின்னர் ஆவார்.

பரவலாக அசீமின் வெற்றி சார்ந்து சமூகதளங்களில் அதிருப்தியை காண முடிகிறது. பிக் பாஸின் முடிவு அபத்தம் ஆவது இது முதல்முறை அல்ல. பலமுறை பிக் பாஸ் அறம் பிறழ்ந்திருக்கிறது.

முதல் சீசனில் ஓவியாவின் அற்புதத்தை கையாள முடியாமல் ஜுலி, காயத்ரி ரகுராம், ஆரவ் போன்றோரை வைத்து சீண்ட வைத்து, அவர் மனமொடிந்து நிகழ்ச்சியின் நடுவே வெளியேறும் நிலை ஏற்பட்டு இறுதியில் ஆரவுக்கு பிக் பாஸ் வெற்றி சூட்டப்பட்டது.

எனவே பிக் பாஸின் முடிவுகளில் அறத்தை நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை.

ஓவியாவுக்கு நிகரான புகழை ஆரி பெற்றார். ஆரியின் விஷயத்தில் நேர்ந்தவை யாவும் சுவாரஸ்யம் ஆனவை. அவரே எதிர்பார்க்காமல் நியாயமான அவரது இயல்பில் organic-காக ஒரு rebel-லாக அனைவரையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றார். இன்றைய விக்ரமனின் நியாய உணர்வு, போராளித்தன்மை போன்றவற்றை பிரசாரத்தன்மை ஏதுமின்றி அவர் கொண்டிருந்தார். ஆனால் ஓட்டுகளை வேட்டையாடும் தொழில்நுட்ப வியூகங்களும் அரசியல் பின்னணியும் கூடிய அசீம் போன்ற ஓர் எதிராளி அவருக்கு வாய்க்கவில்லை. மேலும் அவருக்கு உலகெங்கும் வாழும் புலம்பெயர் தமிழர் ஆதரவும் இருந்தது.

மறுபக்கம் பார்த்தால் ஒரு பெரும் villain அல்லது evil-ஐ ஆரி இருந்த பிக் பாஸ் சீசன்தான் முதன்முறையாக கண்டது எனலாம். நவதாராளவாத இளைஞர்கள் பலரும் என்னிடம் பாலாவை பிடிக்கும் என்றார்கள். ஆரியை பூமர் என குறிப்பிட்டிருக்கிறார்கள். குறைந்தபட்ச நாகரிகம் என்கிற எல்லையை பிக் பாஸ் தாண்டத் தொடங்கியது ஆரி சீசனில்தான்.

பாலா மூலமாக பிக் பாஸ் உருவாக்கிய வகைமையின் அடுத்தக்கட்ட பாய்ச்சல்தான் அசீம்.

அசீம் ஓர் அருவருப்பான பிறவி. அவர் உண்மையில் ஒரு மனவியல் மருத்துவரை அணுக வேண்டிய நோயாளி.

அகங்காரம், பிடிவாதம், திமிர், அருவருப்பு, வெட்கமின்மை, சுயமரியாதை இன்மை, தனிமனிதவாதம், manipulation, சுயநலம், போலித்தன்மை போன்ற எல்லா கேவலங்களின் மிகுதிகளையும் கொண்டவர். மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மீது அசீமுக்கு என்ன கோபமோ சிவாஜியின் உடல்மொழியை அணிந்துகொண்டு தன்னுடைய அருவருப்புகளை கொட்டியிருக்கிறார் அவர்.

ஏற்கனவே Paid PR team-கள், கட்சி சமூகதள அணிகள் என பலவற்றின் துணையோடு வாக்குகளை பெறும் ஏற்பாட்டு திட்டத்துடன் அசீம் வந்திருந்தபோதும் எதிர்மனநிலை ஆராதனையும் வெற்றி மட்டுமே தர்மம் என நம்பும் தலைமுறையும் அவருக்கு அளித்த ஆதரவு வெற்றி வாய்ப்பை அதிகரித்தது.

மோடி எப்போதுமே ‘தான் அற்புதமாக நாட்டை ஆளுவதாக’ கூசாமல் பொய் பேசுவார். வெட்கம், கூச்சம், சுரணை என எதுவுமே இருக்காது. எப்படி ஒரு மனிதன் இப்படி இருக்க முடியுமென ஒரு தரப்பு அவரை அருவருத்துக் கொண்டிருக்கும்போதே, ‘இத்தனை பேரை இவர் வெறுப்பேற்றிக் கொண்டிருக்கிறாரே, இவர்தான் மாஸ்’ என நினைக்கும் ஒரு தரப்பு உண்டு. மேலும் ‘இவர் சொல்பவற்றுக்கு பெரும் எதிர்ப்பு இல்லாமல் இவர் தொடர்ந்து நீடிக்க முடிகிறதெனில், இவர் சொல்வதே உண்மை’ என ஒரு நம்பும் பெரும் தரப்பும் உண்டு.

‘வெற்றி அடைந்தோரே வரலாறுகளை எழுதுகின்றனர்’ என்கிற தன்மைக்கு ஒத்துப்போகும் மனநிலை!

இல்லையெனில் வரலாற்றில் எப்படி ஹிட்லரோ முசோலினியோ இஸ்ரேலோ அமெரிக்காவோ இலங்கை பேரினவாதமோ உருவாகியிருக்க முடியும்?

அசீம் அத்தகைய அடக்குமுறையின் வடிவம்!

பிக் பாஸில் அவர் வெற்றி அடையலாம். ஆனால் வாழ்க்கையில் அவர் தோற்பார். மீண்டும் மீண்டும் தோற்பார். இது சாபமல்ல, யதார்த்தம்!

இவ்வுலகில் எல்லாரும் அறம் பேசும் விக்ரமன்களாக மட்டும் இருக்கப் போவதில்லையே! அசீமை காட்டிலும் பெரிய மொடாமுழுங்கிகளும் இருப்பர். அறத்தை கலாஷ்னிகோவ் கொண்டு நிலை நாட்டும் ராக்கி பாய்களும் இருப்பர்.

Life boomerangs whatever you boomerang!

மற்றபடி அசீம், வாக்குகள் அதிகம் பெறும் ஏற்பாட்டின் வழி வெற்றிக்கான பாசாங்கை உருவாக்கினார். பிறகு அந்த போலி வெற்றி பிம்பத்தை கூச்ச நாச்சமே இன்றி claim செய்துகொண்டே இருந்தார். வெகுமக்களிடம் இருக்கும் தெளிவு கொள்ள முடியாத ஊசலாட்டத்தை அவர் கைப்பற்றினார். வெற்றி பெற்றார்.

என்னை பொறுத்தவரை விக்ரமன் தன் செயல்திட்டத்தில் தெளிவாக இருந்தார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் தன் அரசியலை முன்னிறுத்திக்கொண்டே இருந்தார். துருத்தலாக தெரிந்தாலும் கவலைப்படாமல் அவர் தன் அரசியலை எந்த வெகுஜனத்தன்மையுடனும் சேர்த்து சமைக்காமல் பச்சையாகவே பரிமாறிக் கொண்டிருந்தார். அது அரசியல் புரிதல் கொண்டோருக்கு நல்ல விஷயமாக பட்டாலும் சாமானியருக்கு செயற்கையாகவும் அந்நியமாகவும் தெரியும் ஆபத்தும் உண்டு.

ஒரு வெகுஜன ஊடகத்தில் நீங்கள் வெகுஜன மொழியில்தான் அரசியலை முன் வைப்பதே வெற்றி. அதுதான் பராசக்தி, அதுதான் மெட்ராஸ்!

விக்ரமன் பிக் பாஸில், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியலாகதான் முழுவதும் நின்றாரே ஒழிய, விக்ரமனுக்கான இயல்பிலிருந்து நிற்கவில்லை. ஆரிக்கும் விக்ரமனுக்கும் இருந்த முக்கியமான வேறுபாடு அது. ஆரி முன்னிறுத்தியது இயல்பு, விக்ரமன் முன்னிறுத்தியது அரசியல்.

மற்றபடி விக்ரமனின் நோக்கம் நல்ல நோக்கம். அதில் நமக்கு எந்த விமர்சனமும் இல்லை.

தனலட்சுமி, ambition-ம் தன்னிலைவாதமும் கொண்டவர். அவரிடம் சென்று ‘நீங்க தனலட்சுமிதானே?’ எனக் கேட்டால், அதெப்படி நீங்கள் கேட்கலாம் என கேட்பவர். Adamant and self centred.

ஆயிஷா, தெளிவாக சிந்திப்பதாக நினைத்து தவறாக சிந்திப்பவர். அதை பொது நலத்துக்காக செய்வதாகவும் நம்பிக் கொள்பவர்.

கதிரவன் நம் ‘positivity’ கூட்டத்தை சேர்ந்தவர். தான் சரியாக இருந்தால் எல்லாம் சரியாகி விடுமென நம்புபவர். மேம்போக்கான அரசியல் புரிதல் கொண்ட லிபரல்.

அமுதவாணன் தன்னை ஒருவர் விமர்சிக்கும் வரை நன்றாக பழகுவார். விமர்சித்து விட்டால் அணி கட்டுவார். நகைச்சுவையில் கூட குண்டு வைப்பார்.

குயின்சி உணர்திறன் கொண்டவர். நியாயமாக பேசி நடந்து கொள்பவர். வயது கொடுக்கும் பக்குவமின்மையில் தவறு செய்தாலும் மன்னிப்பு கேட்டு திருத்திக் கொள்பவர்.

ஜனனி எடுப்பார் கைப்பிள்ளை.

ரட்சிதா அழகு. காயங்களால் பட்டு போன மரம்!

மைனா, typical Vijay TV product.

ஜிபி முத்து சீக்கிரமே வெளியே சென்றது, அவருக்கு நல்லது.

மணிகண்டன் தன்முனைப்பு கொண்ட 2k kid. ஆச்சரியமாக, அவ்வபோது பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்கும் தன்மையும் இருக்கிறது.

பிக் பாஸின் இந்த சீசனில் நேர்ந்த அற்புதம் ஷிவின் மட்டும்தான். பேரழகு அவர்.

பெண்மைக்குரிய பல ரசனைகளை அவர் தன்னுடைய அலங்காரத்தில் அழகாக வெளிப்படுத்தினார். அந்த வெளிப்பாடுகள் அவரது உடலை விட்டு வெளியே வர யத்தனிக்கும் பெண்ணை கவித்துமாக அடையாளப்படுத்தின.

தலைகுளித்து துண்டு கட்டி வரும் பெண்ணாக, தாவணி கட்டி நெற்றியில் சிறு பொட்டிட்டு வரும் பெண்ணாக, barbie doll-ஆக என அவர் ரசித்த பெண்மை வடிவங்களை தன்னில் அவர் பிரதிபலித்த தருணங்களில் ஒரு குழந்தையின் அப்பழுக்கற்ற வெகுளித்தன்மை பூத்துக் கொண்டே இருந்தது. பெரும்பாலான தருணங்களில் சரியான விஷயத்துக்கு நின்றார். யாரும் பேசத் தயங்கும்போது கூட எந்த தயக்கமுமின்றி துணிச்சலாக தன் வாதத்தை அவர் தொடர்ந்து வைத்திருக்கிறார்.

விக்ரமன் சொன்னது போல், விஜய் டிவி தன் ஸ்டண்ட் காரணங்களுக்கேனும் ஒரு மிகப்பெரிய புரட்சியை ஷிவின் வழியாக நிகழ்த்தியிருக்கிறது.

அசீமை பிடிக்காமல் இருக்கலாம். விக்ரமனை கூட பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் ஷிவினை உங்களுக்கு பிடிக்காமல் இருக்கவே முடியாது. இந்த பிக் பாஸ் சீசனின் வெற்றியாக நான் பார்ப்பது ஷிவின் மட்டும்தான்.

பிக் பாஸின் வெற்றிகளில் எப்போதும் எனக்கு நம்பிக்கை இல்லை. பொதுவாய் வெற்றிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. பிக் பாஸை தாண்டி விக்ரமன் மின்னுவார். அவருக்கான பயணம் நீண்டது. அதை அவர் செவ்வனே சிறப்பாக செய்வார்.

அசீமுக்கு பிக் பாஸை தாண்டி ஒன்றுமில்லை. ஏற்கனவே பிக் பாஸில் வெற்றி அடைந்தவர்கள் சினிமாக்களிலோ சமூகத்தில் பெரும் உயரத்தை எட்டிவிடவெல்லாம் இல்லை. நிலைமை இப்படியிருக்க, ஒரு மானக்கேடான வெற்றியை பெறும் அசீமுக்கெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமெல்லாம் நேர்ந்துவிடாது. அதிகபட்சம் விஜய்டிவியின் காமெடி நிகழ்ச்சிகளில் தலை காட்டலாம். ஒன்றிரண்டு சீரியல்கள் கிடைக்கலாம்.

வெற்றியை தாண்டி பிக் பாஸை பார்க்கக் காரணம், மனித இயல்புகளை குறித்த புரிதல்களை நமக்கு அது கொடுக்கும் என்பதே. தனி மனிதன், குழு மனிதன், விழுமிய மனிதன், நாம் வாழும் சமூகம், சுற்றியுள்ள மனிதர்கள், அவர்களின் தன்மைகள் பற்றிய செய்தியை பட்டவர்த்தனமாக முகத்திலறைந்து பிக் பாஸ் சொல்லும்.

இல்லையெனில் சமூகத்தின் இயல்புக்கு பொருந்தக் கூடிய தன்மை கொண்ட விக்ரமனை விடுத்து அசீம் தேர்ந்தெடுக்க பயன்டுத்தப்பட்டிருக்கும் social media trends, negative publicity, boosted up fame, social media flamed toxicity, constructed realities and choices, paid promotions முதலியவற்றை பற்றி பேசும் களம் கிடைத்திருக்குமா?

இத்தனைக்கும் பிறகு மோடி எப்படி வெற்றி பெற முடிகிறது எனக் கேட்டுக் கொண்டிருந்தோமே?

விடை கிடைத்ததா?

அசீமுக்கு காலத்தின் குப்பைத்தொட்டி காத்திருக்கிறது.

விக்ரமனுக்கு அரசியல் வாழ்க்கை காத்திருக்கிறது.

ஷிவின் பயணப்பட ஒரு பெரும் உலகமே காத்திருக்கிறது.

நாம் அறத்தையும் தாண்டி சிந்திக்க வேண்டிய அவசியம் இன்னும் காத்துக் கொண்டே இருக்கிறது.

RAJASANGEETHAN