ஓவியா ஆரவ்விடம் பட்டும் படாமல் தன் காதலை மறுபடியும் முன்வைத்தது அட்டகாசம்!

பிக் பாஸ் – 26.07.2017

***

நடனம் என்பது இரண்டு வகை. தனக்காக ஆடுவது ஒன்று. மற்றவர்களுக்காக என்பது இரண்டு. பின்னதை பயிற்சி பெற்றவர்கள் செய்யும்போது தான் அழகாக இருக்கும். ஆனால் தனக்காக ஆடும்போது அதில் தன்னிச்சையான குதூகலமும் உண்மையான மகிழ்ச்சியும் கிடைக்கும். அது ஒழுங்கின்மையோடு இருந்தாலும் பரவாயில்லை. பார்ப்பவர்களையும் தொற்றிக்கொள்ளும் உற்சாகத்துடன் ரகளையாக ஆடுவது சில பேருக்கே வாய்க்கும். மேற்கத்திய கலாசாரத்தைப் போல எல்லோருக்கும் நடனம் ஆடத் தெரியும் பழக்கம் நம்மிடம் இல்லாததும் அதற்காக வெட்கப்படுவதும் ஒரு பெரிய கலாசார குறை.

இந்த நோக்கில் ஓவியா தினமும் காலையில் ஆடும் நடனம், அதிலுள்ள எனர்ஜி, உற்சாகம் எல்லாமே அத்தனை அழகாக இருக்கிறது. இனி நடிகை என்கிற நிலையுடன் அவர் டான்ஸ் மாஸ்டராக கூட ஆகலாம் போலிருக்கிறது.

***

தனது கெட்டப்பை மாற்றிக்கொண்ட ஜூலி, ஓவியா மாதிரியே தன்னை உற்சாகப்படுத்திக்கொள்ள நகலெடுப்பது போல் தோன்றுகிறது. நல்ல விஷயம்தான். ஆனால் அது படு செயற்கையாகத் தெரிகிறது. ‘கான மயிலாட கண்டிருந்த வான்கோழி’ என்கிற பாடல்தான் நினைவிற்கு வருகிறது.

***

சிநேகன், கழிவறையின் பக்கத்தில் ஜூலிக்கு தந்த உபதேசம் அற்புதம். ‘இந்த பிக் பாஸையும் தாண்டி வெளியே நூறு வருடங்களுக்கான வாழ்க்கை இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்காக உன் சுயத்தை இழக்காதே’ என்றது நம் எல்லோருக்குமே பொருந்தும். இது போன்ற சமயங்களில் சிநேகனை பிடித்துப் போகிறது.

***

ஆரவ், ஓவியாவிற்கு ஆதரவாக உபதேசித்ததும், அப்போது பட்டும் படாமல் ஓவியா தன் காதலை மறுபடியும் முன்வைத்ததும் அட்டகாசம். .. கவிதையான கணங்கள்.

யப்பா.. ஆரவ்.. எங்க தலைவிக்கே உபதேசமா… சரி… அவங்களுக்கு பிரச்சினை வராம பார்த்துக்கப்பா’ என்று சொல்லத் தோன்றியது.

பெண்கள் தங்கள் குமுறலை கொட்டுவதற்கு எங்காவது ரகசிய இடம் தேடுவார்கள். சில ஆண்கள் இந்தச் சூழலை தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே யாரிடம் சொல்கிறோம் என்பது முக்கியம்.

***

காயத்ரி -ஜூலிக்கு இடையேயான பிரச்சனையை நேர்காணல் எடுப்பதின் மூலமாக பிக் பாஸ் தீர்த்து வைத்தது நல்ல உத்தி. (இதன் பின்னால் வேறு புறக்காரணங்கள் இருந்தாலும்).

5 விநாடி வீடியோ மேட்டரில் நான் ஓவியா சார்பாக சொல்லியிருந்தால் நீங்கள் என்னை biased ஆக நினைத்திருப்பீர்கள் என ஆரவ் சொல்லியது உண்மை. நிலைமை அப்போது அப்படித்தான் இருந்தது.

(‘ஜூலி பொய் சொன்னாள்’ என்று ஒரு நண்பன் என்கிற முறையிலாவது ஆரவ் சொல்லியிருக்கலாம்” என சக்தி உட்பட அனைவரும் எதிர்பார்ப்பது அவல நகைச்சுவை. ஏனெனில் ஜூலி வந்தது முதலே, அவள் பொய் சொல்கிறாள், நடிக்கிறாள் என்கிற பிம்பத்தை தொடர்ந்து குத்தியதே இந்தக் கோஷ்டிதான். இதில் ஆரவ் தனியாக சொல்ல என்ன இருக்கிறது)

***

தான் ஒவியாவை அடிக்கச் சென்றதை சக்தி இன்னமும் நியாயப்படுத்துவது போல் பேசிக் கொண்டிருப்பது முறையற்றது. ஆணாதிக்கம் அத்தனை எளிதில் மங்காதது.

***

காயத்ரி பாத்திரம் எத்தனை கோபக்காரராக இருந்தாலும் அவரை அனைவரும் ஒரு தாயின் பாத்திரத்தில் வைத்து பார்க்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதனால்தான் அவர் குறைந்த அளவில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். அவரது குறைகளையும் மீறி அந்த வீட்டில் கண்ணுக்குத் தெரியாத ஒரு தவிர்க்க முடியாத தலைமைப் பாத்திரம் அவருக்கு உருவாகி விட்டிருக்கிறது.

***

காயத்ரி – ஓவியா நேர்காணலில், ஓவியா சொன்ன ஒரு விஷயம் மிக முக்கியமானது.

“எனக்கு நீங்கள் அநீதி செய்து விட்டீர்கள். சரி. அதை இப்போதே நீங்கள் திருத்திக் கொள்ளலாம். ஏனெனில் இந்த நிகழ்ச்சி முடிந்து நீங்கள் வீட்டிற்குப் போன பிறகு ஒருவேளை உங்கள் தவறை அப்போது உணர்ந்து தாமதமாக வருந்தும் ஆபத்தைத்தான் நான் தவிர்க்க நினைக்கிறேன்’

மிக உயர்ந்த உள்ளத்தால்தான் இப்படி சிந்திக்க முடியும்.

***

காயத்ரி – ஓவியா உடன்படிக்கை ஏற்பட்டதும், எதிர்பார்த்தது போலவே ஜூலியின் முகத்தில் ஈயாடவில்லை. ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது. ஒருவகையில் அவரைப் பார்த்தால் பரிதாபமாகவும் இருக்கிறது. இனியாவது கடந்த கால கசப்புகளை அவர் தூர எறிந்துவிட்டு குழுவோடு இணைந்து கொள்ளலாம்.

ஆனால் வழக்கம் போல் பிரச்சனைகளின் ஊற்றுக்கண்ணாக அவரே இருப்பார் என தோன்றுகிறது.

***

‘மொகரக்கட்டை’ என்று சொன்னதுக்கு ‘சாரி’ என்று காயத்ரி சொன்னதும், ஓவியாவிற்கு ஆசுவாசம் ஏற்பட்டதோ இல்லையோ, நமக்கு ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன். காயத்ரியின் மீதிருந்த இதுவரையான எதிர் பிம்பம் ஒரே கணத்தில் பெருமளவு சரிந்து விழுந்ததை கவனித்திருக்கலாம்.

எவரையுமே நாம் பிரம்மாண்டமான வில்லனாக நினைத்து வசை பொழிய வேண்டாம் என்பதே இதில் உள்ள நீதி. (இது காயத்ரி பிம்ப சிதைவை தடுப்பதற்காக எடுக்கப்பட்ட புற அரசியலாக இருக்கக்கூடும் என்றாலும்).

***

நடுத்தர வயது வரைகூட குடும்பத்திடம் வெளிப்படுத்தப்படாத அன்பு எத்தனை துரதிர்ஷ்டவசமானது என்பதை வையாபுரியின் மூலம் உணர முடிகிறது. சற்று வைரமுத்து வாசனை வந்தாலும் அவர் குடும்பத்திற்காக சிநேகன் எழுதிய ‘இன்ஸ்டன்ட் கவிதை’ உண்மையிலேயே அற்புதம்.

***

நமீதாவின் எதிர்மறை பாத்திரத்தை ரைசா தன்னிச்சையாக எடுத்துக் கொண்டார். அவருடைய மேக்கப் செலவையும் ‘Luxury budget task’-ல் சேர்க்கலாம்.

SURESH KANNAN