“பாரதிராஜா ஒரு குரங்கு”: பார்த்திபன் கிளப்பிய பகீர்!

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்எல்பி தயாரிப்பில், பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ் நடிப்பில், நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

பாரதிராஜா, எஸ்.வி.சேகர், மனோபாலா, பார்த்திபன், தரணி, சிபிராஜ், விதார்த், பி.எல்.தேனப்பன், ஞானவேல்ராஜா, மைம் கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்எல்பி நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

விழாவில் பாரதிராஜா பேசுகையில், “பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம், வரமாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனாலும் இந்த படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்த படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்த தளிரை பாராட்டவே வந்தேன். நித்திலன் பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பான். அவன் மிக ஆழமான சிந்தனை உடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். இந்த படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கிப் போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப் பெரிய இயக்குநராக பாராட்டப்படுவார். என் வாழ்த்துகள்.

“விதார்த், மிக வீரியமான நடிகன். பெங்காலி சினிமாக்களையும் மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பைப் பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தைப் பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான். அவனுக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் ஒட்டுமொத்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்” என்றார் பாரதிராஜா.

k4

பார்த்திபன் தன் குருவின் குருவான பாரதிராஜாவை வித்தியாசமாக பாராட்டிப் பேசுகையில், “பாரதிராஜாவை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ் சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜாவுக்கு ஒரு பெரிய பாராட்டு விழா எடுக்க வேண்டும். ‘குரங்கு பொம்மை’ என்ற இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே பாரதிராஜாவை நான் வித்தியாசமாகப் பாராட்ட ஆசைப்படுகிறேன்.

“பாரதிராஜா நல்ல இயக்குநர்னு எல்லாரும் சொல்வாங்க. பாரதிராஜா சிறந்த மனிதர்னு சொல்வாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா பாரதிராஜா ஒரு “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து. கு – குணவான், ர – ரசனையாளர், ங் – இங்கிதம் தெரிந்தவர், கு – குவாலிட்டியானவர். இதுதான் நான் சொன்ன குரங்குக்கு அர்த்தம்..

“இந்த படத்தின் கதாநாயகி டெல்னா டேவிஸை எல்லோரும் பக்கத்து வீட்டுப் பெண் போல அழகாக இருக்கிறார் என்றார்கள். என் பக்கத்து வீட்டுல யாரும் டெல்னா டேவிஸ் மாதிரி அழகா இல்ல. எனவே, டெல்னா டேவிஸ், நீங்க என் பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்கன்னா, நானும் உங்களை என் பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொல்லிப்பேன்” என்றார் பார்த்திபன்.