7 நாட்கள் – விமர்சனம்

க்ரைம், சஸ்பென்ஸ், த்ரில் ஆகியவற்றை ஒரு சேரக் கொண்ட விறுவிறுப்பான படமாக வெளிவந்திருக்கிறது ‘7 நாட்கள்’.

பிரபல தொழிலதிபர் பிரபு. அவரது சொந்த மகன் ராஜீவ் கோவிந்த பிள்ளை. வளர்ப்பு மகன், சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரியாக இருக்கும் கணேஷ் வெங்கட்ராம்.

வழக்கமான தொழிலதிபர்களின் மகன்களைப் போல ராஜீவ் ஜாலியாக திரிகிறார். பல இளம்பெண்களுடன் பழகி வருகிறார். அப்படி அவர் பழகிய பெண்களில் 2 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.

இந்நிலையில், பிரபுவுக்கு ஒரு மர்ம போன் கால் வருகிறது. அதில் பேசும் மர்ம நபர், இரு பெண்களின் கொலைக்கு ராஜுவ் தான் காரணம் என்றும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளது என்றும் கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடையும் பிரபு, தன் மகன் ராஜீவுக்கு எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று அந்த வீடியோ ஆதாரத்தை கைப்பற்றும் பொறுப்பை கணேஷ் வெங்கட்ராமிடம் ஒப்படைக்கிறார்.

ஒரு கட்டத்தில் அந்த வீடியோ ஆதாரம் நாயகன் சக்தி வாசு, நாயகி நிகிஷா பட்டேல் ஆகிய இருவரில் ஒருவரிடம் இருக்கிறது என்பது கணேஷ் வெங்கட்ராமுக்கு தெரிய வருகிறது.

அந்த வீடியோ ஆதாரத்தை கைப்பற்ற கணேஷ் வெங்கட்ராம் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார். அவரது முயற்சிக்கு பலன் கிடைத்ததா? அந்த வீடியோவில் என்ன இருந்தது? அந்த பெண்கள் எப்படி உயிரிழந்தனர்? என்பது படத்தின் மீதிக்கதை.

நாயகனாக வரும் சக்தி வாசு, கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் வழக்கம் போல் பின்னி பெடலெடுத்திருக்கிறார். எனினும், வித்தியாசமான கெட்-அப்பையும், நடிப்பையும் டிமாண்ட் செய்யக்கூடிய கதாபாத்திரத்தையும், கதையையும் தேர்வு செய்வதில் அவர் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

இன்னொரு நாயகனாக வரும் கணேஷ் வெங்கட்ராம் ஒரு தனித்துவமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க ஸ்டைலீஷான போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார். அவருக்கு ஏற்ற கதாபாத்திரத்தை அவரது அனுபவ நடிப்பால் கச்சிதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

நாயகியாக வரும் நிகிஷா பட்டேல் அழகிலும் கவர்ச்சியிலும் ஈர்க்கிறார். அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான கதாபாத்திரம் அமையவில்லை என்றாலும், கதையோட்டத்திற்கு ஏற்ப வந்து போகிறார்.

இன்னொரு நாயகியாக வரும் அங்கனா ராய், கதைக்கு பக்கபலமான கதாபாத்திரத்தில் மிளிருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும், மிகையின்றி இயல்பாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

வில்லன் என நினைக்கத் தோன்றும் ராஜீவ் கோவிந்த பிள்ளையும் தனது சிக்கலான கதாபாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார்.

பிரபு ஒரு தந்தையாக, தொழிலதிபராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாசர் குறைவான காட்சிகளில் மட்டுமே வருகிறார். எம்.எஸ்.பாஸ்கர் – சின்னிஜெயந்த் கூட்டணியின் அட்டகாசங்கள் ரசிக்கும்படி இருக்கிறது.

நாயகன் சக்தி வாசு வளர்க்கும் நாய், நிறைய சேட்டைகளுடன் மனக்குரலில் பேசி கலகலப்பூட்டுகிறது.

கவுதம்.வி.ஆர் ஒரு த்ரில்லர் கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். ஆனால் திரைக்கதையில் அவர் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். கோட்டை விட்டிருக்கிறார். ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. அன்றாட வாழ்க்கையில் நிகழாத சில காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைக்கிறது.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு தரமாக ரசிக்கும்படி இருக்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக உள்ளது. டி.ராஜேந்தர் பாடிய பாடல் ஓகே ரகம். சண்டைக்காட்சிகள் சிறப்பு.

‘7 நாட்கள்’ – ரசிக்கலாம்!