பீஸ்ட் – விமர்சனம்

நடிப்பு: விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், வி.டி.வி.கணேஷ், யோகி பாபு மற்றும் பலர்

இயக்கம்: நெல்சன் திலீப்குமார்

தயாரிப்பு: ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன்

வெளியீடு: ரெட் ஜெயண்ட் மூவிஸ்

மக்கள் தொடர்பு: ரியாஸ் அகமது

நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’, சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ ஆகிய வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் மூன்றாவது படம், ‘மாஸ்டர்’ வெற்றிப்படத்துக்குப் பின் விஜய் நடித்துள்ள படம் என்ற வகையில் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ‘பீஸ்ட்’.

இப்படத்தின் கதை என்னவென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் தலைவர் உமர் ஃபாருக் பதுங்கியிருக்கிறார். அவரை கைது செய்வதற்கான சிறப்பு ஆபரேஷனில் ஈடுபடுகிறார் ‘ரா’ பிரிவு உளவாளி வீரராகவன் (விஜய்). இந்த நடவடிக்கையின்போது எதிர்பாராத விதமாக ஒரு குழந்தை கொல்லப்பட்டு விடுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் வீரராகவன், ‘ரா’ உளவாளி வேலையை விட்டுவிட்டு, ஒரு மனோதத்துவ மருத்துவரிடம் சிகிச்சை பெறுகிறார். அந்த மருத்துவரோடு ஒரு ஆடம்பரமான திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் அவர், அங்கு ப்ரீத்தியை (பூஜா ஹெக்டே) சந்திக்கிறார். காதலுக்கான அடித்தளம் அமைகிறது.

சென்னையில் வி.டி.வி.கணேஷ் நடத்திவரும் செக்யூரிட்டி அலுவலகத்தில் பணிபுரியும் ப்ரீத்தி, அதே அலுவலகத்தில் வீரராகவனுக்கும் வேலை கிடைக்க வழிவகை செய்கிறார். அலுவல் நிமித்தமாக வி.டி.வி.கணேஷ், வீரராகவன், ப்ரீத்தி ஆகியோர் ‘ஈஸ்ட் கோஸ்ட் மால்’ என்ற பெயரிலான மாலுக்குப் போகிறார்கள். அந்த மாலை தீவிரவாதிகள் திடீரென்று ஹைஜாக் பண்ணி தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்கள். மாலில் இருந்த வீரராகவன், ப்ரீத்தி, வி.டி.வி.கணேஷ், உள்துறை அமைச்சரின் மனைவி, மகள் உட்பட ஏராளமான பேர் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார்கள். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தங்களது தலைவன் உமர் ஃபாருக்கை விடுவிக்க வேண்டும் என்பது தீவிரவாதிகளின் கோரிக்கை.

தீவிரவாதிகளிடமிருந்து மக்களை வீரராகவன் மீட்டாரா? அவர் கையாண்ட உத்திகள் என்னென்ன? சிறையிலிருந்த உமர் ஃபாருக் விடுவிக்கப்பட்டாரா? இறுதியில் உமர் ஃபாருக் என்ன ஆனார்? என்பன போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது மீதிக்கதை.

’ரா’ உளவாளி வீரராகவன் கதாபாத்திரத்தில் விஜய் அசத்தியிருக்கிறார். வயதைக் குறைத்துக் காட்டும் வித்தையும், ஃபிட்டான தோற்றமும் அவருக்கு பிளஸ். நடனக் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் தூள் கிளப்பியிருக்கிறார். படத்தை ஒற்றை ஆளாக சுமப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

பிரீத்தி கதாபாத்திரத்தில் வரும் பூஜா ஹெக்டேவுக்கு, ’நாயகனின் காதலி’ என்பதைத் தவிர வேறு முக்கியத்துவம் எதுவும் இல்லை. அவரது அழகையும், நடனத்தையும் மட்டும் பார்த்து மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான். சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் அபர்ணா தாஸ் கவனம் பெறுகிறார்.

வி.டி.வி.கணேஷ் இங்கொன்றும் அங்கொன்றுமாக பேசும் காமெடி வசனங்கள் கொஞ்சம் சிரிக்க வைக்கின்றன. யோகி பாபு, ரெடின் கிங்க்ஸ் லீக்கு படத்தில் பெரிய ஸ்கோப் இல்லை.

செல்வராகவன், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் தத்தமது கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் படத்தின் முதல் பாதியை காமெடி, காதல், நடனம், அவ்வப்போது வரும் சண்டைக் காட்சிகள் ஆகிய மசாலாக்களை கலந்து, ரசிக்கிற விதமாய் கொடுத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் பார்வையாளர்களை வச்சு செய்திருக்கிறார். பெரிய ஏமாற்றம்.

அரதபழசான, மக்கிப்போன குப்பையான கதை, ரா உளவு அமைப்பு பற்றியோ, பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு பற்றியோ எந்த அறிவும் இல்லாமல் அமெச்சூராக அமைக்கப்பட்ட திரைக்கதை, படுகேவலமான க்ளைமாக்ஸ் என இயக்குனர் செய்த குற்றங்களின் பட்டியல் ரொம்ப நீளம்.

விஜய் இனிமேலாவது ஃப்ளுக்கில் வெற்றி பெற்றுவிடலாம் என்றில்லாமல், கதையறிவை வளர்த்துக்கொண்டு, நல்ல கதை – திரைக்கதையை தேர்ந்தெடுத்து நடிப்பது அவருக்கும், அவரது ரசிகர்களுக்கும் நல்லது. அதுபோல் விஜயகாந்த் – அர்ஜூன் காலத்திலேயே சலித்துப்போன ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்ற சரக்கைத் தூக்கி எறிந்துவிட்டு, இன்று நாட்டுக்கே ஆபத்தாக வளர்ந்துவரும் இந்துத்துவ பயங்கரவாதத்தை முன்னிறுத்தி, அதை வேரறுக்கும் வகையிலான படங்கள் செய்ய விஜய் துணிவு பெற வேண்டும். பார்க்கலாம்.

இப்படத்தில் தொழில்நுட்ப கலைஞர்களின் பணி சிறப்பு. குறிப்பாக ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடன இயக்குனர், கலை இயக்குனர் ஆகியோரின் பங்களிப்பைப் பாராட்டலாம்.

‘பீஸ்ட்’ – ஒரு தடவை பார்க்கலாம்!

Read previous post:
0a1a
”அம்பேத்கரின் பிறந்த நாள் இனி சமத்துவ நாள்”: முதலமைச்சர் அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சூரியன். பலர் வாழ்வில் கிழக்காக இருந்த பகலவன். சமூகம்

Close