எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் – விமர்சனம்

தலைப்பு சற்று நீளம் என்றாலும் வித்தியாசமாக இருக்கிறது என்பதாலும், செக்ஸ் ரீதியிலான பலத்த சர்ச்சையை ஏற்படுத்திய ‘லஷ்மி’ குறும்படத்தின் இயக்குனர் சர்ஜுன் இயக்கியுள்ள முதல் திரைப்படம் என்பதாலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம் இப்போது திரையில்.

அக்காவைக் கொன்ற அவளது கணவனைக் கொன்றுவிட்டு சிறை செல்கிறார் கிஷோர். இதனால், ஆதரவின்றி நிற்கும் அக்கா மகன் விவேக் ராஜகோபால் திருடனாகிறார். 15 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையாகும் கிஷோர், விவேக்குடன் சேர்ந்து கோடீஸ்வரரின் மகளான வரலட்சுமி சரத்குமாரை கடத்தி ரூ.8 கோடி கேட்கிறார். போலீஸிடம் போனால் கொலை செய்துவிடுவதாகவும் கூறுகின்றனர். இதனால், ஓய்வுபெற்ற டிஐஜி.யான சத்யராஜை அணுகுகிறார் வரலட்சுமியின் தந்தை. சத்யராஜின் மகளோ கடும் நோயால் பாதிக்கப்பட்டவர். அவரை விட்டுவிட்டு சத்யராஜ் எங்கும் நகர முடியாது என்பதால், வீட்டில் இருந்தபடியே கடத்தல்காரர்களைத் தேடும் பணியில் இறங்குகிறார். கிஷோர், விவேக்கின் பணம் பறிக்கும் திட்டம் என்ன ஆனது? வரலட்சுமி தப்பினாரா? சத்யராஜின் தேடலுக்கு வெற்றி கிடைத்ததா? என்பதற்கெல்லாம் பதில் சொல்கிறது மீதிக் கதை.

ஆள்கடத்தலை முன்வைத்து விறுவிறுப்பான திரில்லர் படம் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சர்ஜுன். விறுவிறுப்பு என்ற அம்சத்தில் பெருமளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவையற்ற கதாபாத்திரங்கள், கதைக்குத் தொடர்பில்லாத காட்சிகளைத் தவிர்த்து, எடுத்துக்கொண்ட கதையில் இருந்து விலகாமல் சீரான பாதையில் சுவாரசியமான கட்டங்களைக் கடந்து பயணிக்கும் திரைக்கதை படத்தின் திரில்லர் தன்மைக்கு வலுசேர்க்கிறது.

முன்னாள் காவல் அதிகாரி, வீட்டில் இருந்தபடியே விசாரணை செய்வது புதுமையாகவும், விசாரணை நகர்வுகள் சுவாரசியமாகவும் இருக்கின்றன. கடத்தல்காரர்கள் தப்பிக்க கையாளும் உத்திகளும் இயக்குநரின் புத்திசாலித் தனத்துக்கு சான்று. ஆனால் அவர்களது செய்கைகள், அவர்களுக்குள் ஏற்படும் மோதல்கள் ஆகியவற்றுக்கு வலுவான காரணங்கள் சொல்லப்படவில்லை.

சத்யராஜும், கிஷோரும் போட்டி போட்டு நடித்துள்ளனர். காவல் அதிகாரியின் மிடுக்கையும், மகள் மீது உயிரையே வைத்திருக்கும் தந்தையின் பரிவையும் தனது உடல்மொழி, பார்வையிலுமே கொண்டுவந்துவிடுகிறார் சத்யராஜ். எதார்த்தமான நடிப்பில் மின்னுகிறார். வாழ்வின் 15 ஆண்டுகளை சிறையில் தொலைத்தவரின் விரக்தியையும், நிதானமான அணுகுமுறையையும் கச்சிதமாகப் பிரதிபலிக்கிறார் கிஷோர். ஒட்டுமொத்த உழைப்பையும் நடிப்பில் காட்டி நிமிர வைக்கிறார். விவேக் ராஜகோபாலின் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. வரலட்சுமியின் நடனத் திறமையோடு, நடிப்புத் திறனும் நன்கு வெளிப்படுகிறது.

சென்னை மாநகரையும், பாழடைந்த தேவாலயத்தையும் சுதர்சன் சீனிவாசன் படம் பிடித்திருக்கும் விதம் ரசனை. சுந்தரமூர்த்தியின் பின்னணி இசை காட்சிகளின் விறுவிறுப்புக்கு வலுசேர்க்கிறது. பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும், படத்தின் வேகத்துக்கு முட்டுக்கட்டை போடுகின்றன.

சரியான இடங்களில் திருப்பங்களைப் பயன்படுத்தி இருக்கிறார் இயக்குநர். அது சரியாகவே எடுபடுகிறது. ஆனால், விசாரணை மந்தகதியில் செல்வதும், பரபரப்பின்றி காட்சிகள் மெதுவாக நகர்வதும் படத்துக்கு பாதகமாக அமைந்துவிடுகிறது. கடத்தல் காரர்களின் கதாபாத்திரங்கள் முழுமையாக புரியவைக்கப்படவில்லை. வரலட்சுமி ஏன் அவசரப்படுகிறார்? கிஷோரும் விவேக் ராஜகோபாலும் மோதும் இடத்துக்கு அவர் எப்படி வருகிறார் என்ற கேள்விகளுக்கு லாஜிக்கான பதில் இல்லை. கிளைமாக்ஸ் மெசேஜையும் இயக்குநர் சுற்றி வளைத்து சொல்வதால், சரியான தாக்கத்தை ஏற்படுத்த தவறுகிறது.

‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ – ஒருமுறை பார்க்கலாம்!

Read previous post:
0a1a
களரி – விமர்சனம்

முதலில் கோழையாக இருக்கும் நாயகன் பின்னர் வீரனாகி ஆக்ரோஷம் காட்டும் கதை. கேரளாவில் தமிழர் வாழும் பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் கிருஷ்ணா. அவர் குடிகார

Close