தீபாவளி நாள் சிந்தனை: “எது கொண்டாட்டம்?”

நரகாசுரன், கிருஷ்ணன், பூமாதேவி என சமய காரணக்கதைகளை மூலமாக கொண்டதுதான் தீபாவளி. ஓர் இனத்தை அழிக்க முனையும் அரசியல் வேறு அந்த காரணத்துக்கு பக்கத்துணை. அடிப்படையில் அது ஓர் அகங்காரத்துக்கான கொண்டாட்டம். அந்த அகங்காரத்தை காலம்தோறும் கடத்தி நீட்டிப்பதும் அதற்கான காரணத்தை அப்படியே தக்க வைப்பதும் மாத்திரமே இந்த பண்டிகை கொண்டாடப்படுவதற்கான அசல் நோக்கம்.

ஆனால், இன்றைய மாறிவரும் சமூக பொருளாதார சூழலில் பெரும்பான்மை மக்கள் இந்த சமயக் காரணங்களை தாண்டி வந்துவிட்டனர். குறைந்தபட்சம் பெருநகரங்களிலும் நகரங்களிலும். அவர்களுக்கு இது மற்றுமோர் விடுமுறை நாள். பழக்கத்தின் காரணமாக காலையில் கோவில் அதற்கு பின், அசைவ சமையல், மாலை சினிமா, பார்க், பீச் என முடிந்து போகிறது. அவ்வளவுதான்.

முதலாளித்துவத்தின் நுகர்வு கலாச்சாரம் இப்பண்டிகையின் சமய வேர்களை அறுப்பதற்கு பெருமளவுக்கு பயன்பட்டிருக்கிறது. தீபாவளி கொண்டாட மறுப்பவன் கூட, இந்த நாளில் கிடைக்கும் விற்பனை தள்ளுபடிகளை பயன்படுத்திக் கொள்ள நினைப்பதுதான் யதார்த்தம். நாம் செய்ய முடியாததை முதலாளித்துவம் செய்து கொண்டிருக்கிறது. இந்துக்களின் பண்டிகையாக மட்டும் இருந்த தீபாவளி, இன்று பல மதங்களின் குழந்தைகளும் இளைஞர்களும் கொண்டாடும் நாளாக மாறி உள்ளது. அப்படி ஆகும்போதுதானே அதிக நுகர்வாளர்கள் கிடைப்பார்கள்!

தீபாவளிக்கு மட்டும் அல்ல, முதலாளித்துவம் அடையாளம் அறுப்பது எல்லா விழாக்களுக்கும்தான். நாம் கொண்டாடும் பொங்கல் உட்பட. பொங்கலுக்கு இன்னும் சிறப்பு என்னவென்றால், இந்த தீபாவளியை உருவாக்கிய அகங்கார கும்பல் முதலாளித்துவத்துடன் சேர்ந்துகொண்டு பொங்கல் விழாவுக்கான வேர்களை அழிப்பதற்கு துடியாய் துடிக்கும் என்பதுதான்.

கொண்டாட்டங்களின் மறுமுனை பிரச்சினை, அவை பெருக்கி குவிக்கும் நுகர்வு!. இந்த நுகர்வு இன்றைய சமூக பொருளாதார சூழலில், சாமானியனை பலவாறாக பிளக்கிறது.

தொழிலாளர் நலன் பேணப்படாத நிறுவனங்களில் கிடைக்கும் ‘சம்பளத்துடன்-ஒருநாள்-விடுமுறை’யிலும் நிம்மதியாக ஓய்வு எடுக்க முடியாத அழுத்தம். ஊருக்கு செல்ல வேண்டும், துணிமணி எடுக்க வேண்டும், பலகாரம், பட்டாசு வாங்க வேண்டும் என அனைத்துக்கும் தேவைப்படும் பணம். அடுத்த குடும்பத்தை காட்டிலும் தன் குடும்பம் வசதியாக இருப்பதாக காண்பித்து கொள்ள வேண்டிய கற்பனை கட்டாயத்தில் வாங்குகிற கை மீறிய கடன்கள் என பலவாறாக!

கொண்டாட்டங்களுக்கான காரணமும் அவசியமும் புரிந்து அறிதல் வேண்டும். எல்லா விழாக்களையும் கொண்டாட வேண்டிய அவசியம் அல்ல. அப்படி செய்தால் நீங்கள் நுகர்வுக்கு பலியாகிறீர்கள். சமயங்களுக்கு கொண்டாடுகிறீர்கள் எனில் நீங்கள் அகங்காரத்துக்கு பறி போகிறீர்கள். நீங்கள் என்ன வாழ்க்கையை விரும்புகிறீர்கள்? எந்த வாழ்க்கை உங்களுக்கு நிம்மதி தரும்?

உங்களுக்கான வாழ்க்கை மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கான விழாவையும் நீங்களே தேர்ந்தெடுங்கள். அந்த விழாவுக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டாலும் நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அப்படியான விழாக்கள் அர்த்தம் பொதிந்தவையாக இருக்கும். உண்மை கொண்டாட்டமாக இருக்கும்.

உங்களை, மனதை, வாழ்வை, சந்தோஷத்தை இயக்கிக் கொண்டிருக்கும் கண்ணுக்கு தெரியாத அந்த கயிற்றுச்சரடுகளை அறுத்தெறியுங்கள். உங்களுக்கான கொண்டாட்டம் கிடைக்க தொடங்கும். பல தரப்புகள், பல காரணங்களுக்காக உருவாக்கும் விழாக்களை, அர்த்தம் தெரியாமல் கொண்டாட கொண்டாட நம்மைதான் நாம் இழந்து கொண்டிருப்போம். கொண்டாட்டத்தின் நோக்கமே நம்மை அடைவதுதானே தவிர, இழப்பது அல்ல.

இதோ தீபாவளி முடிந்து கொண்டிருக்கிறது. இன்று நீங்கள் தூங்க செல்கையில், இந்த நாள் முடிந்துவிட்டதென நினைத்து வெறுமையாக உணர்ந்தால், இது உங்களுக்கான கொண்டாட்டம் அல்ல. வாழ்க்கையின் உங்கள் கொண்டாட்டம் சில நாட்களை சார்ந்து இருப்பது எத்தனை அபத்தம்?

கொண்டாட்டம் உங்கள் வாழ்வை, அகத்தை முன்னகர்த்த வேண்டும். தேங்க செய்யக்கூடாது. அப்படி செய்தால் அது வெறும் பாசாங்கான விரயம் மட்டுமே. புரிந்துகொள்ளுங்கள்!

– ராஜசங்கீதன்