நாம் எதிர்ப்பது இந்துவை அல்ல; ‘இந்துத்துவம்’ என்ற முகமூடி அணிந்திருக்கும் ஆரியத்துவத்தை…!

நியூஸ்7 காணொளியில் பார்த்தீர்களானால், நாராயணனின் முதல் கட்ட முயற்சிகள் யாவும் மதிமாறனை பேசவிடாமல் செய்வதற்கான முட்டுக்கட்டைகள் மட்டுமே. நாராயணன் கோபம் அடைய ஆரம்பித்தது, “யோகா என்பது இந்துகளுக்கே எதிரானது. வெறும் 20% இந்துகள் செய்யும் யோகாவை 80% இந்துகள் மீது திணிக்க பார்க்கின்றனர்” என ஆரிய – இந்து பிரிவினையை மதிமாறன் சுட்டிக்காட்ட தொடங்கிய போதுதான். நாராயணன் ருத்ரதாண்டவம் ஆடியது ‘பார்ப்பனர்’ என தன் சாதி பெயர் சுட்டப்பட்ட பிறகுதான்.

இந்துகளும் பார்ப்பனரும் வேறு என பெரியார் சொன்னதை உடைக்க முடியாமல் அலைந்த கூட்டம் அது. பார்ப்பனர் அல்லாத இந்துகள் எல்லாம் அவர்களுக்கு சூத்திரர்களே என புரிய வைத்திருந்தார் பெரியார். அவர் காலம் கழிந்து நீண்ட காலம் போராடி இந்துகள் என்ற ஓர்மைக்குள் தங்களை இணைத்துக்கொண்டு காரியத்தை சாதித்து கொண்டிருக்கும் நேரத்தில் மதிமாறன் வந்து அதை உடைத்தால் நாராயணன் எப்படி தாங்கி கொள்ள முடியும்?

தெரிந்த ஒருவரிடம் பேசி கொண்டிருந்த போது பாஜகவை பற்றி சொன்னார், “நானும் இந்துதாங்க. ஆனா, இந்துன்னு சொல்லிக்கிட்டு இவங்க பண்ற பல வேலைங்க ரொம்ப அசிங்கமா இருக்கு. ரொம்ப தப்பா இருக்கு.”

இதுதான் பல இந்துகளின் கருத்தும்.

உண்மை இப்படித்தான் அமைந்தது.

ஆரியர்கள் சிந்துவை கடந்த பிறகு திராவிடர்களை வெல்லவில்லை. பதிலாக அவர்களுடன் கலந்தார்கள். ஊடுருவினார்கள். இருந்த பிரிவினைகளை பயன்படுத்தி அரசதிகாரத்தை நெருங்கினார்கள். அரசனும் வணிகனும் மக்களை சுரண்டும் அச்சை ஏற்படுத்தி தர்மமாக ஆக்கினார்கள். கடவுளை ஆதாரமாக்கி மக்களை பணிய வைத்தார்கள். பிறப்புக்கு காரணம் கற்பித்தார்கள். அரசன் குளிர்ந்தான். விளைவாக, சமூக படிநிலைகளின் உச்சத்தில் தன்னை ஆரியர்கள் இருத்தி கொண்டார்கள்.

கற்றவர் சமூகத்தில் ஆரியத்துவ ஆக்கிரமிப்பை பேசும் எழுத்துகள் பல இருந்தன. ஆனால், வெகுஜன சூழலில் அரசியல் வெளியில் பேசியவர்களில் முக்கியமானவர்கள் அம்பேத்கரும் பெரியாரும். அவர்களின் பரப்புரை, இந்துவாக தன்னை அடையாளம் காட்டி கழுத்தறுக்க முயன்ற ஆரியத்தை அடையாளம் காட்டிய மிகப்பெரிய திறப்பு.

இந்து கடவுளரை கடத்தி கொண்டு போய் தங்கள் கடவுளாக ஆக்கி, தானும் இந்துதான் என சொல்ல முயன்ற ஆரியத்தின் வேஷம் கலைந்தது. அது அவர்களுக்கு மிக பெரிய அடி.

நாடோடிகளாக எல்லா நாடுகளிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்டு ஓடிவந்த ஆரியர்கள் சிந்து சமவெளிக்கு இப்புறம் அமைந்த நிலப்பகுதியை வென்றிட முடிவெடுக்கிறார்கள். எகிப்து மோசே இஸ்ரேலை ஆக்கிரமித்தது போல் இந்த நிலப்பகுதியை ஆக்கிரமிக்கும் வரலாறு நோக்கி நகர்கிறார்கள். அதற்கான மிகப்பெரிய தடையாக இருந்தது, ஆரியத்தை பற்றி இங்கு ஊட்டப்பட்ட விழிப்புணர்வு.

தங்களின் தொடர் உழைப்பாலும் இந்துவாக தன்னை காண்பித்துக்கொள்ளும் திட்டங்களாலும் தடைகளாக இருந்தவர்கள் காலமான பின் கிடைத்த வெளியாலும் உலக மூலதனத்தின் ஆதரவாலும் ஒரு வழியாக தாங்கள் விரும்பிய இடத்தை இப்போது அடைந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் அவர்கள் இந்துகள் அல்ல; ஆரியர்களே. இந்துகள் அவர்களுக்கு சூத்திரர்களே, பஞ்சமர்களே என சொல்பவர்கள் அவர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தாக இருக்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் அடைந்து கொண்டிருக்கும் தொடர் வெற்றியை நிறுத்த வேண்டுமெனில், அவர்களின் வரலாற்று உத்தியை நாம் உடைக்க வேண்டும். இந்து மதத்துக்கு பிரதிநிதியாக தங்களை காட்டி கொள்வதை தோலுரிக்க வேண்டும். அவர்கள் சாமியாட மாட்டார்கள். குறி சொல்ல மாட்டார்கள். சாராயம் குடிக்க மாட்டார்கள். கறி தின்ன மாட்டார்கள். நாம் அவர்கள் இல்லவே இல்லை.

இனி நாம் சொல்ல வேண்டியதும் ஒன்றுதான்.

நாம் எதிர்ப்பது இந்துத்துவாவை அல்ல. இந்துத்துவா என்றால் நம் சகோதர இந்துகளை காயப்படுத்துகிறோம். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே தான் நாம் அதை செய்யக்கூடாது. தெளிவாகி கொள்வோம். நாம் எதிர்ப்பது ஆரியத்தை. ஆரியத்துவத்தை. ஆரியத்துவம் பேசும் இந்துவை. ஆரியத்துவம் பேசும் இஸ்லாமியனை. ஆரியத்துவம் பேசும் கிறித்துவனை. ஆரியத்துவம் பேசும் தலித்தை. ஆரியத்துவம் பேசும் பழங்குடியினனை.

RAJASANGEETHAN JOHN