”அந்த தடித்தனம் எங்கள் பிராமண ஜீனில் நிறையவே இருக்கிறது!”

‘உலகிலேயே அதீத அறிவு நிறைந்தவர்கள் பிராமணர்கள்தான்,’ என்று பாஸ்கி பேசிய ஒரு உரையின் காணொளித் துணுக்கைப் பார்த்தேன். இதைப் பலரும் பகிர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.

பாஸ்கி சொன்ன விஷயத்தை தீவிரமாக நம்புபவர்கள்தான் இந்தியாவில் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். இது குறித்து நான் பல முறை எழுதி இருக்கிறேன். சாதிய அடிப்படைவாதத்தை நம்புபவர்கள்தான் இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் என்பது யாருக்கும் ஆச்சரியமாக இருக்காது. என் கண்ணுக்கு எதிரேயே என் சாதியை வைத்து என்னை உயர்வாகப் பேசிய நிறைய பேரை பார்த்திருக்கிறேன். என் வாழ்நாள் முழுக்க நடந்த அந்த விஷயங்கள் இன்னமும் மரத்துப் போக வைக்கவில்லை. இன்றளவும் கொஞ்சம் சங்கடத்தைத்தான் தருகிறது.

இந்தப் பிராமண உயர்வுவாதம் வடக்கே அதிகம் இருப்பதிலும் வியப்பில்லை. ஆனால் தமிழ் நாட்டிலும் இது இருக்கிறது.

உலகிலேயே மிகவும் அறிவு நிறைந்தவர்கள் என்ற உருட்டு பாஸ்கிக்கே சிரிப்பாக இருந்திருக்க வேண்டும். அதனால்தான் ‘ஒரு ஜோக்குக்கு சொன்னேன்!’ என்று சேர்த்திருக்கிறார். ஆனால் ஆடியன்ஸ்சில் கூட யாரும் சிரித்ததாகத் தெரியவில்லை.

பிராமண ஜீனில் அறிவுத் திறன் இருக்கிறதா என்று தெரியாது. அப்படி ஒன்று பிரத்தியேகமாக இருக்க வாய்ப்பில்லை. நவீன இந்தியாவில் பல்வேறு சமூகங்கள் பல்வேறு விதத்தில் சாதனைகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றன. வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஒவ்வொரு சமூகமும், குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினர், அறிவுத் திறனை வெளிப்படுத்துகிறார்கள். அப்படியானால் பிராமணர்களுக்கு என பிரத்தியேகமாக என்ன இருக்கிறது?

இதற்கான பதிலை இன்னொரு வீடியோவில் திருச்சி கல்யாணராமன் எனும் உபாசகர் கொடுக்கிறார். நேரடியாக அல்ல, மறைமுகமாக. பிராமணரல்லாதோர் பாவங்கள் செய்வதற்குப் பிறந்தவர்கள். அவர்கள் பாவம் செய்ய வேண்டும். சேர்த்து வைத்த அந்தப் பாவத்தை பிராமணர்களுக்கு தட்சிணை கொடுத்து அவர்களுக்கு நமஸ்காரம் செய்வதன் மூலம் போக்கிக் கொள்ள முடியும் என்று பேசுகிறார். அதாவது பிராமணர்களுக்கு தட்சிணை கொடுத்தால் கொடுத்தவர்களின் பாவங்கள் யாவும் தட்சிணை வாங்கிய பிராமணனுக்குப் போய் விடுமாம். சரி, வாங்கிய பாவத்தை அந்த பிராமணர் எப்படிப் போக்கிக் கொள்வார்? சிம்பிள்: அவர் பிரம்ம யாகம் என்ற ஒன்றை செய்தால் அதில் அவர் பெற்ற பாவங்கள் யாவும் எரிந்து கரைந்து போய் விடும்.

அப்போது அந்த வேற்று சாதி இந்து ‘நானே நேரடியாக அந்த யாகத்தை செய்து விட்டால் என்ன?’ என்று கேட்கிறார். நல்ல லாஜிக்கலான கேள்வி.

அதற்கு இவர் பதில் சொல்கிறார்: ‘நீ யாகங்கள் செய்யக் கூடாது. நீ பாவம்தான் செய்ய வேண்டும்.’

அதாவது பிராமணரல்லாதோர் பாவங்கள் செய்யப் பிறந்தவர்கள். பிராமணர்கள் மட்டுமே யாகங்கள் செய்யப் பிறந்தவர்கள்.

இப்படித்தானே இரண்டாயிரம் ஆண்டுகளாக தங்களைத் தாங்களே உயர்த்திப் பிடித்துக் கொண்டும், இதர சாதிகளை பாவிகளாக சித்தரித்துக் கொண்டும் அவர்களை அழுத்திக் கொண்டிருந்தோம்? இன்று வரையும் கூட அப்படிப்பட்ட பிரச்சாரங்களை வெட்கமே இன்றி முன்னெடுக்கிறோம்?

இப்படியே தொடர்ந்து தங்கள் சமூகத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டும், இதர சமூகங்களை தாழ்த்திக் காட்டிக் கொண்டும், அவர்களை முன்னேறவே இயலாமல் அழுத்திக் கொண்டும் இருந்து விட்டு, நவீன உலகிலும், இதெல்லாம் பெரிய அளவு மாற விடாமல், தங்களுக்கு ஏற்றபடி சிஸ்டத்தை முடிந்த அளவு வளைத்துக் கொண்டு, பொதுவெளியெங்கும் ஆக்கிரமித்துக் கொண்டு…

… அதற்கெல்லாம் அப்புறமும் ‘அட, நாங்கதான்பா அறிவுஜீவிங்க,’ என்று பேசுவதற்கு மாபெரும் தடித்தனம் தேவைப்படுகிறது.

அந்த தடித்தனம் எங்கள் பிராமண ஜீனில் நிறையவே இருக்கிறது.

ஸ்ரீதர் சுப்ரமணியம்