“காதலர்களின் திருமண வாழ்க்கை தோற்றுப்போவது ஏன்?”

இன்று ஒரு நண்பர் தொலைபேசித்து தூக்கத்தை கெடுத்தார். ஒருவழியாக அவர் ஒரு பெண்ணை பிடித்து, காதலித்து, இப்போது இருவருக்கும் கல்யாணம் நடக்கப்போகும் அளவுக்கு அற்புதமாக வாழ்க்கையில் சாதித்திருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு ஒரு பயம், ஒரு டவுட். ‘இதெல்லாம் ஒத்து வருமா? செட் ஆகுமா? இப்படியே பேச்சுலரா இருந்தா பெட்டரா? வர்றவங்க நம்ம கேரக்டர புரிஞ்சிப்பாங்களா?” என. அதனால்தான் தூக்கம் கெடுத்த அந்த தொலைபேசி அழைப்பு.

நானும் ‘நாங்க மட்டும்தான் மாட்டி, எதிர்காத்துல சைக்கிள் மிதிச்சு தாவு தீர்ந்து போறாப்பல நொந்து நூடுல்ஸ் ஆகணுமா… நீயும் வாடி மாப்ள க்ரவுண்டுக்கு’ என என் சமூகக் கடமையை செவ்வனே ஆற்றி அழைப்பை துண்டித்தேன்.

இந்த குழப்பம் இயல்பாகவே பெருமளவுக்கு இன்று காணப்படுகிறது. அதனால்தான் ஒரு ரைட் அப் போடுவோமே என இப்போது இங்கு.

முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, இந்த கல்யாணம், குடும்பம் என்பதற்கெல்லாம் பெரிய புனிதம் ஒன்றுமில்லை என்பதைத்தான். குழந்தைகள் அனாமத்தாக பிறந்து தான்தோன்றிகளாக உருவாகிவிடக் கூடாது என்பதற்காக, இரண்டு எஸ்கார்ட்டுகளை நியமித்து, அரசும் சமூகமும் உருவாக்கிய செட்டப்தான் குடும்பம். அதை அங்கீகரிக்க கல்யாணம் என ஒரு செயல்முறை. அவ்வளவுதான். மற்றபடி அதற்குள் இருக்கும் கணவன்-மனைவி உறவு, காதல், காமம், கற்பு, பண்பு, ஒழுக்கம் என்பதெல்லாம் அந்த செட்டப் சஸ்டெய்ன் ஆவதற்கும் நம்முடைய இன்ட்ரெஸ்ட் லெவல் குறையாமல் இருப்பதற்கும் நாமே போட்டுக்கொண்ட பொன் விலங்குகள்.

இந்த குடும்பம் என்ற அமைப்புதான் சமூகத்தின் அடிப்படை அலகு என்றாகிவிட்ட நிலையில் இதை கொண்டு இயங்கும் காதல், ஆண்-பெண் உறவு புரிதல் ஆகியவற்றை புரிந்துகொள்வது அத்தியாவசியமாகி விடுகிறது.

ஒரே கூரையின் கீழ் வாழும் இருவர் (இரண்டு நண்பர்களாகக் கூட இருக்கலாம்) கண்டிப்பாக பிரச்சினைகளோடுதான் இருப்பர். ஏன்? ஒரே சிந்தனை கொண்டவரென உலகில் எவரும் இல்லை. ஓரளவுக்கு ஒத்துப்போகக் கூடியவர்கள் வேண்டுமானால் இருக்கலாம். அதாவது 60%, 70%, 80%, 90% அப்படி. 90% ஆகவே இருந்தாலும் மிச்சமிருக்கும் 10% விஷயங்களிலாவது கருத்து பேதங்கள் இருக்கும். அந்த பேதங்கள், சண்டை சச்சரவுகளை இயல்பாகவே ஏற்படுத்தும். அந்த பேதங்களை மீறி சுமூகத்தை கொண்டுவரும் வேலையை செய்யத்தான் அந்த 90% இருக்கிறது. இந்த ஒத்திசைவு குறையக் குறைய பேதங்கள், பிளவுகள் ஆகி இன்னும் பெரிதாக மாறக்கூடிய வாய்ப்புகள்தான் அதிகம்.

அப்படியெனில் 100% ஒத்திசைவு என்பதே இல்லையா?

இருக்கிறது. அந்த 100% ஒத்திசைவை கொண்டவர்கள் தெளிவாக கல்யாணம் செய்யாமல் இருப்பார்கள். செய்தாலும் ஒருவரையொருவர் மதித்து ஒரு கட்டத்தில் பிரிந்து விலகி சென்றுவிடுவர்.

ஆனால், காதலில் மட்டும் எல்லாம் சரியாக இருக்கிறதே? 100% ஒத்திசைவு இருக்கிறதே?

காதலில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மேலே சொன்ன ‘ஒரே கூரை’ இஸ் மிஸ்ஸிங் என்பதை. வெவ்வேறு கூரைகளிலிருந்து வந்து காதலித்து திரும்ப அந்தந்த கூரைகளுக்கு சென்று விடுவதால் பேதங்கள் தெரிவதில்லை. அப்படி இருந்துமே யோசித்து பாருங்கள். காதலித்த புதிதில் அனைத்தும் சொர்க்கமாக இருக்கும். அப்படியே இரண்டு, மூன்று வருடங்கள் கொடுத்து அந்த காதலை நீட்டித்து பாருங்கள். நிறைய சண்டைகள், கோபதாபங்கள், வெறுப்பு, ஆயிரக்கணக்கில் ஃபோன் பில் என நிலைமை மாறியிருக்கும். இன்னொன்றும் இருக்கிறது. எப்போதாவது சந்திக்கும்போது ஏற்படும் பரவசம் இதையெல்லாம் இல்லாமலும் ஆக்கிவிடும். சந்தித்துவிட்டு திரும்பியதும் அடுத்து சந்திப்பதை பற்றி யோசிப்பதில் ஆரம்பித்து, மறுபடியும் ‘ஏன் ஃபோன் பண்ணல, ஒரு மெசேஜ் கூட பண்ண தோணல’ என சண்டைகள் போட்டு அடுத்த சந்திப்புக்கு மெல்ல மனம் அடி போடத் துவங்கியும் விடும். தள்ளி தள்ளி இருப்பதால் மட்டும்தான் காதல் ருசி.

அப்படியானால் கல்யாணமே செய்துகொள்ளக் கூடாதா? By all means, செய்து கொள்ளுங்கள். பெயரறியா அறிஞன் ஒருவன் சொன்னது போல், நல்ல துணை கிடைத்தால், நல்ல வாழ்க்கை. மோசமான துணை கிடைத்தால் நல்ல தத்துவ வாழ்க்கை. ஹா ஹா.

கல்யாணம் செய்யலாம். ஆனால் அதை பற்றிய glorified versions ஏதும் வைத்துகொள்ளாமல் இருந்தால் நல்லது. சினிமா காதல், சினிமா வாழ்க்கை போன்றவற்றை எல்லாம் எதிர்பார்த்தால் டுமீல்தான். நானும் பலரை பார்த்திருக்கிறேன். கல்யாணம் பண்ணியதும் ‘ஏண்டா, நோ டா’வில் தொடங்கி, கொஞ்சிப்பதும் ஈஷிப்பதுமாக நாய்க்காதல் கொள்ளும் exhibitionist-களாக காண்பித்து கொள்வார்கள். எனக்கு மட்டும் உண்மை தெரியும் – உடைந்துபோன ஒன்றை இப்படி போலியாக ஒட்ட வைக்க முயலுகிறார்கள் என்று. ஏனென்றால், அப்படி நோ டார்லிங், ஹனி என்றவர்கள், வீட்டிலும் சரி கொஞ்ச காலத்துக்கு பிறகும் சரி “அவளே இவளே நாயே பேயே”வாக மாறியிருப்பார்கள்.

ஒரே நெகட்டிவ்வாக பேசுவதாக எண்ண வேண்டாம். இதுதான் உண்மை அண்ட் உண்மை சுடும்!

இந்தியாவை பொறுத்தவரை ஒரு ஆண் ஒரு பெண்ணையும், ஒரு பெண் ஒரு ஆணையும் புரிந்துகொள்ளும் வாய்ப்புகள் இருப்பதே இல்லை. பழகுவதற்கு அனுமதி கிடையாது. பழகினாலும் எல்லைக்கு உட்பட்டுதான். அந்த எல்லையை மீறி காதல் என பரிமளித்தால் அதற்கும் எதிர்ப்பு. அந்த காதலும் ஆண்-பெண் பற்றிய அரைகுறை புரிதலுடன்தான் இருக்கும். ஆக, கல்யாணத்துக்கு பிறகுதான் ஆணுக்கு பெண்ணுடனும், பெண்ணுக்கு ஆணுடனும் முழுமையாக புரிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது. அதாவது, கல்யாணத்துக்கு பிறகு உங்கள் அறைக்குள் முற்றிலும் புதிதாக, பழக்கமில்லாத விலங்கு இருக்கும். அது எப்படி செயல்படும், எங்கே கடிக்கும், எங்கே கொஞ்சும் என தெரியாது. மிச்ச வாழ்க்கையின் பெரும்பகுதி அதை அறிந்துகொள்வதில்தான் கழியும்.

ஆண் என்பவன், தான் சிந்திக்கும், செயல்படும் திறன் வழிதான் பெண்ணை புரிந்துகொள்ள முற்படுவான். பெண்ணும் அப்படியே. பெண்ணுக்கு ஆணின் உளச்செயல்பாடும், ஆணுக்கு பெண்ணின் உளச்செயல்பாடும் முற்றிலும் புது நிலப்பரப்புகள். குருடன் யானையை தடவி அறிந்துகொள்வது போலத்தான்.

ஏற்கனவே ரஸல் பீட்டர்ஸ் போன்ற காமெடியன்கள் சொன்னதுதான். ஆண் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தை பற்றி மட்டும்தான் சிந்திக்க முடியும். பெண் அப்படி அல்ல. ஒரு நேரத்தில் பல விஷயங்களை யோசிக்க முடியும். ஏனெனில் ஆணுக்கு வேட்டை மனம். பெண்ணுக்கு பல காலம் அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பல வேலைகள் ஒருங்கே செய்ய பணிக்கப்பட்ட மனம். வேட்டைக்கு செல்பவன் சிந்தனையெல்லாம் இலக்கை நோக்கி மட்டுமே இருக்கும். பெண்ணோ தான் வாழும் வீட்டை, அழும் குழந்தையை, தோட்டத்து செடிக்கு ஊற்ற வேண்டிய தண்ணீரை, புதிதாக வந்த அண்டை வீட்டாரை என சிந்திப்பதற்கு பல விஷயங்கள் task list-ல் கொண்டிருப்பாள்.

ஒரு ஆண் சும்மா அமர்ந்திருக்கிறான் என்றால் பெண்ணால் புரிந்துகொள்ள முடியாது. எப்படி ஒருவனால் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? மல்லாக்க படுத்து விட்டத்தை வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பது ஆணுக்கு மட்டும்தான் சாத்தியம். பெண்ணால் அப்படி இருக்க முடியாது. அவளது மூளை has been wired in such a way that she cannot remain calm and idle. (Ofcourse, வாசிப்பின் வழி சிந்தனையை, புரிதலை வளமாக்கிக்கொண்ட பெண்கள் இதில் சேர்த்தி இல்லை.)

ஆணுக்கு ஒரு விஷயத்தை செய்ய முயன்று தோற்றாலோ, அதில் சிக்கல் ஏற்பட்டாலோ அவ்வளவுதான். அதை சரியாக்குவது எப்படி என்பதை மட்டுமே பல நாட்களுக்கு யோசிக்கும் அளவுக்கு மங்குனி அவன். அந்தநேரத்தில் பால் வாங்கி வரச் சொல்வதோ, குழந்தைக்கு ஷு மாட்டிவிட சொல்வதோ, ஏன் அவனையே சாப்பிட அழைப்பதோ கூட எரிச்சலூட்டும் விஷயமாக இருக்கும். அப்படி எரிச்சலடைந்து அவன் கத்துகையில், பெண்ணுக்கு புரியவே புரியாது. என்ன செய்துவிட்டோம் இப்படி இவன் கத்துவதற்கு என்றுதான் எண்ண தோன்றும்.

அடுத்ததாக பெண்! தன்னால் பல செயல்கள் செய்ய இயலுவதை போலவே ஆணும் செய்வான் என நம்புவாள். அதனால் எதிர்பார்ப்பாள். அப்படி கேட்கும்போது அவன் கத்துவதை தன் மீது கொண்ட பிணக்கு என எண்ணி நொக்குறுக ஆரம்பிப்பாள். ஏனெனில் அவளின் thinking pattern-ல் ஆணின் thinking pattern-க்கான clue கூட இல்லை. அதற்கான பயிற்றுவிப்பும் இல்லை.

உதாரணத்துக்காக உங்கள் காதலனுடன் கடற்கரைக்கோ சினிமாவுக்கோ ஒரு நாள் முழுதும் சென்று செலவு செய்வதாக வைத்துக் கொள்வோம். எப்படி ஆரம்பிக்கும் என யோசியுங்கள்.

வெளியே போவதை பற்றி பேசியதிலிருந்து அது பற்றிய அளவளாவல்களும் என்ன செய்ய போகிறோம், எங்கு போவோம் என்ற கற்பனைகளிலும் கணங்கள், நிமிடங்கள், நாட்கள் என ஸ்லோமோஷனில் வாழ்க்கை நகரும். கற்பனை செய்யாத பல விஷயங்கள் நிரப்பப்படாத கோடுகளாக இருந்து, எதிர்பார்ப்பை எக்குத்தப்பாக எகிற வைத்து பரவசம் கொடுக்கும். கடைசியில் என்ன நடக்கும்?

நீங்கள் சரியான நேரத்துக்கு சென்று காத்திருப்பீர்கள். வழக்கம் போல் அவன் தாமதமாக வருவான். அது தெரிந்தும் போலியாக கோபம் கொள்வீர்கள். அவன் உங்களை சாந்தப்படுத்த கொஞ்சுவான், கெஞ்சுவான். உங்கள் கோபத்தை மதிப்பான். தலையில் தூக்கி வைத்து ஆடுவான். அனைத்தையும் ரசிப்பீர்கள். கடைசியில், செல்ல சிணுங்கலுடன் கோபத்தை அகற்றி விடுவீர்கள். அதற்கு பிறகு சினிமாவோ, பீச்சோ, ரெஸ்டாரண்டோ. விளையாட்டு, சண்டை, கொஞ்சல், ஊடல், கூடல், அழுகை என நாளின் முடிவில் பிரிந்து செல்வீர்கள்.

வீடு வந்து சேர்ந்ததும் உங்கள் சிந்தனை என்னவாக இருக்கும் தெரியுமா? அவன் எப்படியெல்லாம் உங்களை புகழ்ந்தான், என்ன வார்த்தைகளில் கொஞ்சினான், எப்படியெல்லாம் பராமரித்தான் (கேரிங்!!!!!) என எண்ணி எண்ணி பூரிப்பீர்கள். ஆனால் அவன்?

உங்களை எப்படியெல்லாம் உரசினான், கட்டிப்பிடித்தான், தொட்டான், நீங்கள் அவனை எப்படி எவ்வளவு சார்ந்து இருந்தீர்கள் என சிந்திப்பான். வாட்… ஹவ் நான்சென்ஸ் ஹி கேன் பி… ஆல் கைஸ் ஆர் பெர்வர்ட்ஸ் என நீங்கள் கத்தலாம். வேறு வழியில்லை. ஏனெனில் நம் நாடு, நம் கலாசாரம், ஆணின் வேட்டை மனம், அவனின் உயிரியல் கூறுகள் எல்லாம் அவனை அப்படிதான் ஆக்கி வைத்திருக்கிறன்றன. காதல் அவனுக்கு புலன்கள் வழி அறிதல்தான். கொச்சையாக நினைக்க வேண்டும். அவனுடைய brain neuron traffic அப்படித்தான்.

அடுத்ததாக, இந்த காதல் சந்தோஷமாக இருப்பதற்கு missing and meeting and missing என இருப்பதுதான் காரணம். கல்யாணத்தில் இது சாத்தியமா? இப்போதெல்லாம் காதலிலேயே இது சாத்தியப்படுவதில்லை. எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோமோ அவ்வளவு விலகியும் அவ்வப்போது இருத்தல்தான் உறவுக்கு வலிமை சேர்க்கும் என்பதை உணர மறுக்கிறோம். ஏனெனில், அப்படி இருந்தால் வேறு எவனாவது உஷார் பண்ணி விடுவானே!

என் தோழி ஒருத்தி காதலித்து திருமணம் செய்தவள். மணமான சில மாதங்கள் கழித்து பேசியபோது சலித்துக்கொண்டாள். “லவ் பண்ணும்போதெல்லாம் மெசேஜ், கால்ஸ்னு தொடர்ந்து வரும். எப்ப நான் ஃபோன் பண்ணாலும் அவ்ளோ ப்ரீஷியஸா ட்ரீட் பண்ணுவான். இப்போல்லாம் ரொம்ப சுத்தம். லேட்டாகுதேன்னு நைட்டு எப்ப வருவேன்னு ஃபோன் பண்ணாலும், “வந்துட்டுதான் இருக்கேன். வை ஃபோன’ன்னு கத்துறான்.” நான் அமைதியாக அவளை பார்த்தேன். உடனே எச்சில் விழுங்கிக்கொண்டு “பட் லவ்லாம் இல்லாம இல்ல. இப்பவும் இருக்கத்தான் செய்யுது. மொதல்ல எப்பவாவது மீட் பண்ணுவோம். நல்லா இருக்கும். இப்போ ஒண்ணாவே இருக்கோம். அதனால பெருசா எதுவும் தெரியுறதில்ல” என்றவள் பெருமூச்செறிந்து “மேரேஜ் இஸ் என்டையர்லி எ டிஃப்பரண்ட் அனிமல் ஆல்டுகெதர்” என்றாள்.

நான் சொல்ல விரும்புவதும் இதைத்தான். காதல் வேறு, குடும்பம் முற்றிலும் வேறு. முன்னது பால் ஈர்ப்பு, பின்னது பொறுப்பு சுமப்பு. போலவே ஆண் வேறு, பெண் முற்றிலும் வேறு. முன்னது புறவய சிந்தனை. பின்னது அகவய சிந்தனை. ஆதலால், கல்யாணம் கபாலி படம் மாதிரி. ரொம்பவும் எதிர்பார்க்காதீர்கள். எதிர்பார்த்தால் ஏமாறுவீர்கள். எதிர்பார்க்கவில்லை எனில் ரசிப்பீர்கள். இந்த தெளிவும் பாருங்கள், கணவன் மனைவி இருவருக்கும் இருக்க வேண்டும். ஒருவர் மாத்திரம் இந்த தெளிவை கொண்டிருந்தாலும் சிக்கல்தான். அவர் பேசுவது, விளக்குவது எல்லாம் அடுத்தவருக்கு greek and latin-தான். மட்டுமல்லாமல், கல்யாணம் செய்வது எவ்வளவு அற்புதமோ அதே அளவுக்கு அற்புதம்தான் பிடிக்கவில்லை எனில் விட்டு விலகுவதும். அப்பப்பா, இடியாப்பமாய் எவ்வளவு சிக்கல்!

நல்ல கல்யாணம் அல்லது காதல் அல்லது ஆண்-பெண் உறவுக்கு என்னதான் வழி?

மதிப்பு!

நன்றாக தேடுங்கள். பழகுங்கள். உங்களுக்கே தெரியும். சிலரிடம் நேசம் என்பதை தாண்டி மதிப்பும் ரசிப்பும் கொள்வீர்கள். அவர்களை கண்டடையுங்கள். அவர்களுக்கும் உங்களை போன்ற இன்ட்ரெஸ்ட் லெவல் இருந்தால் மணம் முடிக்கலாம். அங்கு பிரச்சினைகளை தாண்டி அடுத்தவர் மீதுள்ள மதிப்பு வாழ்க்கை ஓட்டத்துக்கு ஈடு கொடுத்துவிடும்.

மதிப்பு எப்படி வருகிறது? வீட்டில் சொல்லி அனுப்புவார்களே கணவனே கண் கண்ட தெய்வம், நிற்க சொன்னால் நிற்க வேண்டும், வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றெல்லாம். அந்த பாணி மதிப்பு அல்ல நான் சொல்வது. அதற்கு பெயர் அடிமைத்தனம்.

உங்களை போன்ற விருப்பு வெறுப்பு கொண்ட, சற்றே நீங்கள் விரும்பக்கூடிய விதத்தில் இருக்கிற, ஒருவருக்கொருவர் சிறந்த கம்பேனியனாக (லவ்வராகவோ ஒய்ஃபாகவோ அல்ல, கம்பேனியனாக) இருப்பவரிடம்தான் உங்களுக்கு மதிப்பு வரும். அந்த வகையில் மணம் முடிப்பவர்கள் சற்றே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடமும் ஒன்று இருக்கிறது. திருமணம் ஆகிவிட்டது என்ற உரிமை உணர்வே, உடைமை உணர்வே அந்த மதிப்பையும் குலைக்க வல்லது. அதை மாத்திரம் கவனமாக தவிர்த்துவிட்டால், நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி!

– ராஜசங்கீதன் ஜான்