சாதி கள்ள மௌனத்தை கூண்டில் ஏற்றிய நந்தினி!

புழுக்கள் நெளிய அழுகிய உடலுடன் கிணற்றுக்குள் கிடந்த நந்தினியை கடந்த 14.01.2017 அன்று வெளியே எடுத்தனர். அவரது வாயில் கிழிந்து போன உள்ளாடை திணிக்கப்பட்டு இருந்தது. சிதைந்த உடலை கண்டதும் நந்தினியின் குடும்பத்தினரும் சிறுகடம்பூர் சேரி மக்களும் கதறி அழுதனர். அந்த அழுகையின் குரல்கள் நம் தமிழ் சமூகத்திற்கு கேட்க வாய்ப்பில்லை. ஏனென்றால் ஜல்லிக்கட்டுக்காக மறத்தமிழன் வீருகொண்டு களத்தில் போராடிக் கொண்டிருந்தான். நந்தினியின் கோர மரணம் எவருக்கும் பெரிதாக தெரியவில்லை.

நந்தினிக்கு என்ன நடந்தது? நந்தினியை கொலை செய்தவர்கள் யார்? இத்தகைய பெரிய கொலை நடந்தும் இந்த சமூகம் ஏன் சொரணையில்லாமல் இருக்கிறது? பல கேள்விகள் என்னை தொந்தரவுபடுத்தின. நேரடியாக களத்தில் இறங்கினோம்.

அரியலூர் அருகில் உள்ள சிறுகடம்பூர் காலனியில் வசித்து வருபவர் ராஜகிளி. இவருக்கு ரஞ்சித்குமார் என்கிற மகனும் சிவரஞ்சனி, நந்தினி ஆகிய மகள்களும் உள்ளனர். கணவர் ராஜேந்திரன் இறந்து போய்விட்டார். வறுமையின் காரணமாக 16 வயது நந்தினி கட்டிட வேலைக்கு செல்லத் தொடங்கினார். கீழமாளிகை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற வன்னியர் சமூகத்து இளைஞர், நந்தினியிடம், “உன்னை நான் காதலிக்கிறேன். கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன்” என்று  ஆசைவார்த்தை கூறியிருக்கிறார். இதற்கு நந்தினி உடன்பட மறுத்திருக்கிறார். தினந்தோறும் மணிகண்டன், நந்தினியை வழிமறித்து “என்னை காதலிக்க வேண்டும்” என்று வற்புறுத்தியது மட்டுமல்லாமல் மிரட்டியும் இருக்கிறார். பல நாட்கள் மணிகண்டனுக்கு பயந்துகொண்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார் நந்தினி.

பாலியல் சீண்டலுக்கு பயந்துகொண்டு வீட்டிலேயே கிடந்தால் எப்படி வேலை கிடைக்கும்? மனத்திடத்துடன் மறுபடியும் வேலைக்கு செல்லத் தொடங்கிய நந்தினியை, கடந்த 5 மாதத்திற்கு முன்பு வழிமறித்து மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் மணிகண்டன். அவரிடமிருந்து தப்பிக்க நந்தினி எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

பாலியல் வன்புணர்ச்சி செய்தவனைத்தான் திருமணம் செய்து கொள்ள முடியும் என்கிற அந்த போலித்தனமான நம்பிக்கை நந்தினியிடமும் இருந்தது. மணிகண்டனை சந்தித்து “தயவுசெய்து என்னை திருமணம் செய்து கொள்” என்று கெஞ்சியிருக்கிறார், அழுதிருக்கிறார். “கண்டிப்பாக நீ தான் என் மனைவி” என்று கூறி பலமுறை பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார் மணிகண்டன்.

நந்தினியின் வயிற்றில் 5 மாத சிசு வளர்ந்திருந்தது. அதுவரை பொறுத்திருந்த நந்தினி, “என்னை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் என் வீட்டில் கூறி உன் மீது காவல் நிலையத்தில் புகார் தெரிவிப்பேன்” என்று கூறியிருக்கிறார். மணிகண்டனின் சாதி மூளை மட்டுமல்ல, மத மூளையும் வேலை செய்யத் தொடங்கியது. இந்து முன்னணியின் ஒன்றிய செயலாளரான மணிகண்டன் தந்திரமாக, “உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” என்று நந்தினியிடம் சத்தியம் செய்திருக்கிறார்.

மணிகண்டனின் வார்த்தையில் உண்மை இருக்கிறது என்று நம்பி கடந்த 29.12.2016 அன்று நந்தினி, மணிகண்டனை பார்க்க சென்றிருக்கிறார். மணிகண்டன் மற்றும் அவரது சாதியைச் சேர்ந்த மணிவண்ணன், திருமுருகன், வெற்றிச்செல்வன் ஆகிய 4 பேரும் கீழமாளிகையில் கூடியிருந்திருக்கின்றனர்.

நந்தினியை கண்டதும் அவரைப் பிடித்து ஆடைகளை உருவி கட்டிப்போட்டு வாயில் உள்ளாடைகளை திணித்து 4 பேரும் கொடூரமான பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் நந்தினியின் கழுத்தைப் பிடித்து நெறித்து கொன்று அங்கிருந்த கிணற்றில் வீசியிருக்கின்றனர்.

நந்தினி காணாமல் போனதும், மணிகண்டன் தான் ஏதோ செய்துவிட்டான் என்பதை உணர்ந்த நந்தினியின் தாயார் ராஜகிளியும், அக்கா சிவரஞ்சனியும் இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் இனிகோ திவ்யன் அவர்களிடமும் புகார் தெரிவித்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால், குற்றவாளியான மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்துவிட்டு, இவன் குற்றத்தில் ஈடுபடவில்லை என்று போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நந்தினியின் உடல் கிடைத்ததும், மணிகண்டன் தற்கொலை நாடகம் நடத்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். உண்மை தெரிய வந்தது. தற்போது 4 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு, ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சுவாதி கொன்றதாக சொல்லப்பட்ட ராம்குமாரை மிக விரைவாக கண்டுபிடித்த போலீஸ், நந்தினியை கொலை செய்தவனை பிடித்தும் விசாரணை செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். இதைவிட கேவலம் என்ன இருந்துவிட முடியும்? மகளை காணாமல் 17 நாட்களாக காவல் நிலையத்திற்கும் டிஎஸ்பி அலுவலகத்திற்கும் அந்த ஏழை குடும்பமும் சேரி மக்களும அலைந்தபோது அதை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் சொரணையற்று இருந்த போலீசாரை எந்த விசாரணைக் கூண்டில் ஏற்றி கேள்வி கேட்பது?

போலீசார் மட்டுமா சொரணையற்று இருந்தார்கள்? இந்த சாதி சமூகமும் தான் சொரணையற்று இருந்தது. நிர்பயாவிற்கும் சுவாதிக்கும் வீதியில் இறங்கி போராடுகிற கூட்டத்தைப் பார்க்கிறேன். குற்றவாளிகளை கைது செய்ய துடிதுடிக்கும் காவல், நீதிமன்ற அமைப்புகளையும் பார்க்கிறேன். ஆனால் தலித் பெண்களான கலைச்செல்வியும், நந்தினியும் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தால் சாதி இந்துக்களின் காக்கா, குருவி கூட எட்டிப் பார்க்காத அவலத்தை என்ன சொல்வது?

ஊடகம், காவல், நீதிமன்றம், சிவில் சமூகம் என்று நம் எல்லோரையும் கூண்டுக்குள் ஏற்றி நம் ஒட்டுமொத்த கூட்டு மனசாட்சியையும் விசாரணை செய்கிறது நந்தினியின் சடலம். நாடகக் காதல் என்று தலித் இளைஞர்களை கிண்டல் செய்தாரே ராமதாஸ். இந்த படுகொலை குறித்து என்ன சொல்லப் போகிறார்? நாடகக் காதலைக் கூட மன்னித்துவிட முடியும். நாடகக் கொலையில் ஈடுபடும் சாதியை கூராய்வு செய்ய ராமதாஸின் மருத்துவக் கத்தி தயாராக இருக்கிறதா?

அரியலூர், கிணற்றுக் கொலைகளுக்கு பேர் போனது. கடந்த 10.05.1980 அன்று குளப்பாடி கிராமத்தில் தலித் குழந்தைகள் கிணற்றில் குளிக்கிறார்கள் என்பதற்காக சிவசாமி என்கிற ஆதிக்கசாதியை சேர்ந்தவர் கிணற்றில் மின்சாரம் பாய்ச்சி 4 குழந்தைகளை கொலை செய்தார்.

சாதி மின்சாரம் பாய்ச்சும், புழுக்களையும் நெளியச் செய்யும். உயிரோடு இருக்கக்கூடிய நம்மையும் பிணமாக்கி மௌனமாக்கும். மௌனம் ஆபத்தானது. கள்ள மௌனம் பேராபத்தானது. உங்கள் கள்ள மௌனத்தை எப்போது உடைக்கப் போகிறீர்கள் என் அருமை சாதித் தமிழர்களே?

எவிடன்ஸ் கதிர்

(குறிப்பு: இந்த கட்டுரை அதிர்வெண் (தலித் அரசியல்/பண்பாடு இதழ்) இதழில் வெளிவருகிறது.)