சசிகலாவின் பொது செயலாளர் பதவி ரத்து: அதிமுக மோடி அணி தீர்மானம்!

அதிமுக ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்றுவது தொடர்பாக பன்னீர்செலவம்  – பழனிச்சாமி தலைமையிலான அதிமுக மோடி அணிக்கும், டிடிவி.தினகரன் தலைமையிலான அதிமுக சசிகலா அணிக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில், அதிமுக மோடி அணி சார்பில், அதன் ஆதரவாளர்களின் ‘பொதுக்குழு’, ‘செயற்குழு’ கூட்டம் இன்று (செப்.12) சென்னையில் நடைபெற்றது. இதில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை வருமாறு:-

தீர்மானம் 1 – இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக என்ற கட்சிப் பெயரையும் தேர்தல் ஆணையத்தில் இருந்து மீட்பது.

தீர்மானம் 2 – ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்கள் அதே பதவிகளில் தொடர்வார்கள்.

தீர்மானம் 3 – எம்ஜிஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தி வருவதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு.

தீர்மானம் 4 – முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணி மண்டபம் கட்ட ரூ.15 கோடி நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

தீர்மானம் 5 – வர்தா புயல் மீட்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அளித்த தமிழக அரசுக்கு நன்றி.

தீர்மானம் 6- நெருக்கடியான சூழலில் கட்சியை ஆட்சியை காப்பாற்றும் நிர்வாகிகளுக்கு பாராட்டு.

தீர்மானம் 7- அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மட்டுமே.

தீர்மானம் 8 –  தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது ரத்து. அவரது நியமனங்கள் ஏதும் செல்லாது.

தீர்மானம் 9 – கட்சிக் கட்டுப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் தினகரன் நியமிக்கும் நியமனங்கள் செல்லாது.

தீர்மானம் 10 – தொண்டர்கள் மனம் அறிந்து கட்சியை வழிநடத்த புதிய பதவி உருவாக்கப்படும்.

தீர்மானம் 11 – பொதுச்செயலாளர் வகித்துவந்த அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோருக்கு வழங்கப்படும்.

தீர்மானம் 12 – கட்சியின் சட்டவிதிமுறை விதி எண் 19 முதல் 40 வரை மாற்றம் செய்து திருத்தம் மேற்கொள்ள ஏகமனதாக ஒப்புதல்.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பின்னர் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி உரையாற்றினார்.