நாட்டில் ‘பணக்கலவரம்’ மூளும் அபாயம்: அச்சத்தில் இறங்கி வந்தது மோடி அரசு!

‘21ஆம் நூற்றாண்டின் முகமது பின் துக்ளக்’ நரேந்திர மோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என திடீரென அறிவித்ததால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அன்றாட கைச்செல்வுக்கே பணம் இல்லாமல் அவர்கள் திண்டாடுகிறார்கள். ஏடிஎம் மையங்களிலும், வங்கிகளிலும் மணிக்கணக்காக காத்துக் கிடந்த போதிலும் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் கிடைக்காததால் பொறுமை இழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மோடி மீதும், அவரது கையாலாகாத தெனாவட்டு அரசு மீதும் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பணத்தட்டுப்பாடு மற்றும் மக்களின் கோபம் காரணமாக, நாட்டில் ‘பணக்கலவரம்’ மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதை அடுத்து, நரேந்திர மோடி தலைமையில் நேற்று (ஞாயிறு) இரவு அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை:

மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள் ஆகியவற்றில் நவம்பர் 24ஆம் தேதி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும்.

கேஸ் சிலிண்டர் வாங்கவும், மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்தவும் இந்த பழைய நோட்டுகளை 24ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.

வங்கிக் கணக்கில் இருந்து நாளொன்றுக்கு ரூ.10,000 மட்டுமே எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. எனினும் அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24,000 மட்டுமே பணம் எடுக்க முடியும். (இதற்கு முன்பு வாரத்துக்கு ரூ.20,000 மட்டுமே அனுமதிக்கப்பட்டது.)

வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏடிஎம்களில் வாடிக்கையாளர் ஒருவர், ஒரு நாளில் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்கலாம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி ஒருவர் ஒரு நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.

டிசம்பர் 30 வரை ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சர்வீஸ் கட்டணம் வசூலிக்கப்படாது.