குஜராத் தேர்தல்: மோடி – அமித் ஷா சூழ்ச்சி அரசியலுக்கு விழுந்தது சம்மட்டி அடி!

குஜராத்தைச் சேர்ந்த 3 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் 18-ம் தேதி நிறைவடைகிறது. இந்த பதவிகளுக்கு பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி, காங்கிரசில் இருந்து விலகி பாஜக.வில் சேர்ந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர். 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததாலும்,  மோடி – அமித் ஷா கும்பல் காங்கிரஸ் கட்சியை உடைப்பது,  குதிரை பேரம் பேசி அக்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குவது போன்ற கீழ்த்தரமான சூழ்ச்சி அரசியலில் இறங்கியதாலும் இத்தேர்தலில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் சட்டப்பேரவையின் பலம் 182 ஆகும். இதில் காங்கிரஸுக்கு 57 எம்எல்ஏக்கள் இருந்தனர். பாஜக தூண்டுதலால், கடந்த ஜூலை 21-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் சிங் வகேலா அந்த கட்சியில் இருந்து விலகினார். அவரது ஆதரவாளர்களான 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸின் பலம் 51 ஆக குறைந்தது. சங்கர் சிங் வகேலா உட்பட 7 பேர் பாஜக பக்கம் சாய்ந்தனர்.

மீதமுள்ள 44 எம்எல்ஏக்களை தக்க வைக்க காங்கிரஸ் மேலிடம் அவர்களை பெங்களுரூவுக்கு அனுப்பி சொகுசு விடுதியில் தங்க வைத்தது. அவர்கள் நேற்று முன்தினம் குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு திரும்பினர். அதன் பின்னர் அவர்கள் அங்குள்ள சொகுதி விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளருக்கு 45 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் அமித் ஷா, ஸ்மிருதி இரானி எளிதாக வெற்றி பெற்றனர். பாஜகவின் 3-வது வேட்பாளர் பல்வந்த் சிங் ராஜ்புத் வெற்றிபெற 15 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது.

அதேநேரம் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலின் வெற்றியும் கேள்விக்குறி ஆனது. அவருக்கு 2 எம்எல்ஏக்களைக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இந்தப் பின்னணியில் நேற்று குஜராத் சட்டப்பேரவை வளாகத்தில் தேர்தல் நடந்தது. இதில் அணி மாறிய 7 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு சாதகமாக வாக்களித்தனர்.

காங்கிரஸ் தக்க வைக்க முயன்ற 44 எம்எல்ஏக்களில் ஒருவர் பாஜகவுக்கு வாக்களித்தார். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களில் ஒருவர் பாஜகவுக்கு வாக்களித்தார்.

இதனிடையே, வாக்குப் பதிவின்போது அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் தங்களின் வாக்குச்சீட்டை பாஜக வேட்பாளர் அமித் ஷாவிடம் காட்டியதாக சர்ச்சை எழுந்தது. இது குறித்து காங்கிரஸ் சார்பில் டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், தேர்தல் விதிகளின்படி வாக்குச்சீட்டை வேட்பாளருக்கு காண்பிக்கக் கூடாது; எனவே 2 எம்எல்ஏக்களின் வாக்குகளை செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதனால் வாக்குகளை எண்ணும் பணி நிறுத்தப்பட்டது.

அதேநேரம், பாஜக சார்பில் மூத்த மத்திய அமைச்சர்கள் தலைமைத் தேர்தல் ஆணையத்தை அணுகினர். வாக்கு எண்ணிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதனால் ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் முடிவு வெளியாவதில் நள்ளிரவு வரை இழுபறி நீடித்தது.

இறுதியில், வாக்குப்பதிவின்போது 2 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களின் வாக்குச்சீட்டை பாஜக வேட்பாளர் அமித் ஷாவிடம் காட்டியதற்கான வீடியோ ஆதாரத்தை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம், அவ்விரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் செல்லாது என அறிவித்தது.

இதனையடுத்து வாக்குகள் எண்ணப்பட்டு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அகமது பட்டேல் 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். பாஜக, காங்கிரஸ் இடையேயான கவுரவ யுத்தத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

இதன் மூலம் மோடி – அமித் ஷா கும்பலின் இழிவான சூழ்ச்சி அரசியலுக்கு விழுந்துள்ளது சம்மட்டி அடி!