“திரையுலகில் நான் சந்தித்த பாலியல் தொல்லைகள்”: லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி!

திரைப்பட இயக்குனர் ஒருவர் நேரடியாக தனக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றதாகவும், இன்னொரு இயக்குனர் பாலியல் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து தனது உதவியாளர் மூலம் பேச்சு நடத்த முயன்றதாகவும் நடிகையும், இயக்குனரும், ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி நடத்துனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இத்தனை வருடங்களாக, கிட்டத்தட்ட தினமும் பாலியல் பாகுபாட்டை வெளிப்படுத்தும் கேலிகள், கொடுமைகளை நான் திரைத்துறையில் அனுபவித்துள்ளேன்.

முன்னணி மலையாள இயக்குனர் அவர். தமிழிலும் படங்கள் இயக்கியுள்ளார். அவர் பாலியல் ரீதியாக எனக்குத் தொல்லைகள் தர முயற்சி செய்தார். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தபோது, என்னை படப்பிடிப்புத் தளத்தில் அவமானப்படுத்தினார். பொதுவெளியில் என்னை சத்தம் போட்டார். நான் நடித்த சில காட்சிகளை,  வேண்டுமென்றே 25 டேக் வரை கொண்டு போனார். அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று நான் வலியுறுத்தியபோது, மோசமான விளைவுகள் உண்டாகின. அவர் போன்ற மனிதர்கள் திரையுலகில் உள்ளார்கள். ஆனால் நாம் அவர்களைப் பற்றி பேசுவதேயில்லை.

சமீபத்தில் ஒரு இயக்குனர் அனுப்பியதாக அவருடைய உதவியாளர் என்னிடம் வந்து கதை சொன்னார். பேசிக் கொண்டிருந்தபோது, அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து மெல்ல பேசத் தொடங்கினார். நான்கூட என் தேதியை அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என்கிறார் போல என்று நினைத்தேன். ஆனால் அவர் வேறு ஒரு அட்ஜஸ்ட்மெண்ட் பற்றி பேசுகிறார் என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தேன். உடனே அவரை வெளியேற சொன்னேன்.

திரைத்துறையில் புகழின் உச்சியில் ஒரு நடிகை இருந்தால், அவர் அட்ஜஸ்ட் செய்ததால் தான் அந்த நிலையில் உள்ளார் என நாம் எண்ணிக்கொள்கிறோம். ஆனால் இந்த பிரச்சனை குறித்து யாரும் பேசுவதில்லை.

பெண்களுக்கு நேரும் தொல்லைகள் குறித்து தமிழ்த் திரையுலகில் உள்ள ஆண்களும் பேச வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்.

இவ்வாறு லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இவர் சொல்வதைப் பார்த்தால், ‘சொல்வதெல்லாம் உண்மை’ அரங்கில் உள்ள பக்கத்து சோபாவில் இவரை அமர வைத்து, மனம் திறந்து பேசச் சொல்லி, ஒரு மணி நேர நிகழ்ச்சி நடத்தினால், டிஆர்பி ரேட்டிங் எகிறும் என தோன்றுகிறது. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுமா ஜீ தமிழ் சேனல்?