பிரபல நடிகர் கலாபவன் மணி திடீர் மரணம்

‘பாபநாசம்’, ‘ஜெமினி’ உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் கலாபவன் மணி இன்று இரவு காலமானார். அவருக்கு வயது 45.

கல்லீரல் கோளாறு காரணமாக அவர் கொச்சியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். எனினும், இன்று மதியம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மரணமடைந்தார்.

அவர் மரணமடைந்த தகவலை மருத்துவமனை இரவு 7.15 மணிக்கு உறுதி செய்தது.

கேரளாவைச் சேர்ந்த கலாபவன் மணி, திரைப்படத்தில் நடிக்க வருவதற்குமுன் ஆட்டோ டிரைவராக இருந்தார். அத்துடன் மிமிக்கிரி கலைஞராகவும் திகழ்ந்தார்.

‘கலாபவன்’ என்பது கொச்சியில் உள்ள நடிப்பு பயிற்சி பள்ளி. பலகுரல் கலைக்குழுவாக இது பிரபலமாக அறியப்பட்டாலும், கேரளத்தின் செவ்வியல் கலைகள் உள்ளிட்ட பல பயிற்சிகள் நிகழும் மையமாக இருக்கிறது. அதில் உருவாகி வந்தவர் மணி என்பதால், அவர் தன் பெயரை ‘கலாபவன் மணி ‘என்றே வைத்துக்கொண்டார்.

1990களின் மத்தியில் அவர் மலையாள திரையுலக நடிகராக அறிமுகமாகி, மிகக் குறுகிய காலத்திலேயே பல படங்களில் நடித்து புகழடைந்தார்.

‘வசந்தியும் லட்சுமியும் பின்னே நானும்’ என்ற மலையாள படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2000ஆம் ஆண்டு அவருக்கு தேசிய விருதும், கேரள அரசின் விருதும் வழங்கப்பட்டன.

மம்முட்டி நடித்த ‘மறுமலர்ச்சி’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். என்றாலும், சரண் இயக்கத்தில் ‘விக்ரம்’ நடித்த ‘ஜெமினி’ திரைப்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து பல தமிழ் படங்களில் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான தமிழ் படம் கமல்ஹாசனின் ‘பாபநாசம்’. தவிர, பல தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

கலாபவன் மணியின் திடீர் மறைவு, திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Read previous post:
0a43
தமிழக அதிகாரி ஆணவத்தால் மின்சாரத்தில் விழுந்து உயிர்விடும் அகதி – வீடியோ

மதுரை - உச்சபட்டி அகதி முகாமில் தற்கொலை செய்துகொண்ட ரவியின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு எவிடென்ஸ் அமைப்பு உடனடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

Close