கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழு ஜன.4ஆம் தேதி கூடுகிறது!

கருணாநிதி தலைமையில் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக க.அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், ”தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 4-1-2017 புதன்கிழமை காலை 9.00 மணி அளவில் நடைபெறும்.

கழக ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கைக்குழு அறிக்கை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்கெனவே அனுப்பி வைக்கப்பட்ட பொதுக்குழு கூட்ட அழைப்பிதழினை இக்கூட்டத்திற்கு வரும்போது தவறாமல் உடன் கொண்டு வர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 20ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருந்தது. திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. அதற்குப் பிறகு சிகிச்சை முடிந்து கருணாநிதி வீடு திரும்பினார்.

இந்நிலையில் ஜனவரி 4ஆம் தேதி திமுக பொதுக்குழு நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அரசியல் களம் பரபரப்பாகியுள்ள நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டாலின் தலைமை பொறுப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

2016-ம் ஆண்டில் திமுக பொதுக்குழு கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கருணாநிதி கட்சி நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத நிலையில் அவரது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.