‘புதிய தலைமுறை’ டிவி விவாத நிகழ்ச்சியில் சங்கிகள் அட்டூழியம்: குற்றம் – நடந்தது என்ன? (பகுதி 2)

(முதல் பகுதியின் தொடர்ச்சி)

நெறியாளர் கார்த்திகை செல்வன், தனியரசை பேச அழைத்தார். அப்போது தனியரசின் ஆதரவாளர்கள் அவரை பலத்த கரவோசையுடன் வரவேற்றனர்…

தனியரசு: போராட்டம் இல்லாமல் எதுவும் இல்லை.. பாதிக்கப்படும் மக்கள் போராடத் தான் செய்வார்கள்.. ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாவிட்டால் கண்டுகொள்ளும்படி போராடத் தான் செய்வார்கள்.. புரட்சி வெடிக்கத் தான் செய்யும்.. அதில் சில இழப்புகள் ஏற்படும்… (கார்த்திகை செல்வன் குறுக்கிட்டு, “வன்முறைக்கு ஆதரவளிக்க முடியாது” என்றார்.) அப்படியென்றால் பாதிக்கப்படும் விவசாயிகள், மக்கள் உரிமைக்காக போராடாமல் கைகட்டிக் கொண்டு அடிவாங்கி சாக வேண்டுமா..?….. உண்மையான சமூக விரோதிகள் யார் தெரியுமா… ஊர்வலமாகச் சென்று சட்டத்தை மதிக்காமல் பாபர் மசூதியை இடித்தார்களே அவர்கள்தான்.. (அரங்கமே அதிரும் அளவிற்கு பார்வையாளர்கள் அந்த கருத்தை வரவேற்றனர்..)

(அப்போது குறுக்கிட்ட தமிழிசை, அதனை வன்மையாக கண்டிப்பதாகக் கூறி, ஏதோ பேச முயன்றார்.. அதற்கு பார்வையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஓசை எழுப்பினர்…) தொடர்ந்து பேசிய தனியரசு, “போராடும் இன்றைய சமூக விரோதிகள் தான் நாளைய தலைவர்களாக வருவார்கள்.. ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றுவார்கள்” என முடித்தார்..

அதன் பின்னர் இயக்குநரும், நடிகருமான அமீரை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார்…

அமீர்: கருவறையில் இருக்கும் குழந்தைகூட போராடித்தான் வெளியே வருகிறது…. மக்கள் அமைதியாக இருக்கத் தான் விரும்புகிறார்கள்.. ஆனால் ஆட்சியாளர்கள் விடுவதில்லை.. மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதில்லை.. அதுபோல ஆட்சியாளர்களும்.. (உடனே தமிழிசையும், பார்வையாளர்கள் பகுதிக்கு அழைத்து வரப்பட்டிருந்த பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர். அமீர் கூறியதில் பாஜகவினருக்கு என்ன பிரச்சனை என்று பார்வையாளர்கள் குழப்பமடைந்தனர்.. அடுத்து ஏதோ அமீர் பேச முயன்றபோது அப்போதும் எதிர்ப்பு தெரிவித்தனர்.)

காத்திகை செல்வன் (பாஜகவினரை பார்த்து) “அமீர் பேசட்டும்.. அதற்கு அனுமதியுங்கள்.. அதற்கு பதில் தர தமிழிசை இருக்கிறார்… அவரும் பேசுவார்” என கூறினார்..

தொடர்ந்து பேசிய அமீர், “கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் கொலை செய்யப்பட்டபோது, கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன… போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன… அப்போது போலீசின் துப்பாக்கி எங்கே சென்றது?” என கேட்டு முடிக்கும்முன் அரங்கின் பல்வேறு பகுதியில் அமர வைக்கப்பட்டிருந்த பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் மேடையை நோக்கி ஓடினர்… “எங்களைப் பற்றி அமீர் பேசக்கூடாது. அவர் உடனே வேளியேற வேண்டும்” என பாய்ந்தனர். அங்கிருந்த காவல்துறையினர் மற்றும் புதிய தலைமுறை பணியாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். சங்கிகள்தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்…

காத்திகை செல்வன், “உங்கள் தரப்பு மாற்று கருத்தை கூற அரங்கத்தில் தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் இருக்கிறார்கள் பொறுமையாக இருங்கள்” என்று எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தார்.. ஆனால் சங்பரிவார் கூட்டம் கருமமே கண்ணாக எப்படியாவது நிகழ்ச்சியை ஊத்தி மூட வேண்டும் என்ற அடிப்படையில் தொடர் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது கார்த்திகை செல்வன் தமிழிசையை அழைத்து, “உங்கள் அமைப்பினரை அமைதிப்படுத்துங்கள்” என கூறி கையில் மைக்கை கொடுத்தார்…

ஆனால் தமிழிசை மிகத் தெளிவாக, ‘இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடந்தால் நம் மீது கருத்தியல் ரீதியான அடி பலமாக இருக்கும்.. அரங்கத்தில் இருந்ததில் சங்பரிவார் அமைப்புகளைத் தவிர்த்த அனைவரும் நமக்கு எதிராக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி முழுமையாக நடைபெற்று வெளிவந்தால்… பாஜக இன்னும் அம்பலப்பட்டு விடும்’ என்ற நிலையில் சுதாரித்த தமிழிசை மைக்கை பிடித்து, “இந்த கருத்தை நாம் அனுமதிக்க முடியாது.. நாம் உயிரை இழந்திருக்கிறோம்.. யார் அதை பற்றி பேசினாலும் அனுமதிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது” என மேலும் வெறியை ஊட்டினார்..

நெறியாளர் காத்திகை செல்வன் பாடு பெரும்பாடு ஆனது…. சுற்றி இருக்கும் காவலர்கள், ரகளையில் ஈடுபடுபவர்களை வெளியேற்றவில்லை… ரகளை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தது.. மீண்டும் பேசிய தமிழிசை, “இந்த பேச்சு டிவியில் ஒளிபரப்பப்படக் கூடாது. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று மீண்டும் அதே பல்லவியை பாடினார்.  பின்னர், “நந்தகுமார் அப்படியே நம்மவர்களை இங்கேயே அமரச் சொல்லுங்கள்” என கூறினார்… (‘கலைந்து அவரவர் இடத்திற்கு செல்லுங்கள்’ என்று கூறவில்லை.)

இந்த களேபரத்தில், அரங்கத்தின் சங்பரிவார் கும்பல் முன்பகுதிக்கு வந்தவுடனேயே அங்கு அமர்ந்திருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் இடத்தை காலிசெய்து வெளியேறினர். ரகளை ஓய்ந்தபாடில்லை.. ஞானதேசிகன், கே.பாலகிருஷ்ணன்,, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் சொல்லிப் பார்த்தனர் கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்தவர்கள் முன்பகுதிக்கு வந்து, பாஜகவினருக்கு எதிராக ரகளையில் இறங்க, மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. உடனே தனியரசு வந்து தனது தொண்டர்களை பெயரை சொல்லி அழைத்து, அமைதி காக்க வேண்டினார்.. அதனை தொடர்ந்து முன்பகுதி அமைதியாக இருந்தது..

இதற்கிடையில், பின்பகுதியில் இருந்த பொதுமக்கள் சங்பரிவாரின் அராஜகத்தைக் கண்டித்தவாறே அரங்கத்தைவிட்டு வெளியேறினர்.. அப்போது, “இந்த பிஜேபி இப்படி பேசவிடாம கலவரம் செய்யுறானுங்க… இப்பவே இப்படின்னா… ஒருவேள இவங்க தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தா.. தமிழ்நாடே சுடுகாடா மாறிடும்” என அவரவர் பாணியில் தூற்றிவிட்டு சென்றனர்..

இதற்கிடையில், மேடைக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள், கார்த்திகை செல்வனை தனியே அழைத்து, “உடனே நிகழ்ச்சியை முடியுங்கள்.. கலவரம் ஏற்பட்டு விடும்.. அனுமதிக்க முடியாது” என கூறினர். (அதே நேரத்தில் அராஜகமாக முன்வரிசைக்கு வந்து ரகளையில் ஈடுபட்டவர்களை கடைசி வரை காவல்துறை வெளியேற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை…அவர்களை ‘அரங்கத்தை விட்டு வெளியேருங்கள்’ என்றுகூட ஒரு வார்த்தை கூறவில்லை.) கர்த்திகை செல்வன், “சிறிது நேரத்தில் முடித்துக் கொள்கிறோம்” என கேட்டுக்கொண்டார். மேலும் காவல்துறை அதிகாரிகள், “அமீர் பேசக் கூடாது” என்றும் கூறினர்.

அதனை தொடர்ந்து காத்திகை செல்வன் தமிழிசையின் கருத்திற்கு ஆதரவாக பேச வந்திருந்த செ.கு.தமிழரசனை பேசுமாறு கூறினார். உடனே அவரும் பேசத் துவங்கினார். பின்பகுதியில் மிச்சமிருந்த ஒரு பகுதியினர், “இது அநியாயம்.. அமீரை பேசச் சொல்லுங்கள்” என கத்தினர். ஆனாலும் செ.கு.தமிழரசன் பேசிக்கொண்டிருந்தார். மேடையில் இருந்த கே.பாலகிருஷ்ணன் நெறியாளர் காத்திகை செல்வனைப் பார்த்து, “அமீர் தானே பேசிக்கொண்டிருந்தார். அவர் முழுமையாக ஒரு நிமிடம் கூட பேசவில்லை. பாஜக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்பதற்காக அமீரை பேச அனுமதிக்க மறுப்பது எப்படி சரியாக இருக்கும்? இது நியாயமே இல்லை… இதனை அனுமதிக்க முடியாது.. அமீரை பேச அழையுங்கள்” என கூறினார்.. பின்னர்…. அமீர் பக்கம் திரும்பி, “அமீர் நீங்கள் பேசுங்கள்.. பார்த்துக் கொள்ளலாம்” என கூறினார்… உடனே அருகில் இருந்த தனியரசும் “நீங்கள் பேசுங்கள் அமீர்” என கூறினர்..

உடனே அமீர் பேசினார். “யார் மனதையும் புண்படுத்துவது எனது நோக்கம் இல்லை.. நான் அப்படி பேசவும் இல்லை.. ஒரு சம்பவத்தை தான் குறிப்பிட முயன்றேன்.. ஓர் உயிர் போனது குறித்து பேசுவதற்கே நீங்கள் இப்படி ஆவேசமாக என்னை பேசக் கூடாது என்று போராடுகிறீர்களே… அப்படி என்றால் 13 உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கிறதே… அதற்கு போராடாமல் இருக்க முடியுமா… ? போராடுவோம். போராட்டம் தொடரும்” என்றார்.. உடேன மேடையில் இருந்த காவல் துறை அதிகாரி ஒருவர் நேரடியாக அமீரிடம், “பேசியது போதும், நிறுத்துங்கள்” என வந்தார்.. அப்போது கே.பாலகிருஷ்ணன் தலையிட்டு போலீஸ் அதிகாரியை பார்த்து, “நீங்கள் ஏன் அமீரை நிறுத்த சொல்கிறீர்கள்? ரகளையில் ஈடுபடும் அவர்களை வெளியேற்றுங்கள்” என சொன்னார்..

உடனே கார்த்திகை செல்வன் தலையிட்டு, “நாம் திட்டமிட்டிருந்த நேரம் முடிய போகிறது.. முடியுங்கள்” என அமீரை பார்த்து கூறினார்.. அப்போது, “யார் தடுத்தாலும் எங்கள் போராட்டம் தொடரும்” என கூறி முடித்தார்.

அடுத்து மீண்டும் செ.கு.தமிழரசனை கார்த்திகை செல்வன் பேச அழைத்தார். ஆனால் செ.கு.தமிழரசன்.. நடந்த நிகழ்வுகளையும், பாஜக – அதிமுகவிற்கு எதிரான ஒட்டுமொத்த பார்வையாளர்களின் எதிர்பையும் உள்வாங்கிய நிலையில், தனது பேச்சை துவங்கினார்.. “மக்கள் அடிப்படை உரிமைக்காகவே அன்றாடம் போராட்டம் நடத்துகிறார்கள்..” என துவங்கி போராட்டத்திற்கு ஆதரவாக பேசினார்.. அப்போது இருளடித்தது மாதிரி தமிழிசை வைத்த கண் மாறாமல் செ.கு.தமிழரசனை பார்த்துக்கொண்டே இருந்தார்.. சில நிமிடங்கள் கடந்த நிலையில் தனது பேச்சை கார்த்திகை செல்வனின் வேண்டுகோளை ஏற்று முடித்துக் கொண்டார் செ.கு.தமிழரசன்.

இதற்கிடையில், கோவையின் பல்வேறு பகுதியில் இருந்த காவல்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர், நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அருகில் இருந்த ஒரு உளவுத்துறை காவலரிடம் ‘தீக்கதிர்’ செய்தியாளர், “ஏன் இவ்வளவு போலீஸ் வரவழைக்கப்பட்டிருக்கின்றனர்” எனக் கேட்டபோது, “எப்படியாவது அமீரை தாக்கி அதன் மூலம் மீண்டும் கோவையில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டம் இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. ஆகவே எப்படியாவது இந்த நிகழ்ச்சியை கலவரம் இன்றி முடித்திட வேண்டும். அதே நேரம் அமீரையும் பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும்.. அதற்காகத்தான்..” என்றார்…

நிகழ்ச்சி முடிந்த நிலையில் இயக்குநர் அமீரை கே.பாலகிருஷ்ணன், மற்றும் தனியரசு ஆகியோர் கூட்டாக அழைத்துக்கொண்டு ஒரே காரில் மூவரும் சென்றனர்.. முன்னும் பின்னும் காவல்துறை பாதுகாப்புடன் விமான நிலையத்தை நோக்கி கார்கள் நகர்ந்து சென்றன…

(ஆதாரம் தீக்கதிர் தொகுப்பு கட்டுரை)