“வில்லாதி வில்லன் வீரப்பன்’ படத்தை தமிழ்ச்சமூகம் புறக்கணிக்க வேண்டும்!” – முத்துலட்சுமி

ராம்கோபால் வர்மாவின் ‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ என்ற டப்பிங் படத்தை தமிழ்ச்சமூகம் புறக்கணிக்க வேண்டும் என்றும், வீரப்பன் கதையை தானே திரைப்படமாக எடுக்கப் போவதாகவும் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறினார்.

சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவருடன் அவரது மூத்த மகள் வித்யாராணியும் வந்திருந்தார். பேட்டியின்போது முத்துலட்சுமி கூறியதாவது:–

‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ திரைப்படம் அண்மையில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை. எனது கணவர் வீரப்பன் சந்தன மரம் கடத்தினார் என்பது பரவலான கருத்து. கடத்தியவர் எனது கணவர் என்றால், அவர் கடத்திய சந்தன மரம், யானை தந்தங்களை எல்லாம் வாங்கியவர்கள் யார் என்பது பற்றிய செய்தி எந்த திரைப்படங்களிலும் வருவதில்லை.

வீரப்பனை பிடிப்பதாக கூறி வந்த போலீஸ் படையினர் அந்த பகுதியில் வசித்த மக்களுக்கு என்னென்ன கொடுமைகள் செய்தார்கள் என்பதை யாரும் திரைப்படத்தில் காண்பிப்பதில்லை. உண்மை என்ன என்று தெரியாமல் போலீசார் கூறுவதை மட்டுமே வைத்துக் கொண்டு எல்லோரும் திரைப்படமாக எடுக்கிறார்கள்.

எனது கணவருக்கும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் நேரடி தொடர்பு கிடையாது. அவருடன் பயிற்சி பெற்றவர்கள் சிலருடன் தான் தொடர்பு உண்டு. பிரபாகரனை சந்திக்கப் போவதாக கூறி அழைத்து செல்லும் வழியில் எனது கணவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக இந்த படத்தின் இறுதிக்கட்ட காட்சியில் காண்பிக்கப்படுகிறது.

உண்மையில் எனது கணவர் அவரது உறவினர்கள் மூலம் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் எனது கணவர் பற்றி புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். அவருக்கும் ஒன்றும் தெரியாது. அவர் கடைசி நேரத்தில் தான் வந்தார். என் கணவரின் ரகசிய வாழ்க்கை குறித்து எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் மட்டுமே தெரியும்.

‘வில்லாதி வில்லன் வீரப்பன்’ படம் எடுப்பதற்கு என்னிடம் ஒப்புதல் பெற்ற டைரக்டர் ராம்கோபால் வர்மா, என்னிடம் கூறிய கதைக்கு சம்பந்தம் இல்லாத பல காட்சிகளை படத்தில் வைத்துள்ளார். இந்த படத்திற்கு என்னிடம் ஒப்புதல் பெற்றுவிட்டதால், சட்டப்பூர்வமாக என்னால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

எனவே, ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த திரைப்படத்தை தயவு செய்து எல்லோரும் புறக்கணியுங்கள். எனது கணவரின் வாழ்க்கை குறித்த உண்மை கதையை நானே திரைப்படமாக எடுக்க இருக்கிறேன். அதற்கான கதையை நானே எழுதி வருகிறேன்.

தகுதியான, எங்களை ஏமாற்றாத தயாரிப்பாளர் மற்றும் டைரக்டர்களை தேடி வருகிறோம். வாய்ப்பு அமைந்ததும் படத்தை எடுப்போம். அதில் போலீசாரின் குற்றங்களும் காண்பிக்கப்படும். தமிழகத்தில் தற்போது இருக்கும் சூழலில் மொத்த உண்மைகளையும் சொன்னால் எனக்கும், என் பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும்.

தற்போது, எனது கணவரின் பெயருக்கும், அவரது உருவப் படத்திற்கும் டெல்லியில் சென்று காப்புரிமை பெற்றுவிட்டோம். எனவே, இனிமேல் வீரப்பன் என்ற பெயரையோ, அவரது புகைப்படத்தையோ யாரும் எனது அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாது.

இவ்வாறு முத்துலட்சுமி கூறினார்.