’லால் சலாம்’ டிரைலரில் ரஜினி: “மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை”!
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் ‘லால் சலாம்’. இந்த படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற முஸ்லிம் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடுகிறது. இ ந் நிலையில் இப்பட்த்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் – ஒரு பார்வை:
ஊரில் நடக்கும் தேர் திருவிழாவில் பிரச்சினை நடக்கிறது. அதையொட்டி கிரிக்கெட் போட்டிகளும் காட்டப்படுகின்றன. ‘கூட்டம் சேர்க்குறவன விட, யார் பின்னாடி கூட்டம் சேருதோ அவன் ரொம்ப ஆபத்தானவன்’ என்ற வசனத்துக்குப் பிறகான மொய்தீன் பாயாக ரஜினியின் என்ட்ரி மாஸூக்கு உத்தரவாதம் அளிக்கிறது. உள்ளூரில் நடைபெற்று வரும் கதை ஒரு கட்டத்தில் பம்பாயை நோக்கி நகர்வதாக தெரிகிறது. இந்த இரண்டுக்குமான கனெக்சன், கதையில் ரஜினியின் பங்கு, கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் இவையெல்லாம் எந்த புள்ளியில் ஒன்றிணையும் என பல கேள்விகளை எழுப்புகிறது ட்ரெய்லர்.
செந்திலின் கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதை காட்சிகள் உறுதி செய்கின்றன. ‘எந்த ஊர் சாமியா இருந்தாலும், யார் கும்புட்ற சாமியா இருந்தாலும், சாமி சாமிதான்’ என்ற வசனமும், இறுதியில் ரஜினி பேசும், ‘மதத்தையும், நம்பிக்கையையும் மனசுல வை, மனித நேயத்த அதுக்கு மேல வை. அதான் இந்த நாட்டோட அடையாளம்’ என்ற வசனமும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது. ‘பம்பாய்ல பாய் ஆளே வேறடா’ என சொல்லும்போது மீண்டும் ‘பாட்ஷா’வுக்குப்பிறகு பம்பாயில் ரஜினி அடையாளம் கவனிக்க வைக்கிறது.
படம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.