கூனிக்குறுக செய்யும் வரலாற்று அசிங்கத்துக்கான எதிர்வினை

அவரை பண்ணப்பாண்டி என அழைப்பார்கள். தாத்தாவின் தோட்டத்தில் வேலை பார்த்தார். வேலை என்றால் தோட்டத்துக்கு காவல் இருப்பது. வயலுக்கு நீர் பாய்ச்சுவது. நாங்கள் சென்றால், மரம் ஏறி இளநீர் காய்களை பறித்து வெட்டி கொடுப்பது. விளைச்சலை சுமந்து வந்து தாத்தா வீட்டில் சேர்ப்பது. அவ்வளவுதான்.
‍‍‍‍‍‍ ‍‍
சிக்ஸ் பேக்கெல்லாம் என்ன பிரமாதம்? அவர் உடம்பு உழைப்பாலேயே முறுகி இஷ்டத்துக்கு பேக் வைத்திருக்கும். வெற்று மேலுடம்புதான். தோட்டத்தில் இருக்கும்போது அரையில் ஒரு டவுசர் மாத்திரம் அணிந்திருப்பார். வெளியே என்றால் கணுக்கால் தெரியும் அளவுக்கு ஒரு அழுக்கு வேட்டி. தோட்டத்து பண்ணை வீட்டில்தான் குடும்பத்துடன் வசிப்பார். மனைவி, ஒரு மகன் தான் குடும்பம்.
‍‍‍‍‍‍
பண்ணை வீடு என்றால் இங்கு இருப்பது போல் எல்லாம் அல்ல. ஓடு வேயப்பட்டிருக்கும். பத்துக்கு பத்து வெளியை இரண்டாக பிரித்திருப்பார்கள். பெருவெளி விளைச்சல் மூட்டைகளை அடுக்கி வைப்பதற்கு. மிச்ச சிறுவெளி குடும்பம் உறங்குவதற்கும் புழங்குவதற்கும். மகன் பள்ளிக்கு எல்லாம் போனானா என்று கூட ஞாபகம் இல்லை. மொத்த குடும்பமும் தாத்தா தோட்டத்துக்குத்தான் உழைக்கும். அவரை நான் பார்க்கும் போதெல்லாம் என்னிடம் அவர் கேட்கும் ஒரே விசயம், “சாமி… அய்யன் கால் பூரா வெடிச்சு பூட்டுது…. பட்டணத்துல இருந்து ஒரு செருப்பு மட்டும் அய்யனுக்காட்டு, சாமி வாங்கி குடேன்”
‍‍‍‍‍‍
என் ஞாபகத்தில் பண்ணப்பாண்டி பதிந்தது இப்படித்தான். ஏன் செருப்பு கேட்கிறார் என்றெல்லாம் தெரியவில்லை. எரிச்சல்தான் இருந்தது. இரண்டாம் வகுப்பு படிப்பவனிடம் செருப்பு வாங்கி கொடுக்க சொன்னால் எப்படி? இளநீர் வெட்டி கொடுங்கள் என கேட்டதற்கு இப்படியா?
‍‍‍‍‍‍
சென்னையில்தான் நான் படித்தேன். முழு ஆண்டு தேர்வு விடுமுறைக்கு ஊருக்கு செல்வோம். அப்பா எப்போதும் தோட்டம், காடு, கிராமம் என கூட்டி போய் ஏதேனும் வரலாற்று கதையை, கடந்த கால கதையை சொல்லுவார். அதனாலேயே பயணங்கள் ரசனையானவையாக எனக்கு பின்னாளில் மாறிப் போயின. அதனாலேயே என் பயணங்கள் செல்பிகள் அற்றவையாகவும் ஆகியிருந்தன.
‍‍‍‍‍‍
அதற்கு பின், காலம் கழிந்தது. நிறைய விஷயங்கள் தெரிய வந்தன. ராஜேஷ் குமார் நாவலிலிருந்து, ஜெயகாந்தனுக்கு மாறினேன். அப்படியே பெரியார் பக்கம் சென்றேன். பண்ணப்பாண்டி ஞாபகம் ‘சொட்டேர்’ என பின் மண்டையில் அடித்தது. அவர் அப்படி கேட்டதுக்கான வாழ்க்கை சூழல் என்னை நிலைகுலைய வைத்தது.
‍‍‍‍‍‍
பத்தாம் வகுப்பு விடுமுறையில் ஊருக்கு சென்றேன். நிலைமை தலைகீழாக மாறியிருந்தது. தாத்தா சொத்து, தகராறாகி, தங்கைகளுக்கு கொடுக்காமல் மகன் திருடிக்கொண்டு, அதை விற்று என தோட்டமே வேறொரு தினுசாக மாறி இருந்தது. அங்கு போனபோது பண்ணப்பாண்டி இல்லை. வேறொருவர் இருந்தார். அவர் தோட்டத்துக்கு உரிமையாளர். திரும்பி வந்தேன். அன்று விழுந்த குற்றவுணர்ச்சிக்கான விதை, வள்ர்ந்து, பெரிதாகி பார்த்தீனிய செடி போல் பெருகி, மனம் எங்கும் குத்தி ரணப்படுத்தி கொண்டே இருந்தது.
‍‍‍‍‍‍
எங்கு போயிருப்பார் பண்ணப்பாண்டி? ஊருக்குள் இருக்கவில்லை. அவன் மனைவி, மகன்? தெரியவில்லை. திடீரென ஒருவர் எப்படி ஊர் வரலாற்றிலிருந்து அழிக்கப்படுவார்? ஆனால் அவர்களுக்கு வரலாறே அதுதான். எனக்குத்தான் நிலைகொள்ளவில்லை. கைக்கு எட்டிய தூரத்தில் இருந்த ஒரு அநீதி. அதை தட்டிக்கூட கேட்க வேண்டாம். குறைந்தது அவர் கேட்டதையாவது செய்திருக்கலாம். என்னிடம் பணம் இல்லை என்றாலும் என் அப்பாவிடம் சொல்லி இருந்தால் செய்திருப்பார். அந்த வயதில் எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கிறேன் நான்?
‍‍‍‍‍‍
பண்ணப்பாண்டி என்னை நெருங்கும் போதெல்லாம் வியர்வை நாற்றம் தள்ளும். தூக்கி கொஞ்சுகையில் எல்லாம் வியர்வை பிசுபிசுக்கும். தாடி ரோமம் உறுத்தும். வாழை மட்டையை எடுத்து கொண்டு அடிக்கவெல்லாம் ஓடியிருக்கிறேன். அவரும் அடிவாங்குவது போல் நடித்து காட்டி சிரிப்பான். எத்தனை ஆதிக்க உணர்வு எனக்குள் அப்போது நிறைந்திருக்கிறது? என் அப்பா அப்படி கிடையாது. அம்மாவும் ஆதிக்க சிந்தனை கிடையாது. சொல்ல போனால், இருவரும் பட்டியலின சாதியர் வீட்டில் சாப்பிட்டதற்காகவே ஒதுக்கப்பட்டவர்கள். எனக்கு மட்டும் ஏன் அப்படி?
‍‍‍‍‍‍
என் பள்ளி.. படித்த பாடம்.. ஏதோ ஒரு சூழல் எனக்கு அந்த மேட்டுக்குடி மனப்பான்மையை அப்போது உருவாக்கியுள்ளது. ஆதிக்க சிந்தனை வளர்த்தெடுக்க முயன்று இருக்கிறது. மட்டையை கொண்டு அடிக்க ஓடும்போது கூட, அந்த வயதில் எனக்கு சாதி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வேலைக்காரன் என்ற சிந்தனை இருந்திருக்கிறதே! வேலைக்காரன் என்றால் கீழ்தான் என நினைக்க வைத்திருக்கிறதே! அந்த பிராயத்தையே நான் அருவருக்க தொடங்கி இருந்தேன்.
‍‍‍‍‍‍
பின்னர் ஊருக்கு அதிகம் போகவில்லை. இரண்டொரு முறை செல்வேன். இரண்டொரு நாட்களிலேயே திரும்பி விடுவேன். அதுவும் தோட்டம் இருந்த ஊருக்கு செல்லவே இல்லை. ஆனால் அவ்வப்போது சித்தப்பா, மாமா, சித்தி, அத்தை என சொல்லி வைத்தேன். பண்ண்ப்பாண்டி பற்றிய தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துங்கள் என்று. அப்படியும் ஏதும் தெரியவில்லை.
‍‍‍‍‍‍
தற்போது ரத்தாகவிருக்கும் கல்யாணம் நடந்த காலம். மாமியாரிடம் இந்த பொருட்டை சொன்னேன். பண்ணப்பாண்டி தங்களுக்கு தெரியும் என அநாயசமாக சொன்னார். மனம் பரபரப்பு அடைந்தது.தோட்டம் இருந்த கிராமத்திலிருந்து பண்ணப்பாண்டி சென்று பல ஆண்டுகள் ஆகிவிட்டனவாம். தற்போது ஆஸ்டின்பட்டி என்ற ஊரில் ஒரு ஆங்கிலக்கார கம்பெனியில் தோட்டக்காரராக வேலை பார்க்கிறாராம். மகனும் படித்து வேலை பார்க்கிறானாம்.
‍‍‍‍‍‍
பண்ணப்பாண்டியை பார்க்க வேண்டும் என மனம் துடித்தது. பார்த்து? செருப்பு வாங்கி கொடுக்கலாம். இல்லை ஷூ.. இல்லை விலை உயர்ந்த செருப்பு! சிறுபிள்ளைத்தனமாக இருக்குமே. சிறுவயதில் உருவான அகங்காரம் வளர்ந்த பிறகும் வளராமல் அங்கேயே தேங்கி போய்விடுகிறது பாருங்கள். பின், என்னதான் செய்வது? தெரியவில்லை. குற்றவுணர்ச்சியை போக்க கூட செய்ய விரும்பவில்லை. அப்படியெனில் அது சுயநலமாய் ஆகிவிடும். ஆங்கிலேயர் இருக்கும் சூழலில் செருப்பு வேண்டும் நிலையை எல்லாம் பண்ணப்பாண்டி தாண்டி இருப்பார். ஆங்கிலேயருக்கு சாதி கிடையாது அல்லவா? பண்ணப்பாண்டியை முதலில் பார்ப்போம் என சொல்லி அனுப்பினேன்.
‍‍‍‍‍‍
அடுத்த நாள். பல நாட்கள் கழித்து, பிரிந்து போன காதலியை மீண்டும் அடைய விரும்பி, சந்திக்கும் நேரத்தில் பொங்கி வழியும் பாருங்கள், அபரிமிதமான உணர்ச்சி பிரவாகம், அது நேர்ந்து கொண்டிருந்தது. என்ன பேசுவது என்றெல்லாம் பாவித்து பழகி கொண்டேன். மன்னிப்பு கேட்க வேண்டாம். நாடகமாக தெரியும்.
‍‍‍‍‍‍
பண்ணப்பாண்டி வரவில்லை. அவர் மனைவிதான் வந்திருந்தார். வேலை இருப்பதால் வரவில்லையாம். அவருக்கு இதெல்லாம் பாசாங்காக தெரிந்திருக்கலாம். நியாயம்தான். அவர் மனைவியை என் மாமியார் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. நான் வெளியே சென்று பேசினேன். அவருக்கு என்னை ஞாபகம் இருந்ததாக தெரியவில்லை. பண்ணப்பாண்டியை பற்றி விசாரித்தேன். குற்றவுணர்வை சொன்னேன். சிரித்தார். மகன் ஐடிஐ முடித்து வேலை பார்த்து கொண்டிருக்கிறானாம்.
‍‍‍‍‍‍
குற்றவுணர்வு இன்னும் அடர்ந்து கொண்டிருந்தது. பண்ணப்பாண்டிக்கு செருப்பு கிடைக்காத வரலாற்றின் ஒரு துளியாக நான் இருந்துள்ளேன். இதில் என் தவறு ஏதுமில்லை. ஆனால் என் மீது பொதிந்திருக்கும் வரலாற்றின் அசிங்கம் கூனிக்குறுக செய்தது. இந்த நொடியும் நான் வெளியே வந்துதான் பேச முடிந்திருக்கிறது. அவர்கள் உள்ளே நுழைய முடியவில்லை.
‍‍‍‍‍‍
அதனாலேயே பண்ணப்பாண்டி ‘வர மாட்டேன்’ என சொல்லி இருந்ததை நான் ரசித்தேன். எனக்கான அவமானமாக அதை நினைக்கவில்லை. என் வரலாற்றுக்கான அவமானமாக நினைத்து ஆனந்தம் கொண்டேன். ஒரு பக்கம் என் வரலாற்று சுமை குற்றவுணர்வை பெருக்கியபோதும், மறுபக்கம் அதற்கான எதிர்வினை என்னை கொண்டாட வைத்தது. என் அகங்காரம் நொறுங்கி, பண்ணப்பாண்டி முன்னால் நான் வீழ்ந்து கிடப்பதை விரும்பினேன். உன் காதல் எனக்கு வேண்டியதில்லை என உதறி செல்லும் காதலியின் கம்பீரத்தை வணங்குபவன் போல்!
‍‍‍‍‍‍
இன்னும் வணங்கி கொண்டிருக்கிறேன்.

RAJASANGEETHAN JOHN