குடியரசு தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா

நடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதி முடிவடைவதால், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது.

இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ், திரிணமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி, திமுக எம்.பி. திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட 17 கட்சிகளின் பிரதிநிதிகள்  பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு கூட்டறிக்கையை ஜெய்ராம் ரமேஷ் வாசித்தார். அதில், ‘குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவை தேர்வு செய்துள்ளோம். அவருக்கு வாக்களிக்க வேண்டும் என அனைத்து கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

பீகாரைச் சேர்ந்த 84 வயது யஷ்வந்த் சின்ஹா, ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர். மத்திய அரசில் நிதி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 2018-ல் பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார். 2021 மார்ச்சில் திரிணமூல் காங்கிரஸில் இணைந்தார். அக்கட்சியின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார். எதிர்க்கட்சிகளின் நேற்றைய கூட்டத்துக்கு முன்பாக திரிணமூல் கட்சியில் இருந்து யஷ்வந்த் சின்ஹா விலகினார்.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும். யஷ்வந்த் சின்ஹா 27-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Read previous post:
0a1e
O2 – விமர்சனம்

நடிப்பு: நயன்தாரா, ரித்விக், பரத் நீலகண்டன், முருகதாஸ், ஆர்.என்.ஆர்.மனோகர் மற்றும் பலர் இயக்கம்: ஜி.எஸ்.விக்னேஷ் தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இசை: விஷால் சந்திரசேகர் ஒளிப்பதிவு: தமிழ்

Close