அரிசி திருடியதாக அடித்து கொல்லப்பட்ட மதுவின் வீட்டில் கேரள முதல்வர்!

கேரள மாநிலத்தில், அரிசி திருடியதாக ஒரு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட பழங்குடி இன இளைஞர் மதுவின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன் இன்று (மார்ச் 2) நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அட்டபாடி அருகே முக்காலியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் மது. இவர் குறும்பர் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். கடந்த வாரம், மது அப்பகுதியில் உள்ள கடையில் அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை திருடிவிட்டதாகக் கூறி ஒரு கும்பல் அவரை அடித்து கொலை செய்தது.

மதுவின் கைகள் கட்டப்பட்டு, முகத்தில் ரத்த காயத்துடன் அவர் கண்ணீர் விட்டு அழுதவாறு இருந்தார். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவுடன் செல்பி எடுத்து இணையத்தில் பரப்பினர். அதன்பின் போலீசார் வந்து மதுவை அழைத்துச் சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பசிக்காக உணவு திருடிய மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரை மனிதநேயமில்லாமல் அடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கல்வியறிவு 100 சதவீதம் இருக்கும் கேரள மாநிலத்தவர் மனிதநேயம் இல்லாமல் நடந்து கொண்டதும், பழங்குடியின மக்களுக்கு மாநிலத்தில் இருக்கும் பாதுகாப்பு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து உயிரிழந்த பழங்குடியின இளைஞர் மதுவின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார்.

இந்நிலையில், அட்டபாடியில் இருக்கும் அந்த இளைஞனின் வீட்டுக்கு முதல்வர் பினராயி விஜயன், சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா உள்ளிட்டோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.

அப்போது மதுவின் தாய், சகோதரி, சகோதரர் ஆகியோரிடம், “மதுவை கொன்ற குற்றவாளிகள் அனைவரும் விரைவில் தண்டிக்கப்படுவார்கள்” என் முதல்வர் பினராயி விஜயன் உறுதியளித்தார்.

இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:

மதுவை அடித்துக் கொலை செய்ததாக இதுவரை 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மதுவை கொலை செய்த அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்கும், தண்டனை பெற்றுத் தரப்படும் என்று அவரின் பெற்றோர், குடும்பத்தாரிடம் உறுதி அளித்தேன்.

மேலும், பழங்குடியின மக்கள் வாழும் பகுதியில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் என்ன வகையான திட்டங்கள் வகுக்கலாம் என்று ஆலோசிக்கப்படும். பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் சுகாதாரமான குடிநீர், போதுமான உணவு, வேலைவாய்ப்பு கிடைக்க அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும். இதில் மாவட்ட ஆட்சியர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

ஆண்டில் 200 நாட்களாவது பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் திட்டங்கள் தொடங்குவது குறித்து அரசு முடிவு செய்துள்ளது. இந்த பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள், மதுபோதைக்கு அடிமையாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த பழக்கத்தில் இருந்து இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

Read previous post:
0a1c
Kaala Movie New Stills

Kaala Movie New Stills

Close